இலங்கையிலிருந்து வந்த நந்தினியின் கடிதத்திற்கு பதில் கடிதம் போட்டு பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் பதில் கடிதம் வரவேயில்லை. போர்ச்சூழல் காரணமாக அவர்கள் இடம் பெயர்ந்திருக்கலாம் என்றெண்ணி நானும் மறந்து போனேன். ஆனால் திடீரென்று ஒருநாள் இலங்கையிலிதுந்து கடிதம் ஒன்று வந்தத்து. ஆனால் அது நந்தினியிடமிருந்து இல்லை?!
அவரின் 20 வயது தங்கையிடமிருந்து. நான் மகிழ்ச்சியல் பூரித்துப் போனேன். நட்புக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும், இந்தியாவின் பாலும், தமிழகத்தின் மீதும் அவர்கள் வைத்திருந்த பற்றும் ஆச்சர்யப்பட வைத்தது.
நமது தமிழ்க்கலாச்சாரம் என்பதும், தமிழரின் எண்ணங்களும் எந்த நாட்டிற்குப் போனாலும் மாறாது வேரூன்றி இருப்பது கண்டு நாம் பெருமை பட்டுக்கொள்தில் தவறில்லை என்றே தோன்றியது.
ஆனால் துரதிஷ்டவசமாக நந்தினியிடமிருந்தும் சரி, யாழினியிடமிருந்தும் சரி ஒரே ஒரு கடிதத்திற்குப் பிறகு இரண்டாவது கடிதம் வரவேயில்லை. அது இன்றுவரை மனதில் ஒரு ஏக்கமாகவே இருக்கிறது. இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள். இலங்கையிலா அல்லது வெளிநாட்டிலா எதுவுமே தெரியவில்லை.
தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் அவர்களும் முகப்புத்தகம், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களிலோ அல்லது பிளாகர், வேர்ட்பிரஸ் தளங்களை வாசிப்பவர்களாக இருந்தாலோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்கள் இதைப் படித்து தெரிவித்தாலோ எத்தனை சந்தோஷம் அடைவேன். இது நடக்குமா? நடக்கவே நடக்காது என்று சொல்வதற்கும் இல்லை. பார்ப்போம்.
கீழே யாழினியின் கடிதம்.
அன்புடன் அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள்!
இம்மடல் தங்களை வியப்பிலாழ்த்தும். ஆச்சர்யப்படவைக்கும். அயினும் மேலுள்ள முகவரி சிறிதளவு தெளியவைக்கும். தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மடல் வரைந்த ‘நந்தினி’ என்பவரை மறக்கமுடியாது என்று நினைக்கிறேன். அவரின் சகோதரியே நான். துரதிஷ்டமோ அல்லது அதிர்ஷ்டமோ தங்களுக்கு நானே மடல் வரைய வேண்டியுள்ளது. அதற்காக எனது சகோதரியின் நிலை எப்படியோ?...... என எண்ணாதீர்கள். அவர் நலமே. மருத்துவப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.
நிற்க!
இவ்வளவு காலமாய் மடல் எழுதாமை பற்றி தாங்கள் என்ன நினைத்தீர்களோ தெரியாது. ஆனால் இலங்கைத் தமிழர்களாகிய எமது நிலை பற்றி அறிந்திருப்பீர்கள். இடம் பெயர்வுகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் இன்றுதான் மடல் வரையமுடிந்தது. அதற்காக தயவு செய்து மன்னிக்கவும்.
மேலும் நட்பின் முதல் அம்சம் அறிமுகப்படலம்தானே!
எது பெயர் யாழினி! ஆனால் இந்திய இராணுவத்தினர் இங்கிருந்தபோது எனது பெயரை வானொலியின் பெயரா எனக்கேட்டனர்?! வயது 20. தமிழை சிறப்புப் பாடமாகவும், பொருளியல், இந்து நாகரிகம், அளவியலும் விஞ்ஞானமுறையும் எனும் பாடங்களை உப பாடங்களாகக் கொண்டு பரீட்சை எழுதிவிட்டு முடிவிற்காகக் காத்திருக்கிறேன். மற்றும் படி கவிதை, சிறுகதை, சிறியளவு ஓவியத்திறமை போன்றன உண்டு.
இவை தற்போதைக்குப் போதும் என நினைக்கிறேன். எமது நட்பு தொடரும் பட்சத்தில் ஏனையவற்றையும் எழுத ஆவலாக உள்ளேன். எமது யாழ்ப்பாணத் தமிழர்கள் நட்பை மிகவும் நேசிக்கிறார்கள். மதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? எழ முடியாமல் விழும்போதெல்லாம் தோள் கொடுத்து எழுப்பி விடுவது நட்புதான். அவ்வகையில் என் பிரிய நாடான இந்தியாவில் எனக்கு ஒரு குடும்பம் நட்பாக அமைந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு இந்தியாவில் காலடி பதிக்க ஆசை. மகாத்மா காந்தி பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசை. பாரதியார் பிறந்த இல்லத்தை கண்குளிரக் காண ஆசை. அன்னை தெரசா வாழ்ந்த பூமியை, எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை, எம்மை ஆதரிக்கும் தமிழ்நாட்டை, காவிரித்தாயை, தஞ்சையை, கவிஞர்களை............... இப்படி பல ஆசைகள் உண்டு. காலம் வரும்போது கண்டிப்பாக வருவேன்.
மிக்க நன்றி! அன்புடனும் நட்புடனும்,
வீ. யாழினி.
கோவில்கடவை.
ஸ்ரீலங்கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!