சனி, 18 பிப்ரவரி, 2012

மறக்க முடியாத மெட்ராஸ்


 சென்னை நகர வீதிகளும் டிராம் வண்டிகளும்
எதேச்சையாக தினத்தந்தி நாளிதழை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட செய்தி இது. அந்தக்கால சென்னையில் டிராம் வண்டிகள் ஓடிய கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார் பார்த்திபன். நமக்கெல்லாம் அந்த அனுபவம் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் மெட்ரோ ரயில் அனுபவம் கிடைக்க இருக்கிறது.
பழைய அனுபவங்களை அசைபோடுவதில் இருக்கும் சுகமே அலாதியானது இல்லையா? டிராம் வண்டிகள் சென்னையில் ஓடியது பற்றிய அந்தக் கட்டுரை உங்களுக்காக….

மவுண்ட் ரோடில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக்கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ் வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் இந்த டிராம் வண்டிகள். மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகள் மாங்கு மாங்கென்று ஒடி இருக்கின்றன.
1877-ல் தான் மெட்ராஸ் வாசிகளுக்கு டிராம் வண்டிகள் அறிமுகம் ஆனது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892-ல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்தக் கம்பெனி, Messers Hutchinson & Co என்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் மூன்று ஆண்டு கடின உழைப்பிற்குப் பிறகே எலக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895-ல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலக்ட்ரிக் டிராம்கள் இயங்கின. இந்தியாவிலேயே எலக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்தச் சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. அமெரிக்காவில் கூட இங்கு அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகே டிராம்கள் ஓடத்தொடங்கின.
எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையைத் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6-ந்தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்துபோல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கட் வாங்கிக் கொள்ளவேண்டும்.
ஓட்டுநரும் கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள்.  திடீரென டிக்கட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கட் இருக்கிறதா என்று பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே தாவி விடுவார். டிக்கட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கட் வாங்கிவிட்டால் எங்கு வேண்டுமானால் செல்லலாம். மாத சீசன் டிக்கட் முறைகளும் அமுலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10-ம் வசூலிக்கப்பட்டது.
சென்னையில் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, மயிலாப்பூர், ராயப்பேட்டை என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச்செல்லலாம். துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.


அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்படவில்லை. அதுவும் இல்லாமல் பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வண்டிகளுக்கான மின்சாரம் பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்திலிருந்து தருவிக்கப்பட்டது. மெட்ராஸில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நாள்தோறும் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.
டிராம் வண்டிகள் மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம் எலக்ட்ரிக் டிராம் வண்டிகளை Conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்கான சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதன் நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்குமேல் வயர்கள் போட்டு, அதிலிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ளும் முறைக்கு ஒப்புக்கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.


இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900-ல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலக்ட்ரிக் கன்ஸ்ட்ரஷன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி 4 ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. பின்னர் 1904-ல் மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கைமாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சநாள் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனல் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953-ம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராஸின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப்போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இயக்கவும் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள் இன்று நமக்கெல்லாம் கற்பனைப் பொருளாக மாறிப்போய்விட்டதுதான் காலத்தின் கோலம்!
மறக்க முடியாத நினைவுகளுடன்,

4 கருத்துகள்:

  1. அன்றைய சென்னை அப்படியே கண்முன் தெரிகிறது..

    பதிலளிநீக்கு
  2. ayyaa pagirvukku mikka nanri...


    palaiya chennai photo paarthen...superaa iruthathu...


    ayya indrum kolkatta thavil makkal payam seigirargal endru antha oorup paiyan chonnanga..romba cheap aam..

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலை! ஆம், கொல்கொத்தாவில் இப்போதும் டிராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன, மிக மலிவான கட்டணத்தில்!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!