சமீப காலங்களில் புயலுக்குக் கூட பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒருவகையில் வரலாற்றில் பதியக்கூடிய நிகழ்வாக இருப்பின் காலத்தையும் பெயரையும் நினைவுகூற வசதியாகத்தான் இருக்கும். தற்போது நான் பணி நிமித்தமாக ஒடிசா மாநிலத்தில் இருப்பதால் இங்கு இரண்டு நாட்களாக இந்த 'ஃபாய்லின்' புயல் பற்றிய பேச்சுதான்.
நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து அலறல் எச்சரிக்கை கொடுத்த வண்ணம் இருக்கின்றன. தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தில் மாநிலமே விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த நேரத்தில் இடி போல இடியுடன் கூடிய மழையோடு அதிரடியாக வரப்போகிறது ஃபாய்லின் புயல்.
சென்னையில் இருந்த போதும் புயலின் பாதிப்பை அதிகமாய் உணர்ந்ததில்லை. தொடர்ந்து ஒருவாரம் விடாது மழை பெய்யும், அவ்வளவுதான். வேலைக்குப் போக முடியாது. இயல்பு வாழ்க்கை பாதிக்கும். வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயலின் பாதிப்புகளை இணையத்தின் வாயிலாக படிக்க முடிந்தது. ஜாக்கி சேகரின் தளத்திலும் படிக்க நேர்ந்தது. ஆனால் நேரடியான அனுபவம் ஏதுமில்லை.
இங்கு (ஒடிசாவில்) தற்போது (தசரா) விடுமுறையில் சென்று விட்ட அனைத்து அரசு ஊழியர்களையும் மீண்டும் வரச்சொல்லி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும், கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் பணியிலும், அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள் செய்யும் பணியிலும் முடுக்கி விட்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் இந்த ஃபைலின் புயல் பற்றிய பேச்சுதான். ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசாவில் உள்ள துறைமுக நகரமான பாரதீப்பிற்கும் இடையில் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கிறது. இந்த இரண்டு நகரங்களுக்கு மையத்தில் இருக்கும் கோபால்பூர் (ஒடிசா) என்ற ஊர் புயல் தாக்கக்கூடிய முக்கியமான இலக்கு. இந்த கோபால்பூருக்கு மிக அருகில்தான் (பிரஹம்மபூர்- BERHAMPUR) நான் வசித்து வருகிறேன்.
இங்கிருந்து கோபால்பூர் கடற்கரை 12 கி.மீ.தான். நாளை (12-10-2013) சனிக்கிழமை புயல் கரையைக் கடக்கும் என்கிறது செய்தி. அதுவும் மணிக்கு 250-260 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடுமாம். செய்திகளில் தெரிவிப்பதை விட பாதிப்பு மிகக் கடுமையாக இருக்குமாம்.
இதுவரை ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் மூன்று லட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். இன்னும் 2 லட்சம் வரை நாளைக்குள் வெளியேற்றப்படுவார்கள். பத்தாயிரம் பள்ளிக்கட்டிடங்கள் தாற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது.
இது தவிர அரசு கட்டிடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு உணவுப் பொருட்களும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் குவிக்கப் பட்டிருக்கின்றன. புயலினால் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவார்களாம்.
இரயில் போக்குவரத்திலும் பெரும் இடையூறு ஏற்படலாம். மக்கள் பீதியுடனே இருக்கிறார்கள். இது போல 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புயலின் போது மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவர ஒன்றிரண்டு மாதங்கள் ஆகியதாம். மக்கள் அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை சேமித்து வைத்து விட்டார்கள். குடிதண்ணீர் அடுத்த பிரச்னை. அதற்கடுத்து மின்சாரம். மின்இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கப்புறம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். தொலைத்தொடர்பு மோசமாக துண்டிக்கப்படலாம்.
நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் இருக்கும் 'ஹைமாஸ்ட் விளக்குகளின்' உச்சியில் இருக்கும் விளக்குகளை இறக்கி விட்டிருக்கிறார்கள். அதுகூட உடைந்து போகலாம் என்ற கணிப்பு. ஒடிசாவின் மிகப் பிரபலமான துர்கா பூஜைக் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த வேளையில், இந்தப் புயல் அனைவரையும் அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் கடல் அலையோ கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்தியாவின் மொத்த பரப்பளவில் பாதியளவு இருக்குமாம் இந்த புயலின் பரப்பும். வங்கக் கடலின் இந்தியப் பகுதி முழுவதும் இன்னும் சில மணி நேரங்களில் இந்த ஃபாலின் புயல் ஆக்ரமிக்கப்போகிறது. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 1999-ல் ஏற்பட்ட புயலின் போது சுமார் 10,000-ம் பேர் மாண்டு போனார்கள். ஆனால் இப்போது எல்லா முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் கடுமையாக இருக்காது என்று நம்பலாம்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது புது தில்லிப் பயணத்தை ரத்து செய்துவிட்டு புயல் முன்னேற்பாடுகளில் மும்முரமாகி இருக்கிறார். எங்களது அலுவலகம் எங்களை இன்று காலையிலேயே விடுமுறை அறிவித்து வீட்டுக்கு அனுப்பி விட்டது. நாளைக்கு எப்படி இருக்கும் நிலைமை தெரியவில்லை. பதிவை எழுதுவதற்கு மின்சாரம் இருக்குமா தெரியவில்லை. உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மேலான்மைக் குழுவின் 42 குழுக்கள் ஏற்கனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மற்ற விபரங்களை அடுத்த பதிவில் எழுதுகின்றேன்....
உயிர்ச்சேதமே இருக்கக் கூடாது...
பதிலளிநீக்குஒவ்வொரு முறையும் விமர்சம் எழுதியதும் காணாமல் போய்விடுகின்றது. உங்கள் ஸ்பேர்ம் பகுதியில் பார்க்கவும்.
பதிலளிநீக்குஇவ்வளவு முன்னேச்செரிக்கையுடன் செயல்படுவது பாராட்டத் தக்கது.அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இயற்கையின் சீற்றத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முனைவோம்.
பதிலளிநீக்குவாங்க!
பதிலளிநீக்குஇதில் வைகைப் புயல்; வைகோ புயல் இல்லையா?
உங்களுக்கு த. ம. வோட்டு Plus 1 போட்டுள்ளேன்!
புயலால் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. நலமே எண்ணுவோம்!
பதிலளிநீக்குபெரியளவில் பாதிபில்லாமல் தப்பித்தால் நல்லது. மழையும் வேண்டும் ஆனால் பதிப்பும் கூடாது! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குஉயிர்ச்சேதம் அதிகமில்லை தனபாலன். இன்றுதான் அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஎத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் இயற்கைக்கு முன் நாம் வெறும் தூசு என்று நிரூபித்துவிட்டது இந்த புயல்! பாதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடைய ஒன்றிரண்டு மாதங்கள் ஆகலாம். வருகைக்கு நன்றி முரளிதரன் அவர்களே!
பதிலளிநீக்குநலமாக இருக்கீங்க தானே?
பதிலளிநீக்குஜோதிஜி! ஸ்பேம் பகுதியிலும் தங்கள் விமர்சனம் இல்லை. எதனால் அப்படி ஆகிறது என்றும் தெரியவில்லை.
பதிலளிநீக்குநலமாக இருக்கிறேன். இன்றுதான் புயல் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி கலிங்கநகர் பகுதிக்கு வந்தேன். பெர்ஹாம்பூர் பகுதி சீரடைய குறைந்தது ஒரு மாதமாகலாம். தங்களின் அக்கறைக்கு நன்றி ஜோதிஜி!
பதிலளிநீக்குநம்பள்கி! தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஉஷா அன்பரசு! உயிர்ச்சேதம் அதிகமில்லை என்பதே ஆறுதல்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குஆனந்த்! இரண்டாவது நாளிலேயே மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள். மின்சாரம் மட்டும்தான் பிரச்னை..... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு