காலையிலேயே எல்லாரும் தயாராகி, ஒன்பது
மணிக்கெல்லாம் எக்ஸ்போவுக்கு சென்றோம். ஒன்பது மணிக்கு மேல்தான்,
அனுமதிச் சீட்டு
வழங்குவதாகச் சொன்னதால், குறிப்பிட்ட நேரத்திற்கு
அங்கு சென்று விட்டோம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள்
எங்களுக்கு முன், 'க்யூ'வில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அனுமதிச்சீட்டு பெற்று உள்ளே நுழைந்தோம்.
எங்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் பின்தங்கினாலும், தேடிப் பிடிப்பது சிரமம். ஒரு நல்ல யோசனை தோன்றியது . எங்கள் குழுவில்
உயரமாகவும், விவரம்
தெரிந்தவராகவும் உள்ள ஒருவர், எங்களுக்கு முன் கையில் ஒரு
பத்திரிகையை உயர்த்திப் பிடித்தவாறு செல்ல வேண்டியது; மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்து செல்வது
என்று முடிவு செய்தோம். இந்த முடிவுப்படி
எங்கள் குழுவில்
உயரமாகவும், விவரம் புரிந்தவருமான சித்ரா கிருஷ்ணசாமி தலையில், இந்தப் பொறுப்பு விழுந்தது.
அவர் முன்னே செல்ல,
நாங்கள் பின் தொடர்ந்தோம். சுற்றிலுமுள்ள
காட்சிகளைப்
பார்க்காமல்,
அவரது கையையே பார்த்துக்
கொண்டு நடப்பதற்கு, எதற்கு எக்ஸ்போவுக்கு வர
வேண்டும் என தோன்றியது. அதனால் நடந்து கொண்டிருக்கும் போதே, எங்களைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்து நின்று விடுவோம். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் அழைப்பர்; நாங்கள் எங்களைச் சேர்ந்த மற்றவர்களை அழைப்போம். என்னைப்
பார்க்க விடாமல் அழைத்த சிலரிடம் கடிந்து கொள்ளவேண்டியிருந்தது.
நான் என் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ள முடிந்தது. பலருக்கு அது முடியவில்லை அவ்வளவுதான்! நாகேஷோ அல்லது அசோகனோ சும்மா இருப்பார்களா? என்னோடு
சுற்றித்திரிந்த இவர்கள் அவ்வப்போது காணாமல் போய் வேறு இடத்தில் எங்களைச் சந்திப்பர்.
அப்படிச் சந்தித்த ஓர் இடத்தில் அவர்களோடு தமிழகக் கலைஞர்கள் சிலரையும் கண்டேன்.
இயக்குனர் பி.எஸ். ரங்காவிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் ஹரி என்பவர் அவர்களில் ஒருவர். அவரைக் கண்டதும் என் உள்ளத்தில் ஏதேதோ கற்பனைகள் உதயமாயின. 'எத்தனை நாட்கள் எக்ஸ்போவில் தங்குவீர்கள்?' என்று, ஆர்வத்தோடு கேட்டேன். 'இரண்டு, மூன்று நாட்கள் தங்குவேன்...'என்று, அவர் சொன்ன பதில், எனக்கு இனிப்பான செய்தியாக இருந்தது.
என் எண்ணம் இதுதான்... 'மிச்சல், ஏறி' என்ற, இரண்டு ஒளிப்பதிவு கருவிகளை நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். ஹரி சம்மதித்தால் ஒரே சமயத்தில் இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தலாமே! இதுதான் என் ஆசை. இயக்குனர் நீலகண்டனிடம் சொன்னேன். அவர் ஹரியிடம் கேட்டார். அவரும் மகிழ்ச்சியோடு சம்மதித்தார். அவரை விட எனக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் ஒரு பைசா செலவு செய்யாமல் ஒரு ஒளிப்பதிவாளரை ஏற்பாடு செய்துவிட்டேனே!
எழுத்தாளர் மணியன், பத்திரிகைகாரர்களுக்கான,
'பாஸ்'
வாங்கி வந்தார். இந்த பாஸ்
வைத்துக்கொண்டிருப்பவர் எந்த அரங்கத்துக்குள்ளும் தாராளமாகப் போகலாம். வரிசையில்
நின்றுதான் போகவேண்டும் என்பதில்லை. வி.ஐ.பி. போகும் வழியில் எந்தக் கட்டுப்பாடும்
இல்லாமல் நாங்களும் போகலாம். சில அரங்குகளை, அந்த, 'பாஸ்' துணையுடன்
பார்த்தோம்.
அவ்வாறு பார்த்து வரும்போது ரஷ்ய நாட்டின் அரங்கில் படம் எடுக்க முடிவு செய்தோம். ஆனால் அனுமதி கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்தபோது 'முயன்று பார்ப்போம்...' என்று கூறிய மணியன், உடனே, தன் உடன்பிறப்பான பையையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். அவருடைய கையை வேண்டுமானாலும் எங்காவது மறந்துவிட்டுப் போவாரே தவிர அந்தப் பையை மட்டும் விட்டுப் போகமாட்டார்.
முதலில், ரஷ்ய அரங்கில் படம் எடுக்க வேண்டும் என்ற என் ஆசைக்கு நியாயமான காரணம் இருந்தது. நாங்கள்
அந்த உள்ளே சென்றதும், விசாலமான கூடத்தைக் கண்டோம். சுவரின் இடது
பக்கத்தில் பல ஆண்டுகளுக்கு
முன்பு இருந்த ரஷ்ய நாட்டின் மாளிகைகள் நிறைந்த வீதியை,
பல வண்ணங்களில் வரைந்திருந்தனர். வலது
பக்கத்தில் நவீன, நாகரிகமான ஒரு வீதியை வரைந்து வைத்திருந்தனர்.
அவர்கள் சினிமாவின் பயனை, நன்கு தெரிந்து வைத்திருந்தனர். எங்கு திரும்பினாலும், ரஷ்ய நாட்டின் கனிம வளம், காடு, நீர், நில வளம், இயந்திர, விஞ்ஞான வளர்ச்சிகளை காட்சியாக ஆங்காங்கே சிறுசிறு திரைகளில் காண்பித்துக் கொண்டிருந்தனர்.
காட்சிகளையும், கலைத்திறமையையும், ‘நிலாப் பயணம்’ போன்ற
சாதனைகளையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவர்கள் கலையையும், கலைஞர்களையும் எந்த அளவு மதிக்கின்றனர் என்பதை
அறிந்து வியந்தேன். படப்பிடிப்புக்குப் பயன்படுத்தும் விளக்குகளுக்குள்,
நடிகர்களின் படங்களை
வைத்து, ஒளியேற்றி,
காட்சிக்கு
வைத்திருந்தனர். தனிப்பகுதி ஒன்றில், வேறு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இடம் தராத ரஷ்யர்கள்,
கலைஞர்களுக்கு மட்டும்
இடம் தந்திருந்தனர் என்றால், கலைஞர்கள் காட்சிப்
பொருட்களல்லர்; நாட்டுத்
தொண்டிலும், வளர்ச்சியிலும்
மிகப்பெரிய பங்கு கொள்ள
வேண்டியவர்கள் என்பதை, ரஷ்ய கலைஞர்கள்
மிக அழகாக தெளிவு படுத்தியிருந்தனர். இதுதான், ரஷ்ய அரங்கில் படம் எடுக்க நான் விரும்பியதற்குக் காரணம்.
அந்த அரங்கின் வெளிப்புற உச்சியை, தலையை மிகவும் உயர்த்தித்தான் பார்க்க வேண்டும். மனிதன் யாருக்கும் அடிமையில்லை என்று கூறும் அவர்களின் கொள்கையைப் போலவே, அந்த அரங்கின் கட்டடமும் விங்கியது. அதைவிட அந்த ரஷ்ய நாட்டுக்கொடி பறப்பதை அண்ணாந்து பார்ப்பவர்கள், அவர்கள் உழைப்பின் உயர்வைப் பார்க்கலாம்.
அந்த அரங்கின் வெளிப்புற உச்சியை, தலையை மிகவும் உயர்த்தித்தான் பார்க்க வேண்டும். மனிதன் யாருக்கும் அடிமையில்லை என்று கூறும் அவர்களின் கொள்கையைப் போலவே, அந்த அரங்கின் கட்டடமும் விங்கியது. அதைவிட அந்த ரஷ்ய நாட்டுக்கொடி பறப்பதை அண்ணாந்து பார்ப்பவர்கள், அவர்கள் உழைப்பின் உயர்வைப் பார்க்கலாம்.
உழைப்பவனே உயர்ந்தவன்
என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றால் அந்த அரங்கில் லெனின் படத்தைத் திரையிடுகிற திரைக்குப் பக்கத்தில்,
இருபது இருபத்தைந்து அடி
உயரத்தில், ஒரு தொழிலாளியின் பிரமாண்டமான
சிலையை வைத்து, நமக்கு நம்மைப்
பற்றி சிந்திக்க வாய்ப்புத் தந்திருப்பார்களா! அந்த இடத்தில்
நாங்கள் நின்று கொண்டிருக்கிற ஒவ்வொரு வினாடியும், நம் மீதும், நம் உழைப்பின் மீதும், லட்சியப் பிடிப்பின் மீதும், முன் எப்போதும் இருந்ததை விட, மிகப்பெரிய நம்பிக்கையும், உறுதியும் ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது.
எம்.ஜி.ஆர்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!