திங்கள், 19 மே, 2014

கூடங்குளம் - ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’


கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் பணி செய்தபோது தினமணி நாளிதழில் வாசகர் கருத்துக்கள் பகுதியில் நான் எழுதிய விமர்சனம்!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 13 ஆயிரத்து, 615 கோடி ரூபாய் செலவில், 2,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக இதன் பணிகள் நடந்து, இன்னும் ஒரு மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த ஆட்சியின்போது யாருமே கவனிக்கப்படாமலிருந்த இப்பிரச்னை ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் அதன் பாதிப்பால் அங்குள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துக்களும் யோசிக்க வைத்திருக்கின்றன என்பதே உண்மை. இது ஏதோ இந்த ஆட்சி வந்தபின்தான் எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்ற வதந்தியில் உண்மை இல்லை. வெகுநாளாக புகைந்து கொண்டிருந்த விவகாரம் இப்போது விசுவரூபம் எடுத்திருக்கிறது.

தவிர்க்க முடியாத மின் பற்றாக் குறையினால் மத்திய அரசின் முடிவை மாநில அரசு ஆதரித்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு இதைக் கொஞ்சம் அடக்கி வாசிக்க எண்ணிய மாநில அரசு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த எண்ணி ஒரு குழுவை அமைத்து புதுதில்லிக்கு அனுப்பி ஒரு சிறிய நாடகத்தை அரங்கேற்றியது. 

இந்தக்குழு தில்லியிருந்து திரும்பும் முன்பே கூடங்குளம் அணுமின்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டே தீரும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பேட்டியளித்தார். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றுதான் கூறுகிறார்களே தவிர, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாருமே வாய் திறப்பதில்லை.


இந்தக் கூடங்குளம் அணுஉலைத்திட்டம் தொடங்கப்பட்டபோது தினமணி நாளிதழில் 21.12.1988 அன்று ஒரு தலையங்கம் வெளியானது. இந்தத் தலையங்கத்தை ஒட்டி வாசகர் கடிதங்கள் பகுதியில் பலரின் கருத்துக்களும் வெளிவந்தது. 05.01.1989 அன்று வெளியான வாசகர் கடிதம் பகுதியில் எனது கருத்தும் வெளிவந்தது. அப்போது நான் பெங்களூரில் பணி செய்து கொண்டிருந்தேன்.

உங்கள் பார்வைக்காகவும் எனது கடந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும் நிகழ்வாகவும் இதை இங்கே பதிவாக்கியிருக்கிறேன்.

'செவிடன் காதில் ஊதிய சங்கு'


தலையங்கத்தில் கண்டுள்ளபடி காந்தி காட்டிய வழியில் சாத்வீகப் போராட்டம் ஒன்றுதான் வழி. இக்கருத்தை சுற்றுச்சூழல் நிபுணர் சுந்தர்லால் பகுகுணா முன்பே கூறினார். இவரை இதுவரை சமுதாய நலனில் அக்கரை காட்டும் அமைப்புகள் சந்தித்தனவா என்பது கேள்விக்குறியே! மேலும் நெல்லை மற்றும் குமரி மாவட்ட மக்கள் இன்னும் இந்த அணுஉலையினால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை.


அதேபோல் கர்நாடகத்தில் அமையவிருக்கும் 'கைகா' அணுமின் நிலையத்திற்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்காதது அந்த மாநில மக்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. அணுத்துறைத் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் மைசூரில் பேசும்போது, நான் பழைய மைசூர்க்காரன்’, உங்களுக்குத் துரோகம் செய்வேனா என்று அரசியல்வாதியைப் போல் பேசியிருக்கிறார். அவரே பெங்களூரில் நடந்த பயிலரங்கத்தில், அணுஉலை விபத்து உண்டானால் எத்தனை கிலோமீட்டருக்கு மக்கள் வெளியேற வேண்டும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்குத் தெளிவான பதில் தரவில்லை.

உலகில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் தங்கள் நாட்டில் அணு உலைகளினால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து 1980 முதல் அணுஉலைக் கொள்கையை மாற்றிக் கொண்டு வருகின்றன என்ற செய்தி இந்திய விஞ்ஞானிகளை எட்டாமல் இருக்கின்றதா? இல்லை காதில் போட்டுக்கொள்ளவில்லையா?

சுற்றுப்புறச் சூழலுக்குக் காடுகள் மிகப்பெரிய அளவில் நமக்கு உதவுகின்றன. இக்காடுகளை அழிப்பதே சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. அதை அழித்து (சுமார் 1,500 ஹெக்டேர்) கைகா அணுமின் நிலையம் அமைத்தால்... நினைக்கவே பயமாய் இருக்கிறது.

முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் பெங்களூர் பயிலரங்கத்தில் பேசும்போது, அணு மின்நிலையங்கள் மீது பர்தா போட்டது போல அணுசக்திச் சட்டம், தகவல்கள் வெளியாவதைத் தடுக்கிறது. தேவையான விவரங்களை வெளிவிடாத போது விவாதங்களால் என்ன பயன் என்று கேட்டார். எனவே விவாதத்தை விடுத்து மக்கள் சாத்வீகப் போராட்டதில் இறங்குவது வேறு வழியில்லாமையால் அல்ல; இதுதான் சிறந்த வழி என்பதால்தான்.
-         
           எம். ஞானசேகரன்,
பெங்களூர் 57. 
21.12.1988

4 கருத்துகள்:

  1. பெயரில்லா19 மே, 2014 அன்று 12:41 PM

    வணக்கம்
    புதிய மத்தியஅரசு என்னதான் செய்யப்போகிறது பொறுமையுடன் பார்க்கலாம்...அருமையாக சொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஞான சேகரனாய் இருந்த நீங்கள் கவிப்ரியன் ஆகி விட்டீர்கள் ,ஆனால் மக்கள்தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி ரூபன்! பார்ப்போம் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை! சொதப்ப மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருக பகவான்ஜி! கவிப்ரியனாக மாறவில்லை நான். அது எனது மற்றொரு பெயர் அவ்வளவுதான். மக்கள் நிறைய மாறியிருக்கிறார்கள். ஆனால் தெளிவாகவில்லை.

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!