செவ்வாய், 8 அக்டோபர், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது… டாக்டர் பி.ஆர் சுப்பிரமணியம்



அது 1949-ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள், நான் ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை செய்கிறேன். சைனா பஜாரில் கிளினிக் வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணனும் சைனா பஜாரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அப்போது அவர் சாதாரண நடிகராக இருந்து பிரபலமாகிக் கொண்டு வரும் நேரம்

என்னோடு சைமன் என்பவர் கம்பவுண்டராக இருக்கிறார். அவரும் எம்.ஜி.ஆருடைய அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் நல்ல நண்பர்கள். சைமன் வந்து என்னிடம் சொல்கிறார்… ‘சக்கரபாணி உங்களைப் பார்த்துப் பேச விருப்பப்படுகிறார் என்கிறார். நான் என்ன விஷயமாய் என்கிறேன், ‘அவருடைய தம்பி மனைவிக்கு சுவாசப் பையில் வியாதி உள்ளதாகவும், டாக்டர் வாசுதேவன் சிகைச்சை அளித்துவிட்டு ஒன்றும் பயனில்லை. ஆறு மாதத்திற்கு மேல் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சொன்னதாகவும், நீங்கள் அந்த அம்மாவை குணப்படுத்த முடியுமா என்றும் கேட்கிறார்.

அந்த அம்மாவை அழைத்து வாருங்கள் பரிசோதித்துவிட்டு பிறகு முயற்சி செய்யலாம் என்கிறேன். இதுதான் எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு எனது முதல் அறிமுகம். எம்.ஜி.ஆருடைய மனைவிக்கு சிகிச்சை ஆரம்பித்தேன். தேவ கிருபையால் அந்தம்மா குணமாகி அதன் பின்பும் 13 வருஷம் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

இதுதான் என்மீது எம்.ஜி.ஆருக்கு பிரியம் ஏற்படக் காரணமாக இருந்தது. அடிக்கடி வருவார். அவர் உடல் நலத்தையும் பரிசோதித்துக் கொள்வார். பின்ன்னர் அவருடைய குடும்பத்திற்கே டாக்டராக்கி விட்டார்கள்.

அப்போதும் அவர் பார்க்க நன்றாக இருப்பார். ஒரு வசீகரம் இருக்கும். அவர் என்னைப் பார்க்க வந்தால் மக்களும் கூடி விடுவார்கள். அதனால் இரவில் யாரும் அறியாமல் ரிக்ஷாவில் ஏறி வருவார். இன்றுவரை அதே பரந்த நோக்கங்களோடு இருக்கிறார். மாறாமல் விசுவாசமாக இருக்கிறார்.

எந்தவித உடல்நலப் பிரச்னையானாலும் என்னைத்தான் கூப்பிடுவார். என் மீது அத்தனை நம்பிக்கை வைத்ததினால் அவருடைய உடல் நலத்திற்கு சங்கடம் வந்தால் எனக்கு வந்ததாகவே நினைப்பேன். வைத்தியம் செய்வதற்கும் முழு சுதந்திரத்தையும் கொடுத்துவிடுவார்.

அந்தக் காலத்தில் இருந்தே உடலைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தோடு உடற்பயிற்சி செய்கிறார். ஆகார விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார். டாக்டர் என்ன சொல்கிறாரோ அதையேதான் சாப்பிடுவார்.

காபி, டீ, புகையிலை போன்ற லாகிரிப் பொருட்களை உபயோகிக்க மாட்டார். அதிகமாக பால் அருந்துவார். மீன் சாப்பிடப் பிரியப் படுவார். எல்லோரும் அவரைப் போலவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று நினைப்பார்.
நான் அறிந்து கால் முறிவும், துப்பாக்கிச் சூடும்தான் பெரிய பிரச்னை! பிரச்னையா அவை? விபத்துகள்! மற்றபடி தலைவலி, ஜலதோஷம் என சிறு வியாதிகள்தான் அவருக்கு வந்தன, போயின.குறிப்பாகச் சொல்லக்கூடிய வியாதிகள் ஒன்றுமில்லை அவருக்கு இன்றுவரை

அவருக்கு சிகிச்சை செய்வது சுலபம். விஞ்சான முறை வைத்தியத்தில் திடமான நம்பிக்கை உள்ளவர். நாட்டு மருந்துகளை உபயோகிக்க மாட்டார். வியாதிகளைத் தாங்கும் மனோபலம், சகிப்புத்தன்மை நிறைந்தவர். அப்போதும் சிரித்த முகமாகவே இருப்பார். டாக்டரிடம் மட்டும்தான் தன் நோய் நொடி பற்றி சொல்லுவார்.

அவரை துப்பாக்கி குண்டு சந்தித்ததேஅது கழுத்தின் முன் பகுதியில் பாய்ந்திருந்தது. முதல் முறையாக எடுக்க முடியவில்லை. மூன்று மாதம் கழித்து வாய் வழியாக தொண்டையிலிருந்து எடுத்தார்கள். அறுவை சிகிச்சை செய்து முடித்த பிறகுதான் எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பேச்சு இல்லை, குரல் இல்லை. தண்ணீர் விழுங்குவது கூட கஷ்டம்.

படிப்படியாக நாளாக ஆக எல்லாம் மாறி குணமானார். குரலில் மாத்திரம் கொஞ்சம் மாறுதல் இருந்தது. அவரோடு பழக்கம் ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை அவருக்கு மருத்துவராக இருக்கிறேன். எங்கு வெளியூர் சென்றாலும் என்னையும் அழைத்துச் சென்றுவிடுவார்.

அவர் யாரானாலும் ஏக வசனத்தில் பேசமாட்டார். கோபமானாலும் கூட புன்படுத்தும் வார்த்தைகளைப் பேசமாட்டார். பழக்க வழக்கத்தில் மரியாதை தெரிந்தவர். நயமாகப் பேசுவார். வார்த்தை தவறமாட்டார்.

அப்போதிலிருந்தே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்போது அந்த எண்ணத்தை அதிகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார                               

    - எம்.ஜி.ஆரின் குடும்ப மருத்துவர் டாக்டர் பி.ஆர் சுப்பிரமணியம்.

6 கருத்துகள்:

  1. எம் ஜி ஆரின் நம்பிக்கை தான் அவரை உயரத்திற்கு அழைத்து வந்தது.

    பதிலளிநீக்கு
  2. மக்கள் திலகத்திற்கு இப்போதும் இருக்கும் செல்வாக்கே தனிதான் தனபாலன்! வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தன்னம்பிக்கதான் அவரது பலமே! வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்திருக்கிறார். 'என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை! நம்பாமல் கெட்டவர்கள் பல பேருண்டு' என்ற ஒரு வசனம் கூட உண்டு அவரின் திரைப்படத்திலே! வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!