புதன், 2 அக்டோபர், 2013

என் நண்பருக்கு நேர்ந்த அவலம்!

காவல் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். எப்போதிலிருந்து என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கைக்கூலிக்கு அடிமைச் சேவகம் ஆரம்பித்தபோதே இந்த மரியாதைக்கு(!?) உரியவர்களாக ஆனார்களோ என்னவோ தெரியாது. 

ஆனாலும் மக்களுக்கு காவலனாக இருக்க வேண்டிய காவல் துறை மரியாதை இழந்து போனது கூட பரவாயில்லை. அதிகாரங்களில் இருக்கும் கட்சியின் வட்டம் மாவட்டத்துக்கெல்லாம் கூட அடிமைச் சேவகம் பார்ப்பதுதான் வேதனை. சாமான்யன் ஏதோ ஒரு காரணத்துக்காக (தவறு செய்திருந்தாலும் செய்திருக்காவிட்டாலும்) காவல் நிலையம் சென்று முழுசாய் திரும்பி வருவது என்பது நடக்காத காரியம்.

விபரம் தெரிந்த படித்தவர்கள் எனில் கொஞ்சம் வாதாடியோ அல்லது போராடியோ பார்க்கலாம். ஆனாலும் பொய் வழக்கு என்கிற ஆயுதம் எப்போது பிரயோகிக்கப்படுமோ என்று அஞ்சவேண்டிய நிலைதான் அவர்களுக்கும். கிடைக்கிற கொஞ்ச அவகாசத்திலேயே எதிர்த்துப் பேசுகிற (அவர்கள் மொழியில்) சட்டம் பேசுகிறவரை உண்டு இல்லை என்று ஆக்குவதில் மாகா கில்லாடிகள் இந்த காவல்காரர்கள்.

இதற்கு பயந்துதான் நல்லவர்கள் பலரும் காவல்நிலைய வாசலை மிதிப்பதையே இழுக்கு என்று எண்ணத் தொடங்கினார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கோ இது ஒரு பிழைப்பின் ஒரு பகுதி. மான அவமானங்களுக்கு அங்கே இடமில்லை. இன்னும் சொல்லப்போனால் இது அவர்களுக்கு கிடைக்கிற விளம்பரம். அதனால்தான் காவலர்கள் கைது செய்து கொண்டுபோகும்போது கூட கவலையே இல்லாமல் கையசைத்து புன்சிரிப்போடு செல்ல முடிகிறது இவர்களால்!

ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவும், சமூக அவலங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு அப்படியில்லை. ஒரு முறை காவல் நிலையத்தின் பதிவேட்டில் பெயர் ஏறிவிட்டால்  வாழ்க்கை முழுவதும் போராட்டமாகக் கூடிய அபாயமுண்டு. அதனால்தான் குழுவாக அமைப்பாக போராடத் துவங்கியது. தனிமனித போராட்டங்கள் இப்படிப்பட்ட காவல்துறை இருக்கும் நாட்டில் அடக்கி ஒடுக்கப்படுவதில் ஆச்சர்யமேதுமில்லை.


என்னுடைய நண்பர் திரு. சண்முகம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் குரிசிலாப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். 1986-லிருந்தே அறிமுகமானவர். சிறந்த அரசியல் விமர்சகர், சமூகப் போராளி, படிப்பாளி, வழக்குறைஞர், தொழில் நுட்ப வல்லுனர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவரது வாசகர் கடிதம் வராத பத்திரிகையே கிடையாது. பத்திரிகைகளில் இப்படி வாசகர் கடிதம் எழுதுவது என்பதை இவரைப் பார்த்துதான் நான் கற்றுக்கொண்டேன். 

1988-ல் 'கல்கி' வார இதழில் மாவட்ட வாரியாக பிரச்னைகளை ஆராய்ந்து சிறப்பிதழாக வெளியிட்டுக்கொண்டிருந்த நேரம். வடார்க்காடு மாவட்ட பிரச்னைகள் குறித்து எழுதி அனுப்பலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன், நான் எங்களூரின் குடிநீர்ப்பிரச்னை, பள்ளிக்கட்டிட பிரச்னை, நூலகம் குறித்த பிரச்னை என முக்கியமான சிலவற்றை பட்டியலிட்டு அனுப்பி வைத்தேன். அதே நேரம் எனது நண்பரான சண்முகமும் எழுதியனுப்பியிருக்கிறார். 

சிறப்பிதழ் வெளிவந்தபோது நான் அடைந்த அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம், நான் குறிப்பட்டிருந்த பிரச்னைகள் குறித்த புகைப்படம், ஊர்ப்பெயர் முதலானவை மேலட்டையிலேயே வெளியிட்டிருந்ததுதான். இன்னொரு ஆச்சர்யமும் அதில் இருந்தது. அது திரு. சண்முகம் அவர்களின் புகைப்படமும் மேலட்டையிலேயே இருந்ததுதான். அது முதற்கோண்டு 'தினமணி' துக்ளக் போன்ற பத்திரிகைகளில் எங்களது இருவர் வாசகர் கருத்துக்களும் தவறாது இடம் பிடிக்கும்.

இந்த 'மறக்க முடியாத நினைவுகளை' ஆரம்பித்த புதிதில் அவரது சில கடிதங்களையும் பதிவாக்கியிருந்தேன் (இணைப்புகள் கடைசியில்). ஏதோ சில காரணங்களால் அவரது தொடர்பு விட்டுப்போயிற்று. சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தபோது என் நண்பன் சுப்பிரமணி மூலமாக மீண்டும் அவரது தொடர்பைப் பெற்றேன். இரண்டு நாளைக்கு முன்பு  திடீரென்று ஒரு குறுஞ்செய்தி. அதில் இந்த வார 'ஜூனியர் விகடனை'ப் பார்க்கவும் என்றிருந்தது. அடுத்த நாளில் மேலே உள்ள ஜூ.வி.யின் செய்தி தாங்கிய புகைப்பட நகலையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

செய்தியின் சாரம் இதுதான், முழு நேர மக்கள் பணியில் சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் இவரை கடந்த 1988 முதல் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் 'ரௌடிகள் மற்றும் கேடிகள்' லிஸ்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். நேரிடையாக மோதினால் நியாயம் கிடைக்காது என்பதானால் ஜூனியர் விகடனை அனுகியிருக்கிறார். இந்த விஷயம் 29.09.2013 ஜூ.வி.யில் வெளிவந்திருக்கிறது. மாவட்ட எஸ்.பி.யிடமும், உள்ளூர் காவல்துறையிடமும் ஜூ.வி. பேசியிருக்கிறது. விரைவில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

திரு. சண்முகம் எனக்கு கடந்த காலத்தில் எழுதிய கடிதங்களின் இணைப்பு;


11 கருத்துகள்:

  1. விமர்சனம் ஸ்பேர்ம் பகுதிக்கு சென்று விட்டது.

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் ஒரு முறை எழுதலாமே! உங்கள் கருத்தைக் காண ஆவலோடு இருக்கிறேன். முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அடப்பாவிகளா...? முழு நேர மக்கள் பணியில் இருந்தால் இப்படியா...?

    கண்டிப்பாக நியாயம் கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    நல்லது செய்தால் உலகம் ஆயிரம் பேசும்............... தடைகள் தாண்டி வெற்றி பிறக்கட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. சமூக சேவை செய்கிறாயா முதலில் உனக்கு எதிரிகளை உருவாக்கிக் கொள்

    பதிலளிநீக்கு
  8. ஆத்மா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. I read this article completely on the topic of the comparison of most recent and preceding technologies,
    it's awesome article.

    My site :: bongs ()

    பதிலளிநீக்கு
  10. இது தொடர்பான செய்திகளை படித்த போது இதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் வரைக்கும் சம்மந்தப்பட்டவர்கள் எடுத்துச் சென்ற போதிலும் குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் என்ற போதிலும் அவர்கள் கொடுத்த பதில் ஆகட்டும் பார்க்கலாம் என்பதே.

    பதிலளிநீக்கு
  11. சட்டம் ஒரு இருட்டறை என்பது நாம் அறிந்ததுதானே ஜோதிஜி அவர்களே!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!