ஆதி மனிதன் பயத்தால் ஆட்டுவிக்கப்பட்டான். திடீரென்று வானில் வெளிச்சக் கீற்றுகள், தடதடவென்று ஓசை, பொத்துக்கொண்டு கொட்டும் தண்ணீர், அளவிட முடியாத வான்பரப்பு, கணக்கிட முடியாத நட்சத்திரங்கள், எல்லைகள் புரியாத அலைகடல்… எதற்கும் காரணம் புரியாமல் மனிதன் மிரண்டான். இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தின் முன் தன்னை ஒரு தூசு போல உணர்ந்தான்.
தனக்கு புரிபடாத சக்திக்கு முன் பணிந்து, தன்னைப் பாதுகாக்க வேண்டினான். மழையைக் கும்பிட்டான். சூரியனை வணங்கினான். அன்றிலிருந்து அச்சத்தின் காரணமாக ஏற்றுக் கொள்ளப்படவரானார் கடவுள்!
பிறந்ததிலிருந்தே தாயும் தந்தையும் சமுகமும் கடவுள் உண்டு என்று சொல்லி வந்திருப்பதால்தான் நாமும் கடவுள் இருப்பதாக நம்புகிறோம்.
தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளத் தெரியாத பலர் மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கப் புறப்பட்டு விடுகிறார்கள். கடவுளைப் பற்றி உங்களுக்கு நேரடி அனுபவம் கிடையாது. அதனால் அடுத்தவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று நம்பிக்கை வைக்கிறார்கள்.
கோவிலுக்கு எதற்காகப் போகிறார்கள்? கடவுளை உணர்வதற்காகவா?
‘அதைக் கொடுப்பா, இதைக் கொடுப்பா, காப்பாற்றுப்பா’ என்று வேண்டிக் கொள்ளத்தானே? கடவுள் நம்பிக்கைகள் பெரும்பாலும் பேராசை மற்றும் பயத்தின் அடிப்படையில்தானே வளர்க்கப் பட்டிருக்கின்றன. வீட்டில் டஜன் கணக்கில் கடவுள் படங்களை மாட்டி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை பயமின்றியோ அச்சமின்றியோ இருக்கிறதா என்ன? கடவுளர்களையும் சேர்த்து அல்லவா பூட்டிவிட்டுப் போகவேண்டியிருக்கிறது?!
கடவுள் என்பதே அச்சத்தின் அடையாளமாக இருப்பதால்தான் நாம் பயபக்தி என்ற வார்த்தையை ரசிக்கிறோம். கடவுள் அன்பானவர் என்றால் அவரிடம் பக்தி இருந்தால் மட்டும் போதாதா? பயம் எதற்கு?
கடவுளை உணராதவர்கள்தான் இன்றைக்கு பக்தியைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். அப்படியானால் கடவுள் என்பவர் கற்பனைப் பாத்திரம்தானா? அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா?
ஒரு சிறு விதை பூமிக்குள் விழுந்ததும் மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறதே எப்படி? இந்த விதையில் இப்படிப்பட்ட மரம்தான் வளரும், இப்படிப்பட்ட பூதான் மலரும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறதே… இந்த விதிகளை அமைத்தது யார்? உங்களை மீறிய கடவுள் சக்தியை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
ஆக தொடங்கிய இடத்துக்கே வந்தாகிவிட்டது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இதைத் தெரிந்து கொள்ளும் ஆசை உங்களுக்குள் வந்துவிட்டால், நீங்கள் யாரிடம் கேட்டு அறிய முடியும்?
வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும், படைப்பின் ஒவ்வொரு ரகசியத்தையும் நுணுக்கமாக கவனித்து உருவான கலாசாரம், இங்கு போல் வேறெங்கும் இல்லை. வாழ்க்கையின் பூரணத்துவத்தை வேர் வரை உய்த்து உணரக்கூடிய கலாச்சாரத்தில் பிறந்தும், உலகில் நாம் கோமாளிகளாகத் தோற்றமளிக்கக் காரணம் என்ன?
அடிப்படைப் பிழைப்புக்குக் கூட நம்மை நம்புவதைக் குறைத்துக்கொண்டு கடவுளை நம்பி இருப்பதுதான்! இந்த உலகில் தங்களுக்குத் தேவையானதைத் தேடிப்பெற, மண்புழுவிலிருந்து மாபெரும் யானை வரை யாவும் தங்கள் திறமையைத்தான் நம்பி இருக்கின்றன. யாரிடமும் போய் உதவி கேட்பதில்லை.
அவற்றையெல்லாம் விட மிக அதிகமான புத்திசாலித்தனம் கொண்ட மனிதன் மட்டும்தான் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். நீங்கள் பிழைத்திருக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கைகளும், கால்களுமே போதும். அதை விட்டுவிட்டு, கடவுளை உங்கள் பிழைப்புக்கு உதவுவதற்காக அழைப்பது கேவலம். ஆம் தினப்படி வாழ்வுக்கு கடவுள் தேவை இல்லை!
பல லட்சம் கோயில்கள் இருந்தும், எங்கு திரும்பினாலும் ஏன் வேதனை மிகுந்த முகங்களைப் பார்க்கிறோம். உழைக்காமல் சாப்பிடவும், படிக்காமல் தேர்வுகளில் தேர்ச்சி பெறவும், உங்கள் தவறுகள் கவனிக்கப்படாமல் போகவும் கடவுளை துணையிருக்கச் சொல்கிறீர்கள். வாழ்க்கை திடும் என புரண்டு விட்டால் என்ன செய்வது என்று கடவுளை ஒரு இன்சூரன்சாக வைத்திருக்கிறீர்கள். கோயில் கோயிலாக அதற்கான பிரீமியம் கட்டுகிறீர்கள்.
‘இதையெல்லாம் கொண்டு வா!, இதிலிருந்தெல்லாம் காப்பாற்று’ என்று உங்கள் சேவகனாகவும், பாதுகாப்புச் சிப்பாயாகவும் கடவுளை நியமிக்கப் பார்க்கிறீர்கள். வாழ்க்கையைப் பற்றிய அச்சம் மட்டுமே கடவுளைப் பற்றிய நம்பிக்கைகளை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது… வாழ்க்கையும் மிஞ்சாது!
உங்கள் தவறுக்கான பழியை ஏற்றுக்கொள்ள சக மனிதர்கள் தயாராக இல்லாதபோது, தெய்வச்செயல் என்று அவற்றைச் சுமத்த வசதியான தோள்களாகக் கடவுளை வைத்திருக்கிறீர்கள். அதன் பெயர் பக்தி இல்லை. போலித்தனம்!
''அத்தனைக்கும் ஆசை''ப்படுவில் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
6 கருத்துகள்:
சரி தான்... // யாரிடமும் கேட்டு அறிய முடியாதென்பது உண்மை தான்... //
வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!
உங்கள் கூற்று ஒருதலைப்பட்சமானது. கடவுளை வணங்குபவர்களுக்கு, வாழ்வில் வரும் ஒவ்வொரு வேதனையையும் துயரத்தையும் சென்று பகிர்ந்துகொள்வதற்கும் அந்தரங்கமாக முறையிடுவதற்கும் நம்க்கு உள்ள நண்பராகக் கடவுள் தெரிகிறார். கோயிலில் சென்று கடவுள் முன் அழும் பலரை எல்லோரும் பார்க்கிறோம். தவிரவும், சிந்தனைக்கெட்டாத செயல்கள் வாழ்வில் நடக்கும்போதும், சிறிதும் நினைத்துக்கூட பார்க்காத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும்போதும் அவை எல்லாம் கடவுளால் நடைபெறுவதாக எண்ணுகிறார்கள். கொவில் மக்கள் ஒன்று சேரும் இடமாகவும் உள்ளது.
மனிதனால் சாதிக்க முடியும் என்பதும் ஒரு அளவுதான் . இதுவரை வந்த பெரிய விஞ்ஞானிகளில் மிக மிகச் சிலர்தான் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகத் தெரிகிறார்கள். ஆத்திகர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி மட்டுமே நாத்திகர்கள் விமர்சிக்கிறார்கள். அதிசயிக்கத்தக்க நிகழ்வுகளை ஓரம் கட்டுகிறார்கள்.
கோபாலன்
நானும் காண ஆவலாய் இருக்கிறேன்
திரு.கோபாலன் அவர்களுக்கு, இந்தக்கட்டுரையை நான் எழுதவில்லை. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. என் கருத்து இன்னும் வேறு மாதிரியாக இருந்திருக்கும். எனக்குப் பிடித்த பகுதிகளையே சுருக்கி பதிவிட்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
வருகைக்கு மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!