புதன், 17 ஜூலை, 2013

கமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…


நான் முதன் முதலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பார்த்தது திரையில் தான். அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும். பரமக்குடியில் மதுரைவீரன் 101 நாட்கள் ஓடியது. ஓடிய அத்தனை நாளும் மாலைக் காட்சிக்கு என்னைக் கூட்டிப் போயே ஆகவேண்டும். அதுதான் எனக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட முதல் பரிச்சயம்.

அதற்குப் பிறகு அதிர்ஷ்ட வசத்தால், ‘ஆனந்த ஜோதிபடத்தில் அவருடன் நடித்தேன். அருணாசலம் ஸ்டுடியோவில் படம் எடுத்தார்கள். எம்.ஜி.ஆரைப் போல சண்டை போடவேண்டும் என்று நானும் படத்தில் நடிக்க வந்த இன்னும் சில சிறுவர்களும் சண்டை போடுவோம். சண்டை நிஜமாகவே ஆகிவிடும். ஒரே தகராறுதான். அவர்தான் வந்து தீர்த்து வைப்பார்.

அப்போதெல்லாம் எனக்கு எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடிக்கிறோம் என்ற நினைப்புதான். பள்ளிக்கூடத்தில் போய் பெருமையாக சொல்லிக் கொள்வேன்.

ஒரு முறை தோட்டத்துக்கு கூட்டிப் போனார்கள். அங்கே ஒரு காட்சி படமெடுத்தார்கள். மதியம் சாப்பாடு எல்லோருக்கும் அவர் வீட்டிலேதான். எனக்கு பலாப்பழத்தை தேனிலே தோய்த்து என் வாயிலே ஊட்டி விட்டார். அது இன்னும் பசுமையாக நினைவிருக்கு. அப்புறம் பூஜை அறை மாதிரி ஒரு அறைக்கு என்னை கூட்டிப் போனார். அங்கே அவரது அம்மா படத்தை வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிக் காட்டினார். என்னோடு அன்பாக இருந்தார்.

அதற்குப் பிறகு ரொம்ப நாள் அவரோடு தொடர்பில்லாமல் போய்விட்டது. மறுபடியும் நான் அவரைச் சந்தித்தது ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில்தான். நான் அதில் உதவி நடன ஆசிரியராக பணி புரிந்தேன். என்னைப் பார்த்தார். வா என்று கூப்பிட்டார். போனேன், நீ… என்னோட நடிச்சே இல்லே, இப்போ என்ன பண்ணுகிறாய்? ‘திரும்ப நடிக்கிறதுல விருப்பம் உண்டா உனக்கு?’ என்று கேட்டார். தெரியலீங்க, ‘இப்போதைக்கு இதுதான் பண்ணிகிட்டிருக்கேன்’ என்றேன்.

எதுவா இருந்தாலும் உடம்பை நல்லா வச்சுக்க. இப்பவே உடற்பயிற்சி பண்ண ஆரம்பித்தால் தான் நல்லது. உடற்பயிற்சி பண்ணும்போது இரத்தம் முகத்துக்கும் கிடைத்து முகம் தெளிவாக இருக்கும்படியாகவும் செய்ய வேண்டும் என்று ஒரு பயிறசியை சொல்லிக் கொடுத்தார். ஆறேழு மாதம் விடாமல் அதைச் செய்தேன். மறுபடியும் அவரைச் சந்தித்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்.

என்னோடு வந்திருந்த டான்ஸ் மாஸ்டர் ரகுவின் பருத்த உடம்பைப் பார்த்துவிட்டு ‘உடம்பை இப்படி வைச்சுக்கொள்ளனும்’ என்று என்னைக் காட்டினார்.

மறுபடியும் ஒரு விழாவில் பார்த்தேன். பேசினேன். என் படம் ஏதாவது பார்த்தீர்களா என்றேன். மன்மதலீலை பார்த்தேன் என்றார். அது அவர் அரசியலில் தீவிரமாக இறங்கின நேரம். என்னோட நல்ல படங்கள் வரும்போது சொல்கிறேன். நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
‘நல்ல படம், கெட்ட படம் என்று தெரிந்தே பண்ணுகிறாயா நீ?’ எல்லா படங்களையும் நல்ல படங்களாக நினைச்சு பண்ண வேண்டும். அப்படி நினைக்காது போனால் அந்தப் படத்தை செய்யாதே!’ என்றார். 

அதற்குப் பிறகும் அவரை சந்திக்கிற போது கொஞ்சம் தவறுகள் செய்திருந்தேன். அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுறை சொன்னார். ‘நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யக்கூடாது. ‘உங்களுக்காக நாங்கள் 100 படி ஏறி வந்திருக்கிறோம். நீங்களும் ஒன்று இரண்டு என்று நாறு படி ஏறி வர முயலக்கூடாது. நூறாவது படியிலிருந்து ஏறி வரவேண்டும்’, என்றார்.

அவரை முதன் முதலாக மாத்திரமல்ல; ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அண்ணன் சாருஹாசனை பார்க்கும் போது எனக்குள் என்ன உள்ளுணர்வு ஏற்படுகிறதோ அதேதான் ஏற்படுகிறது.

எனக்கு கல்யாணம் ஆகிறபோது’ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’ என்று முதல் அழைப்பிதழை அவருக்குக் கொடுத்தேன். எந்த இடம், எந்த தேதி என்று கேட்டார். ஒரு பேச்சுக்கு கேட்கிறார். எங்கே வரப்போகிறார், என்று நினைத்திருந்தேன். ஆனால் பம்பாயில் நடந்த என் கல்யாணத்துக்கு கடைசி நேரத்தில் வந்துவிட்டார். என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. 

நிரம்ப நேரம் அங்கிருந்து குடும்பத்தாரோடு பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டு என்னை வாழ்த்திவிட்டுப் போனவர் எனக்கு இன்னொரு அண்ணன்தான்.

             - கமலஹாசன்.

8 கருத்துகள்:

  1. தலைவரின் அறிவுரை தொடர்வது இன்றைய சூழ்நிலைக்கு சிரமம் தான்...

    கமல் அதிர்ஷ்டசாலி தான்...!

    பதிலளிநீக்கு
  2. நெகழ்சியான தருணங்கள். .
    கமல் எந்த பேட்டியில் இதை சொன்னார். .? முழூ பேட்டியும் இது மட்டும்தானா. .??

    பதிலளிநீக்கு
  3. சிறந்த நடிகர் கமல் பற்றிய முன்னால் முதல்வருடனான நிகழ்வுகள் சிறந்த நினைவுகள்

    பதிலளிநீக்கு
  4. திண்டுக்கல் தனபாலன்!

    தங்களின் தொடர் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. துருவன்!

    வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி! ஒரு வார இதழில் கமலின் பேட்டிதான் இது. 1983-ல்.

    பதிலளிநீக்கு
  6. மாலதி!

    தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தலைவர் சொல்லிக்கொடுத்த ஒன்றே ஒன்று மட்டும் இப்போதும் தொடர்ந்து செய்து வருகிறேன் அது உடற்பயிற்சிதான் என்று கமல் எப்போதும் சொல்லி மகிழ வாசித்து இருக்கிறேன்....!

    பதிலளிநீக்கு
  8. நாஞ்சில் மனோ!

    தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!