புதன், 28 செப்டம்பர், 2011

வெளிநாட்டு மோகம்!

நம் எல்லோருக்கும் வெளிநாட்டு மோகம் இருப்பதை மறுக்க முடியாது. அது வேலைக்காகவும் இருக்கலாம். சுற்றிப் பார்க்கவும் இருக்கலாம். ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை யாரும் உணர்வதே இல்லை. 


நானும் கூட கொஞ்சநாள் இப்படிப்பட்ட வெளிநாட்டு மோகத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறை அந்த வாய்ப்பு வந்து கை நழுவிப் போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அதுபோல.



பல விதங்களில் முயன்று கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் பார்த்து விண்ணப்பிப்பது மட்டுமல்லாது தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாரிடத்தும் சொல்லி வைத்திருந்தேன். ஒருமுறை ‘மார்க்யூப் என்ற ஒரு அமெரிக்க நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தங்களின் கிளையை அமைக்க விரும்பி அதற்கான பணிகளைத் துவங்கி ஆட்களையும் தேர்வு செய்யத் தொடங்கியிருந்தார்கள். 


நானும் விண்ணப்பித்து இறுதி நிலை வரை போய் கடைசியில் தேர்வு செய்யப்பட்டேன். அடுத்த பதினைந்து நாட்களில் அமெரிக்காவிற்கு ஆறு மாதம் பயிற்சிக்காக அனுப்பப்போவதாகவும் அதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துகொள்ளுமாறும் அறிவித்துவிட்டர்கள்.


மகிழ்ச்சிக்கு சொல்ல வேண்டுமா? அமெரிக்கக் கனவுகளில் நான் மூழ்கியிருந்த நேரம் வாஜ்பாயியின் (13 நாள் அரசோ அல்லது 13 மாத ஆட்சியோ சரியாக நினைவில்லை) அரசு போக்ரானில் அணுவெடிச் சோதனையை நடத்தியது. அமெரிக்காவிற்குத் தாங்குமா?! இந்தியா மிது பொருளாதாரத் தடையை விதித்தது. நான் தேர்வு செய்யப்பட்ட அந்த அமெரிக்க நிறுவனம் இங்கு தொடங்குவதும் தடைபட்டது. என் ஆசை நிராசையானது.


இப்படி பல சமயங்களில் வாய்ப்புகள் கை நழுவிப்போயிருக்கிறது. என்றாலும் முயற்சியை விட்டுவிடவில்லை. நான் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் காவியா என்ற பெண் எங்களோடு நன்றாக பழகிவந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது அவளுக்கு சிங்கப்பூரில் ஒரு தோழி இருப்பதாக சொன்னாள். நான் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வதைக் கூறி அவரை அறிமுகப்படுத்துமாறு கேட்டேன். இரண்டு பேரும் சேர்ந்து சிங்கப்பூர் தோழிக்கு கடிதம் எழுதினோம். அங்கிருந்து காவியாவிற்குப் பதிலாக எனது முகவரிக்கு பதில் வந்தது. நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். காவியா அப்புறம் லைனிலேயே இல்லை.


இந்த சிங்கப்பூர் தோழியின் பெயர் ஜெஸி. மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். சென்னயிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எழுத, படிக்கத் தெரியும். அப்புறம் எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. அப்புறம் என்ன காரணத்தினாலோ நின்று போய்பிட்டது. இப்போது எங்கே எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.


இதற்கு முன்பே வெளிநாட்டிலிருந்து இருவர் அறிமுகம் ஆகிமாயிருந்தனர். ஒருவர் இலங்கையிலிருந்து யாழினி. இன்னொருவர் அமெரிக்காவிலிருந்து சுப்பிரமணியம். இதே காலகட்டத்தில் எனக்கு மயிலாடுதுறையிலிருந்து அறிமுகமானவர் மாலா என்கிற தோழி. இவர்களின் கடிதங்களையெல்லாம் இன்றுவரை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன். ஒரே வருத்தம் என்னவென்றால் என் கடிதங்களின் கதி என்னவாயிற்று என்பதுதான். எல்லோரும் என்னைப்போல பைத்தியக்காரத்தனமாய் குப்பைகளைச் சேர்த்து வைத்திருப்பார்களா என்ன?!

அந்த என் கடிதங்களையும் பதிவு செய்ய மனம் ஏங்குகிறது. என்னுடைய எழுத்தும்,சிந்தனையும் எண்ணமும் அப்போது எப்படியிருந்தது என்று பார்க்க ஆசையிருக்காதா? எந்த நண்பர்களையும் இப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்யாணம் வரை இருக்கும் காதலைப் போல, உயிருக்குயிரான நட்பு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் என நினைக்கிறேன். கடிதம் எழுதுதில் இருந்த ஆத்ம திருப்தியும், காத்திருத்தலும் இந்த நவீன யுகத்தில் இல்லாமற் போனது வருத்தமளிப்பதாய் இருக்கிறது 


தோழர்களே! உங்களுக்கும் இருந்தால் இங்கே வந்து அதைப் பகிரலாமே!


3 கருத்துகள்:

  1. பழைய தோழமைகளை மீட்டி பார்த்துள்ளீர்கள்
    அருமையான பதிவு
    எனக்கு இப்படி கடித தொடர்பில் நண்பர்கள் இருந்ததில்லை

    பதிலளிநீக்கு
  2. ஆம் மதுரன்! அதனால்தான் என் வலைத்தளத்துக்குப் பெயரே 'மறக்க முடியாத நினைவுகள்'. இன்னும் கடிதங்கள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் ஆவனமாக்கும் முயற்சிதான் இது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரன்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் முயற்சிகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!