புதன், 23 செப்டம்பர், 2015

கோவிலுள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்!

"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" - இந்தப் பொன் மொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதென்னடா 'கோவில் உள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்கிறேனே என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம் அனுபவம்தான். என்னைப்போல பிரச்னையை எதிர்கொண்டவர்களுக்குத்தான் தெரியும் இதன் உண்மை நிலவரம்! கடவுள் பக்தி மிகுந்தவர்கள் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்.

ஒடிஸாவை விட்டு சென்ற மாதம்தான் மத்தியப்பிரதேசம் வர நேர்ந்தது. இப்போதைய நிலவரப்படி ஆறு மாதங்கள் இங்கிருக்க வேண்டும். அப்புறம் எந்த ஊரோ தெரியாது. வந்த புதிதில் நிறுவனம் அளித்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். மாதக்கணக்கில் தங்கியிருக்க அங்கே அனுமதி இல்லை என்பதால், நிறுவனமே எங்களுக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, அங்கே தங்கிக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். பக்கத்திலேயே ஒரு கோவில்!

கோவில் என்றாலே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும்தானே. வருகிறவர் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நேரம் போவது கூட தெரியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கோ 'இவனுங்களுக்கு வேற இடத்துல வீடே கிடைக்கலையான்னு' என்று கோபம். 

 எங்கள் கிராமத்து பிள்ளையார் கோவில்

சுமார் 30 வருஷத்துக்கு முன்னால எங்க கிராமத்துல கோவில் திருவிழான்னா ஊரே கோலாகலமா இருக்கும். ஊர்ல திருவிழாங்கறதுக்கு அறிகுறி ஒண்ணு எல்லோர் வீட்டு முன்னாடியும் சாணத்தால் மெழுகி கோலம் போட்டு, வாசற்படிகளில் மாவிலைத்தோரணம் கட்டி ஊரே மங்கலகரமாக இருக்கும். இரண்டாவது, விடியற்காலை 4 மணியிலிருந்து ஒலி பெருக்கியில் சினிமாப் பாடல்கள், பக்திப்பாடல்கள் என்று கலந்து கட்டி இரவு 10 மணி வரைக்கும் இடைவிடாது அலறிக்கொண்டே இருக்கும். இதில் எனது பங்களிப்பும் கனிசமாக இருக்கும். காரணம், அப்போதைய இளவட்டங்களில் நான் இளைஞர் நற்பணி மன்ற தலைவர், செயலாளர் போன்ற பொறுப்புக்களில் இருந்ததே.

அப்படி ஒலிபெருக்கி அலறிக்கொண்டிருந்தாலும் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல்தான் ஊர் மக்கள் இருப்பார்கள். அதாவது அது ஒரு தொல்லையாகத் தெரியாது. காரணம் எப்போதோ ஒரு முறை கொண்டாடப்படும் ஊர்த்திருவிழா என்பதால் அதை மகிழ்ச்சியுடனே அனுபவித்தார்கள்.

 பினா - கட்ரா மந்திர்
இப்போது அந்த மாதிரி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. அதைப் பயன்படுத்தவும் தடை வந்து பல வருடங்களாகிறது என நினைக்கிறேன். நகரமல்லாத குக்கிராமங்களில் இருக்கலாமோ என்னவோ?  நாகரிகம் கருதி, அரசியல் மேடை, திருமண மண்டபங்கள், கோவில் திருவிழாக்கள் என எல்லா இடங்களிலும் பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டிகளை (SOUND BOX) வைப்பதுதான் இப்போது வழக்கம்.

 

ஆனால் இப்போது நாங்கள் குடிவந்திருக்கிற வீட்டுக்கு அருகே உள்ள கோவிலில் அந்த மாதிரி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை திசைக்கு ஒன்றாக வைத்து அலற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவில் என்றால் அமைதி, பக்தி என்றால் இறைவனை நினைத்து மனமுருக பிரார்த்திப்பது என்பதுதான் இத்தனை வயதில் எனக்கேற்ப்பட்ட புரிதல். இத்தனைக்கும் எனக்கும் கடவுளுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் பெரியார் புத்தகங்களின் சகவாசம்.

கோவிலுக்கு வந்து அமைதியாய் பிரார்தனை செய்பவர்களே இங்கு (BINA - MADHYA PRADESH) இல்லை போலிருக்கிறது. அலுவலகத்திலிருந்து வந்து சற்று ஓய்வெடுக்க வாய்யபே இல்லை. ஒலிபெருக்கியின் துணையோடு பூஜை, பஜனை என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே பேசிக்கொள்ளவே முடியாது. உடல் நிலை சரியில்லாதவர்கள், படிக்கின்ற மாணவர்கள் என எல்லோருக்கும் சிரமம்தான். ஆனால் இவர்களோ சகஜமாக சகித்துக்கொள்கிறார்கள்.


விஷேஷ நாட்களில் ஒரு குறிப்பிட்ட நேரம் என்றால் பரவாயில்லை. தினமும் இரவு பனிரெண்டு மணி வரை இந்த பஜனை சத்தமும், அலறல் சத்தமும் ஓயவே ஓயாது. என்னதான் செய்வது என்று புரியவில்லை. காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டாலும் சத்தம் மண்டைக்குள் இறங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. இரவு நிம்மதியாய் தூங்கினால்தானே மறுநாள் வேலைக்குப் போக முடியும்! சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? இப்படிப்பட்ட காட்டுக்கத்தலில்தான் கடவுள் மனமிறங்குவாரா என்ன? இதைப்பற்றி எல்லாம் இங்கு வாய் திறக்கவே முடியாது. எல்லாரும் பக்தியில் ஊறிய பழங்கள்.


இப்படி பக்தி முத்திப் போவதால்தான் பிரேமானந்தாக்களும் நித்தியானந்தாக்களும் உருவாகி, சுகபோக கார்ப்பரேட் கோவில் முதலாளிகளாக வலம் வருகிறார்கள். சமீபத்தில் மகாராட்டிராவில் 'ராதேமா' என்ற போலி பெண் சாமியாரின் லீலைகளும் இப்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியிருக்கின்றன. (பொது நிகழ்ச்சிகளில் 'ரெக்கார்டு டேன்ஸ்' ஆடிக்கொண்டிருந்தவரை முன்னேற்பாட்டுடன் ஒரு கும்பல் மைடையிலேயே சாமியாடவைத்து, பாதபூஜை செய்யத்தொடங்கி, மக்களும் மதி மயங்கி ஒவ்வொருத்தராக காலில் விழ, பத்தே ஆண்டுகளில் 'ஸ்டைலிஷ் ராதேமா'வாக மாறிவிட்டார்).  


ஒடிஸாவில் கூட ஒரு பாபாவும் இப்படி மாட்டியிருக்கிறார். (பெயர் சாரதி பாபா). இந்த ஒடிஸா பாபா கிருஷ்ண ஜெயந்தியன்று பால கிருஷ்ணனாக மாறி குழந்தை போல தரையில் தவழ்ந்து சென்று கோவிலுக்கு வந்திருக்கிற ஒவ்வொரு தாய்மார்களின் (தாய்ப்)பாலை குடிக்கும் நிகழ்ச்சி பற்றிக்கூட இப்போது செய்தி கசியத் தொடங்கியிருக்கிறது. நமது தாய்மார்களோ கிருஷ்ண பகவானே குழந்தையாய் பாபா வடிவில் வந்து பால் குடிப்பதாய் நினைக்கும் மடத்தனத்தை என்னவென்று சொல்வது?!

10 கருத்துகள்:

  1. அடச்சே ,நினைக்கவே கூசுதே ..இப்படியுமா மூடத்தனம் ?

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் பகவான்ஜி! பதிவின் தலைப்பையே இந்த விஷயத்தையொட்டி வைத்திருந்தால் என் பதிவுக்கு கூட்டமோ கூட்டம் கூடியிருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. வாசிக்கவே திகிலாக இருக்கிறது. ஏன் மக்கள் இப்படி ஒரு மூடநம்பிக்கையில் திளைத்துப் போய் மூளையை காயப் போட்டு ஆறவைத்து இருக்கிறார்களோ தெரியவில்லை.

    இப்படியும் மக்கள் இருக்கக் கூடுமோ என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது. இது வரை அறிந்திராத ஒரு விடயத்தை சிரத்தையோடும் சிறப்போடும் சொல்லி விட்டீர்கள். புதிய விடயம் ஒன்றை இன்று அறிந்து கொண்டேன்.
    நல்ல பொருத்தமான தலைப்பும் போட்டிருக்கிறீர்கள். எப்படி மரபுகளும் பண்பாடும் திரிந்து இன்னொன்றாய் உருமாறி உருவாகி விடுகிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கவி.

    பதிலளிநீக்கு
  4. @மணிமேகலா வேதனையான விஷயம்தான் மணிமேகலா அவர்களே. கொஞ்சம் கூட சிந்திக்கும் திறனில்லாத மக்கள். கடவுளை தரிசிக்கும் ஆவலில், கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரியும் கயவர்களின் காலிலெல்லாம் விழத்தயாராகி விடுகிறார்கள் நம் மக்கள். இப்படி கடவுள் பெயரைச் சொல்லி மூளைச்சலவை செய்வதெற்கென்றே இவர்கள் ஒரு கூட்டத்தையே பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல அலசல். கடவுளின் (IN THE NAME OF GOD) பெயரால் எதைச் செய்தாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்தான். எல்லா மதத்திலும் இடத்திற்கு ஏற்ப இதுமாதிரி உண்டு.

    பதிலளிநீக்கு
  6. @தி.தமிழ் இளங்கோ மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா. மக்களின் பலவீனம் கடவுள். அந்தக்கடவுள் பெயரைச் சொல்லித்தான் இவர்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்! மடத்தனத்திற்கு எல்லையில்லை! ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் இருக்கும்வரை! நன்றி

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!