திங்கள், 14 ஏப்ரல், 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை II


கருணாநிதி மீண்டும் என்னைத் தேடி வந்தார். மறுபடியும், அவரது கரம், என் கழுத்தில், மாலையைச் சூட்டியது; என்னை ஆரத்தழுவினார். நான் புறப்படுவதைப் பற்றி அவரிடம் பேசியதுண்டு. ஆனால், எப்போது புறப்பட இருக்கிறேன் என்று, அவருக்குச் சொல்லவில்லை. முன்பு இலங்கை சென்ற போதும், இப்படித்தான் அண்ணாதுரையிடம் புறப்படும் தேதியை சொல்லவில்லை. ஆனால், அவர் சரியாக வந்து, வாழ்த்தி வழியனுப்பினார். இப்போது இவரும் வந்தார்.

நான் ஏழு வயதுப் பையனாக இருக்கும்போது, என் தாயிடமிருந்து முதன் முதலாகப் பிரிந்து, நாடகக் கம்பெனியில் சேருவதற்காகப் புறப்பட்ட நாளன்று, வாயிற்படி வரை, நாங்கள் (நானும் என் சகோதரரும்) வருவதும், உடனே ஓடி, கூடத்தில் அழுதபடி உட்கார்ந்திருந்த தாயைக் கட்டி அணைத்து அழுவதும், எங்களைப் பெரியவர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் செல்வதும், வாயிற்படியைத் தாண்டும் போது, மீண்டும் ஓடி, தாயை கட்டிக்கொண்டு, ''வெனக் கதறியழுவதுமாயிருந்த அந்தக் காட்சியை, இது, இப்போது நினைவுறுத்தியது.

மனதிலிருந்த பெரும் பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்ற உணர்வு; ஒரு பெரு மூச்சு! அது, எத்தனை பேர் என்னைக் கவனிக்குமாறு செய்து விட்டது.
என்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த நான், என்னைச் சுற்றி இருந்தவர்களை, ஒருமுறை கவனித்தேன். டைரக்டர் நீலகண்டன், எங்கேயோ கவனத்தைப் பதித்து, தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக்கூடச் சிந்திக்க முடியாத நிலையில் இருந்தார்.

அவரிடம், உலகம் சுற்றும் வாலிபன் கதையின் ஆரம்பத்தை, ஒரு வரி கதையாக மட்டுமே சொல்லி இருந்தேன். நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க, இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன் என்பது போன்ற விவரங்களை, அப்போது அவரிடம் தெரிவிக்கவில்லை.

ஆகையால், 'இத்தனை பேருடன் புறப்பட்டுச் செல்கிறோமே, பிறர் நம்மை கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றி வர வேண்டுமே...' என்ற அச்சம், அவரிடம் இருந்திருக்க வேண்டும்.

சந்திரகலா, மஞ்சுளா, லதா இவர்களையும் கவனித்தேன். ஒருவர் முகத்தில் கூட சிரிப்பு இல்லை. சில படங்களில் நடித்தும், பரத நாட்டியம், குச்சுப்பிடி போன்ற நாட்டியக் கலைகளில் தேர்ச்சியும், கல்லூரியில், இரு ஆண்டுகள் பி.ஏ., பட்டப் படிப்பு படித்தும் இருந்த சந்திரகலா, இம்மூவரில் கொஞ்சம் விவரம் தெரிந்தவர். அவ்வளவுதான்!

யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டார். அவசியமிருந்தால், கேட்ட கேள்விக்கு, பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் தான், இவரிடமிருந்து பதில் கிடைக்கும்.

அடுத்தது மஞ்சுளா. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மஞ்சுளா நடித்திருந்த காட்சிகளை எனக்கு போட்டு காண்பித்த பின் தான், அவரை, நான் ஒப்பந்தம் செய்தேன்.

மஞ்சுளா எப்போதுமே யார் பேசினாலும், வாய்விட்டுச் சிரித்து விடுவார். சாந்தி நிலையம் படத்தில் நடித்ததன் மூலம், படப்பிடிப்பின் வழி முறைகளைத் தெரிந்தவர்; கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம், ஒரு சில மாதங்கள் பணியாற்றியதால், படப்பிடிப்பின் தன்மைகளைச் சிறிதாவது உணர்ந்தவர். அப்படிப்பட்ட மஞ்சுளா கூட, எந்த மகிழ்ச்சியுமின்றி யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

அடுத்தது லதா. ஏழு வயதில் நான், நாடகக் கம்பெனியில் சேரும்போது, நாடக நடிகர்களின் மனோபாவம், தகுதி, வயது இவைகளுக்கேற்ப எப்படிப் பிறரிடம் பழகுவது என்பதையெல்லாம் கிஞ்சித்தும் அறியாமல், புதியதொரு உலகில் நுழைந்தது போன்ற பிரமையில் இருந்தேனோ, அதே நிலையில்தான் லதா இருந்தார். அவருக்கு தெரிந்தது நடன ஆசிரியர் சோப்ரா, சரோஜா போன்ற ஓரிருவரைத் தான். அவர் நல்ல சிவப்பு நிறமாகையால், வெளியே காட்டிக் கொள்ளாமல் அழுகிறார் என்பதை, அவருடைய மூக்கு நுனியின், இரண்டு பக்கங்களும் சிவந்திருந்தது, எடுத்துக் காட்டிற்று.

இத்தகைய, அப்பாவிச் சிறுமிகளைத்தான், நான் அவர்களின் பெற்றோரிடம், திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்கும் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் செல்லும் ஊர்களைப் பற்றி சரிவரத் தெரியாது. மொழியும் தெரியாது. கலாசாரத்தைப் பற்றியாவது தெரியுமா என்றால், அதுவும் எனக்கு முட்டாள் பட்டத்தைக் கட்டுவதற்காகவே கேட்கப்படும் கேள்வியாக இருக்கும்.

இத்தகைய மிகப்பெரிய தகுதி வாய்ந்த நான்தான், இவர்களையெல்லாம் வழி நடத்திச் செல்கிறேன். இதை எல்லாம் நினைத்து, ஒரு பெருமூச்சோடு மறு பக்கம் திரும்பினேன். உரையாடலை எழுதும் சொர்ணம் என்னைப் பார்த்ததும், ஏதோ யோசனையில் இருந்தவர், அவசரமாக, 'கதைக் குறிப்பை எடுத்துக் கொண்டு அங்கே வரட்டுமா?' என்று கேட்டார்.

இத்தகைய ஆர்வமும், தன் பொறுப்பைச் சரிவரச் செய்து, வெற்றி பெற வேண்டுமென்ற அக்கறையும் உள்ளவர்கள் என்னைச் சுற்றி இருக்கும்போது, என் பயணம் வெற்றி பெறத்தானே வேண்டும். எனினும், பயணம் புறப்படும் நிலையில், விமானத்தில் அமர்ந்து, என்னையும், பிறரையும் கணக்கிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் அத்தனை பேரையும், ஒரே ஒரு மனிதர் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் என்பதை எப்படியோ கவனித்து விட்டேன். அவர்தான், என் அன்புச் சகோதரர் ஆர்.எம்.வீரப்பன்.

அவருடைய செயல், எப்போதுமே ஒரு கணக்கிற்குள், கட்டுக்குள் அடங்கியே செயல்படும். அவர், ஒரு அதிசய மனிதர். அவர் யாருக்கும் வலிய யோசனை சொல்ல மாட்டார். யாராவது தேவைப்பட்டு கேட்டால், கேட்டவர்களின் விருப்பு, வெறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், தனக்கு சரி என்று பட்டதை, தெள்ளத் தெளிவாகச் சொல்லி விடுவார்.

பலனை எண்ணி, எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார். அவர் மதிக்கும் நபர், இவரை விரோதியாகக் கருதினாலும் கூட, இவர் தான் செய்ய வேண்டிய கடமையை, அந்த நண்பருக்காகச் செய்யாமல் இருக்க மாட்டார். இப்படிப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் தான், எனக்கு யோசனை கூறி, முழுப் பொறுப்பினையும் ஏற்று, உடன் வந்துள்ளார்.

நான் பங்குதாரனாக உள்ள, 'எம்.ஜி.ஆர்., பிக்சர்சில்' இப்போதும், அவர் மாதச் சம்பளம் வாங்கும் நிர்வாகியாக இருப்பதுடன், அவரின், 'சத்யா மூவிஸ்' என்ற படக் கம்பெனியில், என்னை நடிக்க வைத்து, லட்சக்கணக்கில், எனக்குச் சம்பளமும் கொடுக்கிறார்.

மாலை, 6:30 மணிக்கு, விமானம், டில்லி நோக்கி புறப்பட்டது. விமானம் சிறிது உயரப் பறந்த போது தான், எத்தனை ஆயிரம் மக்கள், விமான கூடத்தில் கூடியிருந்தனர் என்பதை, காண முடிந்தது. இத்தனை பேரின் ஆசியும், எப்படி வலிவில்லாமற் போய்விடும்? எங்கள் தகுதி சிறிதாயினும், இந்த மக்களின் நல்வாழ்த்துகளின் வலிவு, எங்கள் பயணத்தின் நோக்கத்தை, வெற்றிப் பெறச் செய்யும். என்று நினைத்துக் கொண்டேன்.

பத்திரிகையாளர் சித்ரா கிருஷ்ணசாமி, பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பல ஆண்டுகளாக நண்பராக இருப்பவர். 'காலில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டுப் பொறந்தவர். அதனால் தான், ஒரு இடத்துல தங்கறதில்லே...' என்று, சிலரைப் பற்றிச் சொல்லுவோமே, அது, இவருக்கு மிகப் பொருந்தும்.

உலகில் உழைப்பவர்களில் பல வகையுண்டு. தனக்காக உழைப்பவர்கள்; தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள்; தன் ஜாதிக்காக உழைப்பவர்கள்; தன் மதத்திற்காக உழைப்பவர்கள்; ஊருக்காக உழைப்பவர்கள்; லட்சியத்திற்காக உழைப்பவர்கள். இதில் சித்ரா கிருஷ்ணசாமி, 'நண்பர்களுக்காக உழைப்பவர்...' என்று கூறலாம்.

அவர் செல்லாத வெளிநாடுகள் மிகக்குறைவு. டில்லியில் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
தொடரும்
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை முதல் பகுதிக்கான சுட்டி.
.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

-- எம்.ஜி.ஆர்.,

தினமலர்- வாரமலரிலிருந்து...


தொடர்புடை இடுகை;
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை I

1 கருத்து:

  1. தங்களது வாழ்த்திற்கு நன்றி தனபாலன். ஆனாலும் தை திங்களின் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுவது சரியென்று எனக்குப் படுகிறது. அதானல் நான் யாருக்கும் புத்தாண்டு வாழ்த்தை இந்த சித்திரைக்கு அனுப்புவதில்லை.

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!