வியாழன், 15 நவம்பர், 2012

எத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்?



பால் நிறத்துப் பனிக்கும் பௌர்ணமிக்கும்
பிறந்த அன்பு மகளே, மல்லிகை அன்னமே
கால்நடைகள் கன்று ஈன்றதும்
அடைக்கோழி முட்டை பொரித்ததும்
பெட்டை என்று பெருமைப்பட்ட
உன் பெற்றோர் முகத்தில்
ஒரு மனிதக் குமரியாகப் பூமியின் வயிற்றில்
உன் பாதம் பட்டதும்
பிளேடு கிழித்ததைப்போல
பீதி ரத்தம் ஓடியது ஏன்?

பெண் என்பதால் நீ - பூப்படைகிறாய்,
கன்னியாகிறாய் பத்தினியாகிறாய்,
வேசியுமாகிறாய், விதவையுமாகிறாய்.
எனில் இவை எவற்றுக்கேனும்
ஓர் ஆண்பால் பெயர் உண்டா?
சிவகாசியில் நீ தீக்குச்சியானாய்,
சிவப்பு விளக்குகளில் கவர்ச்சித் திரியானாய்,
சேற்று வயலை ஈரமாக்கியது
உன் பிஞ்சு ரத்தமும்தான்,
ஆலைச்சக்கரங்களில் ஆரக்காலும் நீயே.

பின் ஏனடி இப்படி ஆனாய்?
புன்னகை புதைத்த கல்லறையாக
பூக்களின் பூக்களின் சுடுகாடாக,
ஏனடி ஏனடி இப்படி மாறினாய்?
நீ துலக்கிய பாத்திரம் தூய்மையானது,
நீயோ அழுக்கானாய்!
நீ பெருக்கிய வீடு சுத்தமானது,
நீயோ அசுத்தமானாய்!
நீ பற்ற வைத்த நெருப்பு எரிந்தது,
நீயோ இருட்டில்!

கோலுசுகள் போட்டனர்;
உன் கால்கள் நொண்டியாயின.
தோடுகள் மாட்டினர்;
உன்  காதுகள் செவிடாயின.
வளையல்கள் மாட்டினர்;
உன் கைகளில் விலங்குகளாக.
மூக்குத்தி குத்தினர்;
எத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்?

மூக்கணாங் கயிற்றை எதிர்த்து
மாடே திமிரும் என்றால்,
பெண்ணே நீ எப்போது திமிறப் போகிறாய்?
தலை நிமிரப்போகிறாய்?

9 கருத்துகள்:

  1. உருக்கமான கவிதை. மனதைப் பிசைகிறது.

    பதிலளிநீக்கு
  2. மனம் கனக்கச் செய்யும் கவிதை என்றாலும்
    நிதர்சனமான கவிதை....
    சுற்றிப்போடப்பட்ட கருவேலம் வேலிகளை
    தகர்த்தெறிந்து வரவேண்டும் பெண்கள்....

    பதிலளிநீக்கு
  3. பெண்களின் அணிகலன் களே விலங்காகிறது உண்மைதான்! இப்போது பெண் குழந்தைகள் என்று பேதம் பார்க்கும் பெற்றோர்கள் குறைந்து வருகிறார்கள். நல்ல கவிதை!

    பதிலளிநீக்கு
  4. வாங்க திரு. பழனி.கந்தசாமி அவர்களே! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சரியாகச் சொன்னீர்கள் மகேந்திரன் அவர்களே! அப்படி வெளியே வரும் பெண்களும் அந்த சுதந்தரத்தை காப்பாற்ற வேண்டும்.

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி உஷா அன்பரசு அவர்களே!

    தற்போது பேதம் பார்க்கும் பெற்றோர்கள் குறைந்திருப்பது என்னவோ உண்மைதான். அணிகலன்கள் எல்லாம் ஆண்களுக்காகவே என்பதை உணர்ந்தும் அதில் மட்டும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை. pls visit my site:http://newsigaram.blogspot.com/2012/11/purattaadha-pakkangal-46-11.html#.UKZbDOS-pAd

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!