சில
காலங்கள் நானும் வளைகுடா (துபாய்) வாழ்க்கை வாழ நேரிட்டது. அப்போது நான் பட்ட வேதனைகள் சொல்லி மாளாதது. பணம் ஒன்றே குறிக்கோளாய் மாறிவிட்ட உலகத்தில் அதைத்தேடி நானும் ஓடிய காலமது. மனைவி, பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து புதிய சூழ்நிலையில் பணியாற்றிய போது நான் அடைந்த மன உளச்சல்களும் ஏராளம்.
மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு இத்தனை ஆயிரம் மைல் தொலைவில் தன்னந்தனியாக வாழ்வதில் எனக்கும் நிம்மதியில்லை. அவர்களுக்கும் நிம்மதி இல்லை. வருஷத்துக்கு ஒருமுறை ஒருமாத விடுமுறை. கண்மூடி கண்திறக்கும் நேரம் குடும்பத்துடன் இருந்துவிட்டு திரும்ப விமானம் ஏறி… அடுத்த பயணத்துக்காக நாட்களை எண்ணிக்கொண்டு… ஒவ்வொரு முறையும் பிரிவுத்துயரில் வெம்பி… சே!
வாழ்க்கையை அனுபவிப்பதற்குத்தான் பணம். ஆனல் பணத்துக்காக வாழ்க்கையின் இனிமையான தருணங்களை, சந்தோஷங்களை இழப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்! காலம் கடந்துதான் எனக்கு அந்த ஞானோதயம் ஏற்பட்டது.
ஒரு ஜான் வயிற்றுக்காக, நிர்வாணத்தை மறைக்கும் ஆடைக்காக, போராட்டமே ஆகிப்போன வாழ்க்கைக்காக, எந்த நேரத்திலும் மரணம் நேரலாம் என்ற நிச்சயமில்லாத உடலுக்காக
மனிதர்கள் எதை எதையெல்லோமோ இழக்கவேண்டியிருக்கிறது இல்லையா?
அதனாலேயே
மூன்று வருட விசாவை ரத்து செய்துவிட்டு பாதிலேயே இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டேன். என் மன நிலையைப் போலத்தான் இருந்திருக்கும் என் இல்லாளின் நிலைமையும். என் அதிர்ஷடம் இந்தியாவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் வேலை செய்யமுடியாத நிலை. ஒடிஸா, கர்நாடகம், ஜார்கண்ட் என சுற்றி விட்டு மீண்டும் ஒடிஸாவிற்கே வந்திருக்கிறேன். இந்தமுறை நிறைய முயற்சிகள் எடுத்து குடும்பத்தையும் இங்கேயே அழைத்து வந்திருக்கிறேன். இதுவும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை?!
சமீபத்தில்
இந்தக் கவிதையை வாசிக்க நேர்ந்தபோது என் கடந்தகால நினைவுகள் வந்து போயின.
இது
இணையத்தில் ஏதோ ஒரு தளத்திலிருந்து ‘காப்பி’ செய்யப்பட்ட கவிதை.எனவே இந்தக் கவிதையை என் வலைத்தளத்தில் சேமிக்கும் பொருட்டு இங்கே பதிவாக்கியிருக்கிறேன். கவிதைக்கு உரியவர்கள் மன்னிப்பார்களாக!
சத்தமில்லாமல்
சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்க வேண்டாமென கண்டித்துவிட்டு
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
மறைந்திருந்து
கட்டிப்பிடிப்பாய்…
கையிலிருப்பதை
தட்டிப் பறிப்பாய்…
கெஞ்சுவதும் மிஞ்சுவதும்,
அழுவதும் அணைப்பதும்,
கண்டிப்பதும் கண்ணடிப்பதும்
இடை கிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா ‘அடி கள்ளி’…
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்…
என் துபாய் கணவா…
கணவா… ‘எல்லாமே கனவா?!’
கணவனோடு இரண்டு மாதம்…
கனவுகளோடு இருபத்தியிரண்டு மாதமா?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ…
5 வருடமொருமுறை ஒலிம்பிக்…
4 வருடமொருமுறை உலகக்கோப்பை கிரிக்கட்…
2 வருடமொருமுறை கணவன்…
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்து கொண்டாய்!...
இது வரமா? சாபமா?...
அழகுக்காய்… பிணத்தின் சாம்பலில் முகம் பூசுவோர் உண்டோ?
கண்களின் அழுகையை கண்ணாடி தடுக்குமோ என் கணவா?!
நான் தாகத்தில் நிற்கிறேன்… நீ கிணறு வெட்டுகிறாய்!
நான் மோகத்தில் நிற்கிறேன்… நீ விசாவைக் காட்டுகிறாய்!
திரும்பி வந்துவிடு என் துபாய்க் கணவா!
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்.
விட்டுக்கொடுத்து… தொட்டு பிடித்து…
தேவை அறிந்து சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…
வார விடுமுறையில் பிரியாணி… காசில்லா நேரத்தில் கஞ்சி…
இப்படி காமம் மட்டுமன்றி… எல்லா உணர்வுகளையும்
நாம் பறிமாறிக்கொள்ள வேண்டும்!
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம், உறவு, உல்லாசப் பயணம்
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது என் கணவா!
தவணை முறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்போதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
அனுப்புகிற தினார்கள் ரூபாயாக மாறும், காதலாக மாறுமா?
பணத்தைத் தரும் பாரத வங்கி பாசத்தைத் தருமா?
நீ இழுத்துச்செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட
எடையோடு அதிகமாகிவிட்டதால்…
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?!
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு…தங்கம் தேடிச்சென்றாயே?
பாலையில் நீ! வறண்டதோ என் வாழ்வு?!
வாழ்க்கை பட்டமரமாய்ப் போன பரிதாபம் புரியாமல்…
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகின்றாய்.
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
உன் துபாய் தேடுதலில் தொலைந்தது என் வாழ்க்கையல்லவா?
விழித்துவிடு கணவா… விழித்துவிடு…
அந்தக் கடவுச் சீட்டு வேண்டாம், கிழித்துவிடு!
விசாரித்து விட்டுப் போகாதே என் கணவா,
விசாவை ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
6 கருத்துகள்:
ஆழ் மனதில் வலிக்கச் செய்யும் வரிகள். உங்கள் படமா இது?
குடும்பத்துடன் இருக்க முடியாது என்றால் வெளி நாட்டு வேலையை உதறி விடுவதுதான் நல்லது ..நீங்கள் எடுத்தது நல்ல முடிவு !
த.ம 3
போட்டாச்சு
நன்றி ஜோதிஜி! ஆம் படத்தில் இருப்பது நான்தான், பத்து வருடங்களுக்கு முன்பு!
வருகைக்கு மிக்க நன்றி பகவான்ஜி!
வருகைக்கு மிக்க நன்றி நம்பள்கி.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!