திங்கள், 7 ஏப்ரல், 2014

ஆசையின்றி ஓர் கடிதம்



“……………”
நீங்கள் என் கணவர்தான். என்றாலும் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தபோது, உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் ரொம்பவும் தடுமாறிப்போனேன். ‘அன்புள்ளஎன்றோ, ‘மதிப்பிற்குரியஎன்றோ குறிப்பிடலாம் என்றால், அதில் எனக்கு துளிகூட விருப்பமில்லை. ஏனெனில், உங்களை அப்படிக் குறிப்பிடுவதாலேயே அந்த வார்த்தைகள் அர்த்தமிழந்து போகும். ஆதலால் வேறுவழியின்றி கடிதத்தை வெறுமனே தொடங்குகிறேன்.
 

ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிற எனக்கு யாரோ, எங்கோ தூரத்திலிருந்து எழுதுவது போன்றுகடிதமா…!’ என்று உங்கள் புருவம் சுருங்குவது புரியாமல் இல்லை. நேரிலேயே சொலல்லாம்தான். ஆனால் நினைப்பதையெல்லாம் முழுமையாக நேரில் சொல்லிவிட முடியாது. எனவே என்னுடனேயே இருக்கும் உங்களுக்கு ஒரு மூன்றாம் மனுஷி போல் இந்தக் கடிதம்.

உங்களுடன் வாழ்ந்த இந்த பத்தாண்டுகளில் உங்களுக்கென்று கடிதம் எழுத நேர்ந்தது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாகவும் இருக்கும். எதற்காக இந்தக் கடிதம் என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்பு, நமது இந்தப் பத்தாண்டு காலத் தாம்பத்தியத்தில் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்ட சில தழும்புகளை உங்களுக்குத் தொட்டுக் காட்டினால்தான் மனசு ஆறும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோகாலையில் எங்கள் ஊரில் நம் திருமணம். மாலையில் உங்கள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி. சோபாவில் உங்களுக்கருகில் உங்களைப் போலவே ரோஜாப்பு மாலையுடன் நான்.

வரவேற்புக்கு வந்தவர்கள் உங்களருகே வரும்போதெல்லாம் முகம் முழுக்கச் சிரிப்பாக எழுந்து நின்று, அவர்களோடு கைகுலுக்கி, வீடியோவுக்கு போஸ் கொடுத்து, ‘சாப்பிடாமப் போயிடக்கூடாதுஎன்று கண்டிப்புடன் உபசரித்தபடி இருந்தீர்கள். ஆனால் தவறிப்போய்க்கூட என் பக்கம் நீங்கள் திரும்பவே இல்லை. நான் உங்களருகேதான் நின்றுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வுகூட உங்களுக்கிருந்ததாகத் தெரியவில்லை.

இதைக் கவனித்துவிட்ட உங்கள் நண்பர் விவேக், உங்களருகே ஓடிவந்து காதோடு காதாகஎன்னடா நீவர்றவங்ககிட்ட உன் மனைவியை அறிமுகப்படுத்த வேண்டாமா…? என்னமோ இன்னமும் கட்டைப் பிரம்மச்சாரி மாதிரி, நீட்டுறவன் கையையெல்லாம் நீ மட்டுமே குலுக்கிக்கிட்டிருக்கேஅவங்களையும் அறிமுகப்படுத்துடாஎன்று கோபப்பட்டார். அதற்கு என்ன பதில் சொன்னீர்கள், நினைவிருக்கா பிரபு?

ஆமாண்டாஅதி ஒண்ணுதான் குறைச்சல். என்னவோ எங்க அம்மா வார்த்தையை மீற முடியாமகண்ணை மூடிக்கிட்டுத் தாலி கட்டியாச்சு. அதுக்காகஇவதான் என் அழகு பொண்டாட்டினு காட்டி, வர்றவன் போறவன்கிட்டயெல்லாம் சந்தோஷம் கொண்டாடச் சொல்றியாக்கும்…’
இப்படி அடித்தொண்டையில் தணிந்த குரலில் கோபமும் ஆதங்கமுமாக, நண்பரின் காதோடு காதாகக் கரகரத்த உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என் செவிப்பறையிலும் இதயத்திலும் சுரீர், சுரீர் என்று விழுந்து பதிந்தது. அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு மெள்ளத் திரும்பி ஓரக்கண்ணால் உங்களைப் பார்த்தேன்.

ஒரு வசீகரமான ஆண்மகன் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக நீங்கள் நின்றுகொண்டிருந்தீர்கள். சட்டென்று என்னை நானே பார்த்துக்கொண்டேன். ஒற்றை வரியில் சொல்வதானால், ஒரு ஆண் மகனை வசீகரிக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் இல்லாத அவலட்சணமாக நான்.

உங்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். எனவே, உங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் எனக்குப் புரிந்தது. வலிக்கத்தொடங்கிய மனதை ஆறுதல் படுத்திக் கொண்டேன்.

நம் ஒரே குழந்தை உஷா. அவளை என் கர்ப்பத்தில் அடை காக்கத் தொடங்கிய அந்தத் தருணம்கூட, உங்களைப் பொறுத்தவரை ஒரு விபத்து மாதிரிதான். என்னதான் நான் உங்களுக்கு பிடிக்காதவளாக இருந்தாலும் இயற்கையாகவே உடம்பின் பசி உங்களைச் சுட்டெரிக்கும் போதெல்லாம் என் தேகத்தை உதாசீனப்படுத்த முடியாமல் போய்விடும். உஷாவைச் சுமக்க நேர்ந்ததுகூட இதுபோன்றதொரு பலவீனமான தருணத்தில்தான் என்பதை நானும் அறிவேன். எந்திரத்தனத்தை என் மனசு உணர்ந்தாலும் என் உடம்பும் ஏற்றுக்கொள்ளும். ஏனெனில், அதற்கும் பசி உண்டே…!

உங்களுக்கு தூக்க நேரத்தில் நிசப்தம் முக்கியம். ஒரு சின்ன முனகல் சத்தம் கூட உங்களுக்கு சகிக்க முடியாத இம்சை. ஒரு நாள்நடுநிசியில் லேசாக சிணுங்க ஆரம்பித்த உஷா, கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரம் பெற்று பெரிதாக அலற ஆரம்பித்து விட்டாள். என்னென்னவோ சமாதானம் செய்தும் ஓய்வதாயில்லை.

அப்போது உங்கள் அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், படாரென்று கதவைத் திறந்து கொண்டு ஆவேசமாக வெளிப்பட்டு… ‘சனியனே ஏன் இப்படி தூங்கக்கூட விடாம பேய் மாதிரி அலர்றே..? செத்துத்தொலை…’ என்று ஆத்திரத்தோடு கத்தியபடி, குழந்தையோடு சேர்த்துத் துணித்தூளியைத் கிறுகிறுவென்று முறுக்கி, வேகமாக வீசியடித்தீர்கள். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். மறுவிநாடியே அனிச்சையாகப் பாய்ந்து சென்று தூளியைப் பிடித்துக்கொண்டேன். நல்லவேளைசுவர் எட்டாத் தூரம். இல்லையெனில் சுவரில் மோதிஉஷாவின் கதை அன்றே முடிந்திருக்கும். இப்போழுது நினைத்தால்கூடப் பகீரென்கிறது

ஆனால் அப்போதுகூட உங்கள் மீது நான் ஆத்திரம் கொள்ளவில்லை. எனக்குள் ஒரு ரகசிய எதிர்பார்ப்புஉங்களின் ஆத்திரம் வடிந்த பிறகு, ‘அடடா இப்படி செய்துவிட்டோமேஎன்று உங்கள் கண்களில் வருத்தம் தொணிக்க, உஷாவைத் தூக்கி முத்தமிடுவீர்கள் என்று. ஊஹூம்உங்களிடமோ அழுத்தமான மௌனம்தான்.
நான் உங்களுக்கு பிடிக்காதவள்தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷிதானேஎனக்கென்றும் ஒரு மனசுஅதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும்தானேஅதைப்பற்றி எப்போதேனும் யோசித்திருப்பீர்களா பிரபு..? மாட்டீர்கள் பரவாயில்லை. பரவாயில்லைஎனக்குள் அடைகாத்து வைத்திருந்த சிலவற்றையாவது சொல்லிவிடுகிறேன்.

புல்லட்டில் உங்களை ஒட்டி உரசியபடி முடியெல்லாம் காற்றில் பறக்க சவாரி செய்யநீண்ட பஸ் பயணத்தில், உங்கள் மடியில் ரொம்பவும் சுவாதீனமாக படுத்துத் தூங்க… ‘இந்த ஷர்ட்தான் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கு, இப்படிச் சீவறதுதான் உங்க முகத்துக்கு நல்லாயிருக்குஎன்றெல்லாம் உங்களை விதவிதமாக அழுக படுத்திப் பார்க்கஇப்படி என்னவெல்லாமோ ஆசைகள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னுமொரு ஆபூர்வ ஆசை. முதுகுப் புறமாக உங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, காதருகே குனிந்துடேய்பிரபுப் பையா! என்னைத் தூக்கிக் கொண்டு இந்த வீட்டைச் சுற்றி ரெண்டு மூணு தடவைச் சுற்றி வாடா பார்க்கலாம்என்று கிசுகிசுப்பாகச் சொல்லி, அதன் விளைவாக உங்கள் முகமும் கண்களும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைப் பார்த்து ரசிக்க வேண்டுமென்று கொள்ளை ஆசை.

என்னைப் பார்த்ததுமே உங்கள் அழகான முகம் கோபத்தால் கோணல் மாணலாகி விடுவதைக் கண்டு என் அடிமனத்து ஆசைகள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும். அடிக்கடி என்னோடு என் மனசு முரண்டு பிடித்திருக்கிறது. ‘உங்களுக்குள் மனமொத்த வாழ்க்கை இல்லை. பிறகு இதுதான் வாழ்க்கை என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய்? தொலைத்து தலை முழுகிவிட்டு, நிம்மதியாக ரிந்து தொலையேன்…’

என்னைப் பொறுத்தவரை, பணம் ஒரு பிரச்னை இல்லை. நானும் உங்களைப் போலவே படித்து, உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறவள். என் வழியே போவதற்கு யார் தயவும் தேவையில்லை. ஆனாலும் உங்களை விட்டு விலக மனமில்லை. இத்தனை ஏமாற்றங்களுக்குப் பிறகும் நான் உங்களை மனமார நேசித்தேன். இந்த நேசிப்புக்குத்தான் காரணம் என்ன?

உங்களின் மனநேர்மை. நியாயத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய விரும்பாத மன உறுதி. அதனால் எத்தனை இழப்புகள், எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம். உண்மையைப் போல் அழகானதும் கம்பீரமானதும் உலகில் வேறொன்றும் இல்லையேநான் உண்மையை நேசிப்பவள். அதனால் உங்களையும் நேசித்தேன்.

அலுவலக வாழ்க்கையில் உங்கள் நேர்மையாலும் கண்டிப்பாலும் பாதிக்கப்படவர்கள் ஒன்றுகூடி எதற்காகவோ நீங்கள் லஞ்சம் கேட்டதாக ஜோடனை செய்து, ஆட்களை நியமித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் உங்களைக் கைது செய்ய வைத்துவிட்டனர். அந்த நேரத்தில் அவமானத்தால் எப்படியெல்லாம் நீங்கள் கூனிக் குறுகிப் போயிருப்பீர்கள் என்று நினைத்து நினைத்து குமைந்து போனேன்.

இருந்தாலும் உங்கள் நேர்மையில் எந்த மாசும் படியவில்லை என்பதை நிரூபிக்க முழுமூச்சில் ஈடுபட ஆரம்பித்தேன். ‘அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நீங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்விட்டீர்கள். உங்கள் மிடுக்கான பேச்சும் கம்பீரப் பார்வையும் காணாமல் போய்விட்டன. அதைப் பார்ம்மு என் மனம் கசிந்தது.

இந்த நிலையில், லீவு போட்டுவிட்டு வக்கீல் வீடுகோர்ட் என்று நேரம் காலம் பார்க்காமல் அலைய ஆரம்பித்தேன். நல்லவேளைஅந்த வக்கீல் பாரிஉடம்பெல்லாம் மூளை அவருக்கு. சமயத்தில் கைகொடுத்தார். நிஜத்தை நிரூபிக்க நான் கொடுத்த விபரங்கள்விளக்கிய வழிமுறைகளைக் கண்டு அசந்து போனார். வார்த்தைக்கு வார்த்தை என்னைப் புகழ்ந்தார். என்னைப் பார்த்தாலே அவர் கண்கள் ஜொலிக்க ஆரம்பிக்கும். முகம் மலர்ந்து போகும். வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்கும்.

என் அவலட்சண தோற்றம் அவர் கண்களுக்குத் தெரியவில்லை என்றே தோன்றியது. ‘உங்களை முழுசா எப்படி பாராட்டறதுன்னு தெரியலேவேறொரு பெண்ணா இருந்தா, இன்னேரம் மனசொடிஞ்சு மூலையிலே முடங்கிடுவாங்க. நீங்களோஅடேயப்பா!’ என்று ஒரு நாள் அந்த பாரி சிலிர்த்துக்கொண்டதை நீங்களும் அருகிலிருந்துதான் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

அவரோடு மணிக்கணக்கில் நான் வெளியே செல்லவும் பேசவும் வேண்டியிருந்தது. அந்தச் சந்தரப்பதில்தான் என் கைப்பைக்குள் எனக்காக நீங்கள் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை (எனக்காக நீங்கள் எழுதிய முதல் கடிதம் கூட இதுதான்!) படிக்க நேர்ந்தது.

என் உயிரேசந்திரிகாஎன்னை விட்டு நீ விலகிவிடுவாயோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. நீயின்றி ஒரு விநாடிகூட என்னால் இருக்க முடியாது. இது சத்தியம். என்றென்றும் மாறாத அன்புடன்உன் பிரபு…’

இதைப் படித்து முடித்ததும் எனக்குள் ஏதோ ஒன்று சடசடவென்று உடைந்து நொறுங்குவது போலிருந்தது. காலமெல்லாம் என்மீது வெறுப்பை மட்டுமே காட்டினீர்கள். அதற்கு என்ன காரணம் என்று என்னிடமே வெளிப்படையாகவே சொன்னீர்கள். மறைக்கவில்லை. நடிக்கவில்லை. நீங்கள் நீங்களாகவே நடந்துகொண்டீர்கள். அந்த நிஜத்தின் ம்பஃபீரமே இதுநாள் வரை உங்களோடு என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஆனால் ஒரு மூன்று வரிக் கடிதத்தில் என் நம்பிக்கையைப் பொய் ஆக்கிவிட்டீர்கள். அடுக்கடுக்காக எத்தனை பொய்கள்! உங்களை இப்படி எழுதவைத்தது எதுவென்று உடனே எனக்குத் தெரிந்து விட்டது. அந்த வக்கீல் பையன்அவர் என்னிடம் காட்டிய அன்பின் நெருக்கம். ‘ஒருவேளை நான் அவரோடு நான் போய்விட்டால்நம் கதி..? என்ற பயம்

ஆக உங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த அளவுக்குக் கீழிறங்கவும் நீங்கள் தயார் என்பதன் நிரூபனம்தான் அந்தக் கடிதம். இதுவரை என்னிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டிருந்தாலும் என் மனசுக்குள் ஜம்மென்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தீர்கள். இனி, அந்தச் சிம்மாசனம் இருக்கும். ஆனால் அதில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். ஸாரி மிஸ்டர் பிரபு! - சந்திரிகா.
கதை - உத்தமசோழன். 

4 கருத்துகள்:

  1. வருகைக்கு மிக்க நன்றி நாடோடிப் பையன்.

    பதிலளிநீக்கு
  2. தாராளமாக வெளியிடலாம். கதைக்குச் சொந்தக்காரர் நான் இல்லை. உத்தம சோழன். இது ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த கதை. வருகைக்கு நன்றி பாலமுருகன்.

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!