இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையிலிருந்து ஒடிஸாவிற்கு குடும்பத்தை இடம் மாற்றியிருந்தேன். ஜூலை மாத இறுதி என்பதால் குறிப்பிட்ட சில பள்ளிகளில் என் இளைய மகளுக்கு (ஒன்பதாம் வகுப்பில் சேர) இடம் கிடைக்க வில்லை.
பிரபலமான பள்ளிகளில் சேர்க்கை முடிந்து வகுப்புகள்
ஆரம்பமாகியிருந்தது.
மாநிலம் விட்டு மாநிலம் போகும்போது கல்வித்துறையிலிருந்து
சான்றிதழ் வேறு கொண்டு போகவேண்டும் என்று யாரோ சொன்னதன் பேரில் (என் மகள் படித்த
பள்ளியிலோ இதைப்பற்றிய எந்த தகவலையும் உறுதியாக சொல்லத் தெரியவில்லை என்பது
வெட்கக்கேடான விஷயம்) அலைந்து திரிந்து அங்கு போய்க்
கேட்டபோது, பத்தாம் வகுப்புக்கு மேல் என்றால்தான் சான்றிதழ்
தேவை. ஒன்பதாம் வகுப்பு என்பதால் அவசியமில்லை என்றார்கள்.
ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் கொண்ட பள்ளி ஒன்றில் சேர்த்துக்
கொள்வதாக சொன்ன பிறகே சென்னையிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கினேன். அதன் பிறகு அந்த பள்ளிக்குச் சேர்க்கைக்காக சென்ற போது கேள்விகளால்
துளைத்து எடுத்து விட்டார்கள். என் மகள் சென்னையில் படித்த
பள்ளியும் சி.பி.எஸ்.ஈ. பள்ளி என்று நினைத்தார்களாம். மெட்ரிக் பாடதிட்டம் என்று இப்போது சொல்கிறீர்களே என்றார்கள்.
முக்கியமாக இரண்டாவது மொழிப்பாடமாக எதை எடுப்பது என்பதில்
பிரச்னை. ஹிந்தியைத் தேர்வு செய்ததும், எப்படி அவளால் படிக்க
முடியும்? படிக்கத்தெரியுமா? எழுதத்
தெரியுமா என்றேல்லாம் கேள்விகள். ஏனென்றால் தமிழகத்தில்
படித்த பள்ளியில் இரண்டாவது மொழிப்பாடம் தமிழ்தான். (ஐந்தாவதிலோ
ஆறாவதிலோ ஒரு ஆண்டு ஹிந்தியை படிக்க முயன்று வேண்டாம் என்று ஒதுக்கியிருந்தாள்).
இப்போது சமாளித்துக் கொள்வேன் என்று சொன்னாலும் எப்படி முடியும்?
எங்கே... இதை வாசித்துக் காட்டு… என் கேள்விக்கு
ஹிந்தியில பதில் சொல்லுன்னு ஒரே தொணதொணப்பு. கடைசியாக
சேர்க்கைகாக நான் முதலில் அணுகியவரைப் பார்த்து மகளை பள்ளியில் சேர்த்தாயிற்று.
சில நாட்கள்
கழித்து வகுப்பெடுக்கும் போது பள்ளியின் தலைமை ஆசிரியை நீ தமிழையே இரண்டாவது
மொழிப்பாடமாக எடுத்திருக்கலாமே என்று மகளிடம் என்று கூறியிருக்கிறார். இதை மாலையில் வந்து அவள் என்னிடம் வந்து சொன்னபோது எனக்கு வியப்பாக
இருந்தது. உடனே மாற்றிக்கொடுக்க கேட்கிறதுதானே என்றேன்.
ஏற்கனவே காலதாமதாக சேர்ந்த்தினால் இனி முடியாது என்றிருக்கிறார்.
எப்படி இது
சாத்தியம் என்று மகளிடம் கேட்டபோது… தமிழை இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்துக் கொள்வதில்
எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இங்கு தமிழ்
கற்பிக்க யாரும் இருக்க மாட்டார்கள். பாடப் புத்தகத்தை (தமிழகத்தில்)வாங்கி வீட்டில்
படித்துக்கொள்ள வேண்டும் என்றாள்.
ஆரம்பத்தில்
சேர்க்கைக்காக அணுகிய போது இதைச் சொல்லியிருந்தால் என் மகளுக்கு ஹிந்தி படிக்க
வேண்டிய அவசியம் இருந்திருக்காது. சரி விடுப்பா… ஹிந்தி கத்துக்கிறதும்
நல்லதுதானே! தமிழ்தான் உனக்கு ஏற்கனவே தெரியுமே என்று சமாதானப்படுத்தினேன். எப்படியோ
இரண்டு வருடங்களில் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியுடனும், தனிவகுப்பு எடுத்தும்
ஹிந்தி ஓரளவிற்கு கற்று தேர்வெழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று விட்டாள்.
பிள்ளைகளின் மேற்படிப்பு இங்கு சரி வராது என்று எனது குடும்பத்தை ஒடிஸா மாநிலத்திலிருந்து தமிழ்
நாட்டிற்கு (வேலூர்) மாற்ற முடிவெடுத்தேன். வேலூரில் +2 சேர்க்கைக்காக நான் அணுகிய அந்தப்பள்ளி சாதாரணமானது அல்ல. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு கிறித்துவ நிறுவனம் நடத்தும் பிரபலமான பள்ளி அது. மகளின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்ததும் பள்ளியில் இடம் தருவதாக ஒப்புக்கொண்டனர். மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிப்பதற்கான இடப்பெயர்வு (Migration certificate) சான்றிதழை பின்னர் தருவதாகக் கூறியதற்கும் ஒப்புக்கொண்டனர்.
ஆனால் சேர்க்கையின் போது சி.பி.எஸ்.இ. பள்ளியிலிருந்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ப்பதற்கு சி.பி.எஸ்.இ. பிராந்திய அலுவலகத்திலிருந்து ஒப்புகை வாங்கி வரவேண்டும் என்றார்கள். பிராந்திய அலுவலகம் எங்கே என்பதைப் பற்றியோ, சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்திலா அல்லது புவனேஸ்வரத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திலா என்ற எந்த தகவலையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. அதாவது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒடிஸாவில் மகள் படித்த பள்ளியிலும் இதைப் பற்றி ஒரு விவரத்தையும் சொல்லவில்லை.
சரி, அதையும் வாங்கி வந்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். பிறகு இரண்டாவது மொழிப்பாடம் குறித்த பேச்சு வந்தது. என் மகள் இங்கும் ஹிந்தி படிக்க விரும்ப வில்லை. ஒடிஸாவில்தான் வேறு வழியில்லாமல் படிக்க வேண்டியதாகி விட்டது. இங்கு எனக்கு தமிழ்தான் வேண்டும். புரிஞ்சி படிச்சால்தானே நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என்றாள். ஆனால் பள்ளி நிர்வாகமோ பத்தாம் வகுப்புல இரண்டாவது மொழிப்பாடமா என்ன எடுத்தாயோ அதைத்தான் எடுத்தாகணும். தமிழ் எடுக்க முடியாதுன்னு சொன்னாங்க.
இரண்டாவது மொழிப்பாடம் எடுப்பது மாணவரின் விருப்பத்தைப் பொருத்தது என்ற அடிப்படை அறிவுகூட அவர்களுக்கு இல்லை. அதுவும் தவிர தமிழ்நாட்டுலேயே தமிழ் மறுக்கப்படுகிறது. எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. இருந்தாலும் நல்ல பள்ளியாயிற்றே கொஞ்சம் பேசிப் பார்ப்போம் என்று பொறுமை காத்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுலதான் இவள் படித்தாள். ஹிந்தி படிக்க சிரமப்படுகிறாள் என்றுதான் இங்கே வந்தோம், என்றேன். நிறைய விதிமுறைகள் இருக்கிறது. அது அவ்வளவு சுலபமில்லை என்றார்கள். பின்பு சில அனுபவமிக்க ஆசிரியர்களை கலந்தாலோசித்தார்கள். கடைசியில் முடியவே முடியாது என்றார்கள். கோபத்தோடு அந்தப் பள்ளியில் இருந்து வெளியேறினேன்.
இன்னும் இருக்கு....
7 கருத்துகள்:
இந்த கொடுமை நம்ம தங்கத் தமிழ் நாட்டில்தான் நடக்கிறது ,கல்வி வியாபாரிகளைத் திருத்த முடியாது !
த ம+2
உண்மைதான் பகவான்ஜி! தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
இது போன்ற அனுபவங்களை தொடர்ந்து எழுத வேண்டுகின்றேன்.
எழுத வேண்டும் என்கிற ஆவல் நிறைய இருக்கிறது ஜோதிஜி. ஆனால் இப்போதெல்லாம் நிறைய நேரம் விழித்திருக்கவும் முடியவில்லை. தொடர்ந்து கணிணியை பயன்படுத்த முடியாத அளவுக்கு கண் சோர்வடைந்து விடுகிறது. உடல் ஆரோக்கியமும் முன்பு போல் இல்லை. அதுதான் காரணம். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
கல்வி விழிப்புணர்வு அவசியம்...
உங்கள் பதிவு ஒரு தீவிர சிந்தனையைத் தந்திருக்கிறது..
நன்றி
Click here.. My Wishes!
த ம ஏழு
வருகைக்கு மிக்க நன்றி மது!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!