வியாழன், 10 ஏப்ரல், 2014

உலகம் சுற்றும் வாலிபன்



 
தமிழ்த் திரைப்பட உலகில், வரலாறு படைத்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கப் படம், உலகம் சுற்றும் வாலிபன் 
.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என, திரை உலகின் முப்பெரும் பரிமாணங்களில், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட படம், உலகம் சுற்றும் வாலிபன்.

வெளிநாடுகளில் நடப்பது போல கதையை அமைப்பது சுலபம். ஆனால், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கே நடிகர்களை அழைத்துச் சென்று, படப்பிடிப்பை நடத்தி, அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவது என்பதை, அந்த நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.  

சுமார், 40 ஆண்டுகளுக்கு முன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, பாங்காக் மற்றும் சிங்கப்பூர் என, தென் கிழக்காசிய நாடுகளில் நடந்த உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு அனுபவங்களை, 'திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்' எனும் தலைப்பில், 'பொம்மை' இதழில், எம்.ஜி.ஆர்., தொடராக எழுத, அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

முதன் முறையாக வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய போது, எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இன்றைய வாசகர்களுக்கு மட்டுமல்ல; பட உலகினருக்கும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகம் சுற்றும் வாலிபன் .                 படத்துக்காக வெளிநாடு செல்ல இருந்த சமயம்.....

'திரை கடலோடியும், திரவியம் தேடு' என்று, பெரியவர்கள் சொன்னாலும், சொன்னார்கள்; அந்தச் சொல், என்னை, எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தது என்பதை எண்ணும் போது, சிரிப்பு வருகிறது. ஏனெனில், பணம் சம்பாதிக்கச் சென்றேனா, செலவு செய்ய சென்றேனா என்பதை நினைத்தல்ல; கையில் போதிய பணம் இல்லாத நிலையில், என்னை நம்பிய, கலைஞர்களை, பரிதாபமான நிலைக்கு ஆளாக்கும், விபரீத சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றேன் என்று தான், சொல்ல வேண்டும்.

ஆம்    அந்தஅன்புள்ளம் கொண்ட, நல்ல நண்பர்களை, கையில் பணமில்லாத ஏழைகளாக, உறவினர்களில்லாத அனாதைகளாக, என்னுடைய எந்த முடிவிற்கும் அசைய வேண்டியவர்களாக, சுருங்கச் சொன்னால், என்னைத் தவிர, வேறு துணையற்றவர்களாக ஆக்கிவிட்ட நிலையில், அவர்களை, என்னோடு வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்கு, அழைத்துச் சென்றேன்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக, ஜப்பானுக்கு பயணமான அன்று, காலையிலேயே அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றேன்..       முன்பு ஒருமுறை, இலங்கையில் நடந்த பாராட்டு விழாவுக்கு சென்ற போது, நேரில் வந்து, எனக்கு மாலையணிவித்து வாழ்த்திய அந்த அன்பு இதயம், இன்று மீளா துயிலில் ஆழ்ந்து விட்டது.

அவருடைய பாதத்தை, என் இதயத்தால் தொட்டேன். என் உள்ளமெல்லாம் சிலிர்க்க, ரத்த நாளமெல்லாம் துடிக்க, கண்கள் குளமாக, விரல்கள் நடுங்க, அந்த நினைவு மேடையில், அண்ணாதுரையின் கால்களை வருடினேன்.

அண்ணாதுரை ஏதோ சொல்வது போல், ஒரு பிரமை...

'தம்பி... தமிழகத்துக்கோ, தமிழ்ப் பண்புக்கோ, இந்திய துணைக் கண்டத்து உயர்வுக்கோ, ஏதும் பங்கம் வராமல் நடந்து கொள்!' இப்படி அண்ணாதுரை சொன்னது போல், ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் சொல்லியிருக்கக் கூடாது... அவர் எத்தனையோ முறை பேசி, எழுதி, நமக்கெல் லாம் அறிவுறுத்தியது தானே! இருப்பினும், அன்று, அது ஒரு புதிய கட்டளை போல், மனத்தெளிவை உண்டாக்கும் அறிவுரை போல் இருந்ததுடன், எனக்கு புத்துணர்வையும், புது தெம்பையும் அளித்த வரமாகவும் இருந்தது.
கிடைத்தற்கரிய பெரு நிதியை பெற்று விட்டவனாக நான் மாறினேன். அந்தத் துணிவோடு நேரே என் உடன் பிறந்த அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை காணச் சென்றேன்.

அண்ணனின் காலில் விழுந்து வணங்கினேன். தழுதழுத்த குரலில் அவர், 'உடம்பை ஜாக்கிரதையாக பாத்துக்க; எதுக்கும் அவசரப்படாதே. நீ குற்றமில்லாதவனா இருக்கலாம். உன்னைச் சுற்றி இருக்கிறவங்க எல்லாரையும் அப்படி எதிர்பார்க்காதே, எல்லாரையும் நம்பிடாதே; அதுக்காக எல்லாரையும் சந்தேகப்படாதே. எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு. அதனால், அமைதியா இருந்து, எச்சரிக்கையா நடந்துக்க. படப்பிடிப்பிலே கவனமா தொழில் செய்யணும். முடிஞ்சா அடிக்கடி கடிதம் போடு...' என்று கூறினார்.
  
விமான நிலையத்தில் அன்பு தோழர்களின் நெரிசல் இருக்கும் என்று நினைத்து, வீட்டிலேயே வழியனுப்ப வந்திருந்த நண்பர்களிடம், மாலை, மரியாதையை ஏற்று,ஆசி பெற்றுக் கொண்டேன்.

எந்த வித தொழில் தொடர்பு இல்லாவிடினும், என் மீது உடன்பிறப்பு போன்ற பாச உணர்வு காட்டி, எப்போதும், தனித்தன்மை வாய்ந்த அன்புணர்வோடு பழகும், என்.டி.ராமராவ், என் வீட்டிற்கு வந்து, மாலை அணிவித்து, வாழ்த்தினார்.

அவரிடம் ஆசி பெறுமாறு, படத்தில் நடிக்க வந்த சந்திரலேகா, மஞ்சுளா மற்றும் லதா ஆகிய மூன்று கதாநாயகிகளையும் வணங்கச் சொன்னேன்.
இம்மூன்று பெண் களும், தங்களுடன் எந்த உறவினரையும், அழைத்து வர இயலாத நிலை. எனவே, என் வாழ்க்கைத் துணைவி ஜானகி தா,ன் அவர்களுக்குத் தாய், தமக்கை, அண்ணன் எல்லாமாக இருந்தார்.

இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு, இருவரும் மலர் மாலைகளை அணிவித்து, வாழ்த்தினர். கிருஷ்ணன் அதிகமாகப் பேச மாட்டார். அப்படி ஏதாவது பேசினால், அது, ஊக்கம் தருவதாக இருக்கும். 'கொஞ்சங் கூடப் பயப்படாதீங்க. ரொம்ப நல்லாப் படம் எடுத்துக்கிட்டு வருவீங்க...' என்று கூறினார் கிருஷ்ணன். வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து வாழ்த்தினார் இயக்குனர் பந்துலு.

'நிறைய நாளாகுமோன்னு பயப்படாதீங்க; நல்லதைப் பாத்தா விட்டுடாதீங்க... நீங்க எங்கே விடப்போறீங்க! நான்தான் மொதல்ல போயி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர்ல படம் பிடிச்சேன். அப்புறத்தான் நீங்க, அடிமைப் பெண் படத்துக்கு போனீங்க. நான் எடுத்த மாதிரியா எடுத்தீங்க...ஒரு சந்து, பொந்து விடாம படம் பிடிச்சிட்டு வந்து, என்னையே அசர வெச்சுட்டீங்களே... ஜப்பானெல்லாம் போனா விட்டுடுவீங்களா... போய் வெற்றிகரமாக முடிச்சுட்டு வந்துடுங்க சுவாமி...' என்று வாழ்த்தினார். அவர் எப்போது என்னைக் கண்டாலும், 'என்ன சுவாமி, சவுக்கியமா...' என்று கேட்பது வழக்கம்.

நாகேஷும் வீட்டிற்கே வந்து விட்டார். அவரோடு, அவருடைய நெருங்கிய நண்பர், நடிகர், ஸ்ரீகாந்த்தும் வந்திருந்தார். ஸ்ரீகாந்த் தனியாக என்னிடம், என் கையைப் பிடித்து கண் கலங்கியவாறு, 'நாகேஷை உங்கக் கிட்டே ஒப்படைக்கிறேன். நீங்க தான் உங்க தம்பி போலப் பாத்துக்கணும்...' என்றவர், 'அவன் நல்ல நடிகன்; ஆனா, ஒண்ணும் தெரியாதவன், நல்லவன்...' என்றார்.

இதை அவர் சொல்வதற்குள்ளே, என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் எத்தனை, எத்தனை! நான் வயது முதிர்ந்த பின்பும் கூட, என் தாயார், பிறரிடம் என்னைச் சிறு குழந்தையாக பாவித்து, ஒப்படைப்பார்.

அந்த அன்புத் தாயுள்ளத்திற்கும், இந்த நண்பரின் அன்புள்ளத்திற்கும் வித்தியாசம் காண முடியவில்லை! இதைப்பற்றி நினைத்தவாறே, அவர் தொடர்வதற்கு வாய்ப்பு கொடுக்காமல், 'கொஞ்சங்கூடக் கவலைப்படாதீங்க, நான் இருக்கேன்; பாத்துக்குறேன்...' என்று கூறினேன்.

இப்படி உணர்ச்சி குவியலாக இருந்த நாங்கள், விமான நிலையத்துக்கு புறப்பட்டோம்.

விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில், என் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்களும், அன்புத் தோழர்களும் கொடிகள், தோரணங்களைக் கட்டி, மாலைகளோடு காத்திருப்பதைக் கண்டேன். நாங்கள் சென்ற வேனிலிருந்து எழுந்து நின்றோம். நாகேஷ், அசோகன், மூன்று கதாநாயகிகள், நான் உட்பட எல்லாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல், வாழ்த்துடன், மாலைகளும் தந்தனர் மக்கள்.

இப்படி நெரிசல் ஏற்படும் அளவிற்கு, மக்கள் கூட்டமாக கூடுவர் என்று, நான் எதிர்பாக்கவில்லை. ஏனெனில், நானே, 'என் தொழில் பயணத்தை விழாவாக்க வேண்டாம்...' என்று, முன்பு ஓர் அறிக்கை வெளிட்டிருந்தேன். 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்பது போல், மக்கள் கூட்டம் கூடி விட்டது .

விமான நிலையத்தில் இறங்கினேன். கலையுலகப் பிரமுகர்களும், நண்பர் ஜெமினிகணேசன் முதலானவர்களும் மாலை அணிவித்தனர். அப்போது, கருணாநிதி வந்தார்; மாலையை என் கழுத்தில் அணிவித்தார். நான் உணர்ச்சி வசப்பட்டிருந்தபோதே, அவர் அதிகாரிகளிடம், வண்டியை நேராக விமானத்திற்கு அருகில் கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். . நான் வேனில் ஏற்றப்பட்டேன்; வண்டி நகர்ந்தது.
.
விமானத்தின் உள்ளே சென்று உட்கார்ந்தேன்.                   
திடீரென வெளியே இருந்து, போலீஸ் அதிகாரிகள் சிலர், விமானத்திற்குள் வந்தனர்.
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 26.

4 கருத்துகள்:

  1. எத்தனை முறை இப்படத்தை ரசித்திருப்பேன் என்று கணக்கில்லை...

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. கடந்த வார தினமலர் வாரமலரிலும் இதே கட்டுரை,எப்படி கவி ஜி ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. இது தினமலர்-வாரமலரில் வந்த கட்டுரைதான் பகவான்ஜி, குறிப்பிட மறந்துவிட்டேன். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!