அன்புள்ள நண்பருக்கு,,
தோழி பாகீரதி எழுதிக்கொள்வது. தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
மிக்க நன்றி. ஆனந்தவிகடன் செய்தி நான் எதிர்பாராத, என்னை பல சங்கடங்களுக்கு உள்ளாக்கிய
ஒன்று.
எனது வகுப்புத்தோழர் ஒருவர் ஆனந்த விகடனில் புகைப்படக்காரராக
இருந்தார். ஒரு நாள் என்னிடம் வந்து உனது எதிர்கால கனவு என்னவென்று கேட்டார். பதிலளித்தவுடன்
எனது சில புகைப்படங்களையும் வாங்கிச்சென்றார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.
ஆனால் இன்று தங்களைப் போன்ற ஒருவர், இருவர் அல்ல முப்பதுக்கும்
மேற்பட்ட நண்பர்கள் கடிதம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் எனது வகுப்புத்தோழர்.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் என் குடும்பத்தில் பட்ட,
பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டத்தினை நினைத்து வேதனையடையாத நாளில்லை. பணம் என்ற ஒரு காகிதம்
செய்யும் லீலைகளுக்கு அளவே இல்லாது போய்விட்டது. அதனால் நாங்கள் படும் துன்பம் கொஞ்ச
நஞ்சமல்ல. அதனாலேயே என்னப்போல துன்பப் படுபவர்களின் நிலைபால் எனக்கு இரக்கம் உண்டு.
நான் பார்த்துக்கொண்டிருக்கும் சில மனிதர்களின் தீராக் கஷ்டத்தினை என்னால் தீர்க்கவியலுமா
என்று எண்ணி ஏங்குவதுண்டு.
என் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவரின் மகள் வயது 13-இருக்கும்.
மனவளர்ச்சி குன்றிய பெண். அவளால் அவள் தாய்-தந்தையர் படும் துன்பம் அதிகம். பருவமடைந்த
எந்தவித உடல் மன வளர்ச்சியில்லாத அந்தப் பெண்ணை பாதுக்காக்கவும், மருத்துவத்திற்காக்கவும்,
கல்விக்காகவும் அவர்கள் படும் அல்லல் அதிகம். அதைப் பார்க்கும் போதெல்லாம் நான் ரத்தக்
கண்ணீர் வடிக்கின்றேன்.
இது தவிர, பெற்ற தாய்-தந்தையரை வயது முதிர்ந்த பின் பிள்ளைகள்
அவமதிக்கின்ற மன்னிக்கமுடியாத செயல், கணவன் சரியில்லாத காரணத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு
அனுப்பாமல் கூலி வேலைக்கு அனுப்பும் நிலை. இதெல்லாம் நான் நாள்தோறும் பார்த்து மனதுக்குள்
வருந்தி, என்னால் முடிந்த அவர்கள் மகிழ்ச்சியடையக் கூடிய சின்னச்சின்ன உதவிகளை செய்ய
ஆசைப்படுபவள். இதைத்தான் என் வகுப்புத் தோழரிடம் ‘மற்றவர்க்கு இல்லை என்று சொல்லாமல்
உதவி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தேன். இந்த ஒரு வரிதான் நான் சொன்னது.
உண்மையில், என் பேட்டியில் ‘அன்னை தெரசா’
பற்றி நான் சொல்லாததை சேர்த்து எழுதி என்னை பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நான் சொல்லாத
ஒரு செய்திக்காக எனக்கு கிடைத்த இந்த புகழ்ச்சியை என் மனம் ஒத்துக் கொள்ளவே இல்லை.
அன்னையின் மூச்சுக் காற்றுக்கு ஈடாக ஒருவர் பிறக்க இயலுமா என்பது கூட சந்தேகம். சாதாரண
பேட்டியை இந்த அளவுக்கு ஏன் பத்திரிகை மிகைப் படுத்தியது என்று என் நண்பன் மேலேயே எனக்கு
கோபம்தான்.
தாங்கள் இப்போது என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என் குடும்பம்
நடுத்தர வர்க்க நிலையைத் தொட தருமாறும் குடும்பம்தான். பொருளாதார நிலையை பெருக்கிக்
கொள்ள முயற்சியை மேற்கொண்டுள்ளேன். மனசாந்திக்காக என் வருமானம் மூலம் மற்றவருக்கு உதவ
நினைக்கும் பெண் அவ்வளவுதான்.
நான் எல்லோரிடமும் நன்றாக பழகுவேன். அதே சமயம் ரோம்பவும் இரக்கப்படுவேன்.
இப்படி யாராக்காவது உதவலாமே என்று ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்தேன். ஆனால் அதிலோ
பணக்காரர்களிடமிருந்து பணம் வசூலிப்பதையை சேவை மனப்பான்மையாக கொண்டிருந்ததால் அதிலிருந்து
விலகிவிட்டேன். உண்மையான அன்பு, இரக்கம் உள்ளவர்களையே நான் அங்கு எதிர்பார்த்தேன்.
அது அங்கு யாரிடமும் இல்லை.
எனது அம்மா உங்கள் கடிதம் படித்து மிகவும் சந்தோஷப்பட்டார்.
ஆனந்த விகடனில் வந்த ‘என் கனவு’ என்ற சிறிய பேட்டி மூலம் தங்களைப் போன்ற நட்புகள் கிடைத்ததே
மிகப்பெரிய வரம். அதற்கு காரணமான விகடனுக்கும் கோடி நன்றியினை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.
அன்புடன் பாகீரதி.
மற்றவர்களுக்கு உதவாவிடுனும் உதவவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தாலே போதும்...
பதிலளிநீக்குவாழ்க்கை நம்மை தனித்து காட்டும்...!
எலல்ாம் மாறும்... வாழக்கை என்பதே மாறக்கூடியதுதானே...! நம்பிக்கையோடு நடைப்போடுங்கள.....
நட்பு வானத்தை வில்லாய் வளைக்கும், பூமியை பந்தாய் சுருக்கி நம் கையில் தரும்
பதிலளிநீக்குமனவளர்ச்சியற்று வளர்ந்த பெண்கள் வாழ்க்கை கொடுமையானது.
பதிலளிநீக்குவருகைக்கும், பகிர்விற்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்தின்கும் மிக்க நன்றி ராஜி அவர்களே!
பதிலளிநீக்குஉண்மைதான் ஜோதிஜி! தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்கு