இமை இடித்து விழி விழித்திருக்கிறது!
மூச்சுக் காற்றே முகத்தை எரித்திருக்கிறது!
கோட்டை மதில்களே கொடிமரத்தைக் குறி வைத்திருக்கின்றன!
இந்திரா காந்தி இரத்த வெள்ளத்தில் இடித்து
வீழ்த்தப்பட்டிருக்கிறார்.
தேசத் தந்தையைக் காப்பாற்ற இயலாத நம்மால்
தேசத்தின் தாயையும் காப்பாற்ற முடியவில்லை. கல் புதைந்தால் கட்டிடம்! விதை விளைந்தால் விளைச்சல்! இரத்தத்துளி சொட்டுகிறபோது
இமாலயப் புரட்சி! இந்திராவே கொலைக்களப்பட்டபோது…
இந்திரா காந்தியோடு உடன்பட முடியாதவர்களைக்
கூட அவரது மரணம் உலுக்கிவிட்டது. இன்று நகம் கிழிந்த சதையாக நாடு வேதனை நெருப்பில்
வீழ்ந்து கிடக்கிறது!
1948-ல் மகாத்மா வீழ்த்தப்பட்டார்.
1984-ல் மாதரசி கொல்லப்பட்டிருக்கிறார். எட்டும்
நாலும் இடம் மாறி இருக்கிற இந்த ஆண்டுகளில் மதவெறிக்கு ஒரு மகத்தான தலைவி களபலியானதுதான்
நமது கண்களைக் குளமாக்குகிறது!
நாம் மதவெறியர்கள். நாம்
பெண்களைப் போற்றாத பேயர்கள். நமது சுதந்திரம் அர்த்தமில்லாதது.
நாம் போலிகள்; பொய்யர்கள்; போக்கிரிகள் என்பதை இந்திரா காந்தியின் மரணம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இந்திரா காந்தியின் எல்லா நடவடிக்கைகளொடும்
நாம் எப்போதும் உடன்பட்டவர்கள் அல்லர். இருந்தாலும் கருத்து வேறுபாட்டை கழுத்தை அறுத்துத்தான்
தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், நம்மை நாம் ஆளுகிற தகுதி கூட
நமக்கு எதற்காக என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது!
ஒரு குருச்சேத்திரத்தில் வீழ்த்தப்பட்டிருக்கிற
இந்திய மாதாவுக்கு ‘தாய்’ தனது கற்பூர வணக்கத்தைக்
காணிக்கையாக்குகிறது! இற்றுப்போன லாடத்துண்டுகள் இடித்து இமயம்
வீழ்ந்ததில்லை.
இந்திரா ஒரு இமயம்!
இந்திரா இந்தியாவின் இதயம்! இன்று
அவர் இல்லை. எனினும் என்றும் இருக்கும் அவர் காண விரும்பிய இந்தியா!
(1984 -ஆம் ஆண்டு 'தாய்' வார இதழில் இந்திரா காந்தி படுகொலையை ஒட்டி 11.11.1984 அன்று எழுதப்பட்ட தலையங்கம். அப்போது இதன் ஆசிரியர் வலம்புரி ஜான்.)
வாழ்ந்த மனிதர்களில் வலம்புரி ஜான் மிக மிக ஆச்சரியமான நபர். அவர் அளவுக்கு புத்திசாலி என்பவர்களை இங்கே சுட்டிக்காட்டுவது மிகவும் கடினம். ஆங்கில மற்றும் தமிழ் மொழி ஆளுமை மிக்கவர்.
பதிலளிநீக்குஎன் மகளுக்கு இந்திராவின் பெயரில் உள்ள வார்த்தையைத் தான் அவர் நினைவாக வைத்துள்ளேன்,
ஆம் ஜோதிஜி அவர்களே! வார்த்தைச் சித்தர் என்ற பெயர்கூட அவருக்கு உண்டு. நல்ல எழுத்தாற்றல் மிக்கவர். அப்போது ஜெயலலிதாவுக்கு எழுதிக்கொடுப்பதெல்லாம் இவர்தான் என்று ஒரு பேச்சு உண்டு. எல்லா திறமைகள் இருந்தும் அரசியலில் மேலே வராமலேயே போய்ச்சேர்ந்துவிட்டார்.
பதிலளிநீக்குமகளுக்கு இந்திராவின் பெயரா?! நல்லது. இந்திரா அரசியலில் எப்படியோ? ஆனால் நெஞ்சுரமும் துணிச்சலும் மிக்கவர்.