செவ்வாய், 30 டிசம்பர், 2014

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

சென்ற மாதம் கடவுச்சீட்டு பெறுவது சம்பந்தமாக சொந்த ஊர் செல்ல நேரிட்டது. எப்போதுமே இரயிலில் முன்பதிவு செய்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம். வாராந்திர இரயிலான சந்திராகாச்சி-திருவணந்தபுரம் இரயிலில்தான் எனக்கு இடம் கிடைத்தது. பொதுவாக இரயில் பயணங்களில் யாருடனும் பேசுவதும் பழகுவதும் கிடையாது. பக்கவாட்டு மேல் படுக்கையத்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஏனென்றால் சாப்பட்டு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டோ/தூங்கிக்கொண்டோ  செல்லலாம்.

தமிழர்கள் என்றாலும் கூட நான் பேசுவதில்லை. வெட்டி அரட்டையோ பயனில்லாத பேச்சுக்களையோ நான் விரும்பாததும் ஒரு காரணம். அரிதாக சிலரிடம் பேசுவதுண்டு. அப்படித்தான் அன்று ஒரு தமிழரைப் பார்க்க நேர்ந்தது. சுமார் 55 வயதிருக்கும். சரளமாக ஹிந்தி பேசினார். எங்கே போகிறீர்கள் என்று பேச்சு கொடுத்து தன்னைப் பற்றி விவரிக்கலானார். அருகிலுள்ள பாலாசூர் என்ற இடத்தில் துணி வியாபாரம் செய்கிறாராம். ஒவ்வொரு இடமாகச் சென்று 'ஆர்டர்கள்' எடுத்து பின்பு தமிழ் நாட்டலிருந்து மொத்தமாக சரக்கை அனுப்புவதாகச் சொன்னார். இப்போது ஈரோடுக்கு பயணமாகிக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நிலையத்திலும் இரயில் நிற்கும் போதெல்லாம் அவருடைய உடைமைகளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு எதையாவது வாங்கப்போவார். தமிழ்நாட்டிலிருந்து இப்படி பலர் கூட்டமாக சேர்ந்து துணிமணிகளை மொத்தமாக கொண்டுபோய், அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வருவதாகச் சொன்னார். வியாரம் என்றால் கடை வைத்து அல்ல. ஆளுக்கு ஒரு சைக்கிளில் துணிகளை எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாக கிளம்பி விடுவார்களாம்.

ரொக்கமாக விற்காமல் தவணை முறையில்தான் அவர்களின் வியாபாரம் இருக்குமாம். கிராமத்து வாசிகள் எல்லாருமே மிகவும் நாணயமானவர்கள் தானாம். பணம் ஒழுங்காக வசூலாகிவிடுமாம். இரண்டு மூன்று மாதம் இப்படித் தங்கி வியாபாரம் செய்துவிட்டு, ஊர்ப்பக்கம் வந்து கொஞ்சம் தலை காட்டி விட்டு மீண்டும் கிளம்பி விடுவார்களாம். கிட்டத்தட்ட மாதம் நாற்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்று சாதாரணமாகச் சொன்னார். நம்மவர்களின் உழைப்பையும், எங்கிருந்தோ வந்த வேற்று மொழிக்காரர்கள்தானே என்ற பாகுபாடில்லாமல், ஏமாற்ற நினைக்காமல் பணத்தை ஒழுங்காக திருப்பிக்கொடுக்கும் மக்களையும் நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் ஒன்று அன்று நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இரயில் நின்றதும் பலர் நானிருந்த பெட்டிக்குள் ஏறி காலியாக இருந்த இருக்கைகளை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டனர். என்னுடைய இருக்கைக்கு அருகே ஒரு முப்பந்தைந்து அல்லது நாற்பது வயதான பெண்மணியும் அவரது தாயாரும் அமர்ந்தனர். பின்னர் ஆளுக்கு ஒரு இருக்கையில் படுத்துக் கொண்டனர். பின் என்ன நினைத்தாரோ எழுந்து என்னிடம் இந்த ரயில் சென்னைதானே போகுது என்று தெலுங்கில் கேட்டார்.

நான் இல்லை, இது கேரளா போகும் வண்டி. சென்னை போகாது என்றேன். என்னை ஏளனமாகப் பார்த்து, (என்னை ஏமாத்தப் பார்க்கிறியா? என்கிற ஏளனம்...) இது சென்னை போகிற வண்டிதான் என்று பதில் போடு போட்டார். நான் மீண்டும் சொன்னேன், இது சென்னை போகாது, கூடுரில் பாதை மாறி ரேணிகுண்டா, காட்பாடி வழியாக திருவணந்தபுரம் செல்கிறது என்றேன். அவர் இதை நம்பத் தயாராக இல்லை. என்னை நோக்கி... நீங்க எங்க போறிங்க என்றார். நான் காட்பாடி என்றேன். காட்பாடி எங்கே இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.

எந்தக் கவலையுமின்றி மீண்டும் தாயும் மகளும் படுத்துத் தூங்கத் தொடங்கினர். 'சாய்வாலா' ஒருவன் வந்தான். எழுந்து டீ வாங்கிக் குடித்துக் கொண்டே அவனிம் இந்த வண்டி சென்னை போகிறதா? என்று அவனிடமும் கேட்டனர். நிற்கிற வண்டியிலெல்லாம் ஏறி வியாபாரம் செய்கிறவனுக்கு எந்த வண்டி எங்கே போகிறது என்ற விவரமா தெரியும்?! அடுத்த ரயிலைப் பிடிக்கிற அவசரத்தில் ம்... போகுது, என்ற ஒன்ற்றைச் சொல்லோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அந்தப் பெண்மணியோ நான் பொய் சொல்லி விட்டதாக என்னைப் பார்த்து முறைப்போடு ஒரு பார்வை பார்த்தார். நான்  நம்பாவிட்டா போயேன்... என்று பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

அரை மணி நேர பயணத்திற்குப்பின் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்தார். ஒவ்வொருவரிடமும் பயணச்சீட்டைப் பரிசோதித்த அவர், அவர் இறுதியில் அந்த தெலுங்குப் பெண்மணிகளிடமும் விசாரித்தார். அவர்களிடம் இருந்தது முன்பதிவு செய்த சீட்டு அல்ல. சாராரண வகுப்பில் பயணம் செய்யும் சீட்டை வாங்கிவிட்டு முன்பதிவு செய்த இருக்கையில் அட்டகாசமாக அமர்ந்து வந்த அவர்கள் அப்பாவியாய் பரிசோதகரிடம் சீட்டை நீட்டினர். அப்போது அவர் எங்கே போகிறீர்கள்? ஏனிந்த பெட்டியில் ஏறினீர்கள் என்று சரமாரியாக கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தார்.

சென்னை போகிறோம் என்று சொன்னதும் இது சென்னை போகாது. கூடூரில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி முன் பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்ததற்கான அபராதமாக நூறு ரூபாயும் (ரசீது இல்லாமல்தான்) வசூலித்துக் கொண்டார். அவர் போனதும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமே! எனக்கோ பரிதாபம் ஒரு பக்கம் சிரிப்பு ஒரு பக்கம். என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார்கள். இரயில் நெல்லூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன் சிக்னலுக்காக நின்றது. இந்த இரண்டு பெண்மணிகளும் என்ன நினைத்தார்களோ தீடீரென ரயிலிருந்து கீழே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டனர்.

அவர்களுக்கு அவமானமாகப் போயிருக்கும் என நினைக்கிறேன். பயணங்களில் யாரையும் நம்பக் கூடாதுதான். அதற்காக இப்படியா? சரியாக விசாரிக்காமல் இந்த ரயிலில் ஏறியது முதல் தவறு. அதில் பயணம் செய்பவர்கள் எங்கே போகிறது என்று சொன்ன பிறகும் நம்பாதது இரண்டாவது தவறு. ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்காமல் இப்படி நடு வழியில் இறங்கியது மூன்றாவது தவறு.

ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு நேரத்தோடு சென்னை சென்று சேர வேண்டிய இவர்கள், இப்படி தவறுக்கு மேல் தவறு செய்தும் அதை உணராமல் மாலை மங்கிய நேரத்தில் நடு வழியில் இறங்கி அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கோ அல்லது இரயில் நிலையத்திற்கோ நடந்து சென்று அடுத்த இரயிலைப் பிடித்து எப்போது எத்தனை மணிகு சென்னை போய்ச் சேர்வார்கள்? என்ன மனிதர்கள் இவர்கள்? சக மனிதனை, சக பயணியை நம்பாதவர்கள்!?

வீடு போய்ச்சேரும் வரை இவர்கள் நினைப்பாகவே இருந்தது. என்னை இவர்கள் ஏன் நம்பவில்லை என்பது புதிராகவே இருந்தது! உறவினர்களும் கைப்பேசியில் இவர்களை வழி நடத்தியிருக்கலாம். (யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டனர்.) இவர்களுக்கு ஹிந்தி, தெலுங்கு கூடவே தமிழும் தெரிந்திருந்தது. ஆனால் பொதுவில் எப்படி யாருடன் பழகுவது, யாரை நம்புவது என்ற அடிப்படைப் பாடத்தைக் கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

6 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது… [Reply]

கொஞ்சம் கஷ்டமான பார்ட்டிதான்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆமா, சந்தேக சாம்பிராணி!

ஜோதிஜி சொன்னது… [Reply]

இவர்கள் இதன் பிறகும் திருந்த மாட்டார்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது… [Reply]

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்களின் புத்தாண்டு வாழ்த்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!