கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா?
கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம்
என்கிற கெட்ட குணம் அடித்து சாய்த்துவிடும். கோபம் என்ற விஷயத்தைக் கூட அடக்காத மனிதன்
கோபத்தைவிட பல நூறு மடங்கு பெரிதான காமத்தையும், காமத்தைவிட பல நூறு மடங்கான பொறாமையையும்
எப்படி அடக்குவான்? தன் கோபம் பற்றி தானே பெருமைப் பட்டுக்கொள்கிறவரை நான் பரிதாபமாகத்தான்
பார்க்கிறேன்.
கோபத்தை எப்படி அடக்குவது?
எல்லாவற்றிற்கும் அடிப்படையில் ஒரு வெஞ்சினம் இருக்கிறது. அந்த
வெஞ்சினத்தை வெளியில் காட்டாமல் மனசுக்குள்ளே தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி
தேக்கிவைத்த வெஞ்சினத்தை வெறியாய் மாற்ற ஒரு ரசவாதம் (உறுதி) தேவைப்படுகிறது. அதற்குப்
பெயர் பொறுமை! கோபத்தை பொறுமையில் ஊற வைக்க வேண்டும். அதாவது பொறுமையாய் கோபப்பட வேண்டும்.
கோபத்தில் பதட்டப் படுபவன் மிருகம். மிருகத்துக்கு வெற்றி தோல்வி
முக்கியமில்லை. மனிதனுக்கு முக்கியம். வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையாய்
பதனம் செய்து தன் கோபம் முழுவதும் தன் வேலைத் திறமையில் காட்ட வேண்டும். யார் அவமானப்
படுத்தினார்கள்? எப்போது அவமானப் படுத்தினார்கள்? மறக்கவே கூடாது.
அதுபற்றி அடிக்கடி யோசிக்க ஏன் அவமானப் பட்டோம் என்று தெரியவரும்.
தனது குறையும் நிறையும் தெளிவாய்ப் புரியும். தன்னுடைய குறைகள் தெரியும்போது அதனை நிறையாக்கிக்
கொள்ளும் வழியும் தெரியும்.
எந்நேரமும் வேலை மீதே புத்தி இருக்கும். வேறு சுகங்களை மனம்
தேடாது. வெற்றுப் பாராட்டுகளை மனம் விரும்பாது. நான் ஜெயித்துவிடுவேன், கிழித்துவிடுவேன்
என்று அலட்டாது. ஜெயித்தவனைப் பார்த்து பொறாமைப் படாது. என்ன செய்தால் ஜெயிக்கலாம்
என்பதே இடைவிடாத சிந்தனையாக, உறக்கத்திலும் இதே சிந்தனையாக இருக்கவேண்டும்.
இப்பொழுதுள்ள இளம் பெண்களைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
இப்போதுள்ள இளம் பெண்களோடு எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. அவர்கள்
நினைப்புகளை போக்குகளைப் பற்றி எனக்கு தகவல் தர ஆட்கள் இல்லை. நிறைய பேர் குதூகலமாகத்தான்
இருக்கிறார்கள் என்று படுகிறது. தலையை விரித்துப் போட்டிருக்கிற காரணத்தை கேட்கும்போது
ஒரு மத்திய வயது பெண்மணி பதில் அளித்தார். தலையை இறுக்கி இறுக்கி பின்னிப் பின்னி கொண்டை
போட்டு தொந்தரவு செய்வதால் மத்திம வயதிலேயே அதிகம் முடி உதிர்ந்து விடுகிறது. அப்படி
முடி உதிராமல் இருக்க தலையை வெறுமே சீவி விட்டு விடுவது நல்லது என்கிற எண்ணம் உண்டாகி
இருக்கிறது. எனவே தான் இப்படி இருக்கிறார்கள் என்று சொன்னார்.
அந்த தலை முடியை ஒரு நிமிடத்திற்கு குறைந்த பட்சம் ஆறு முறையாவது
கோதிக்கொள்கிற அந்த அவஸ்தையைப் பார்க்கும் போதுதான் அவர்கள் மீது பரிதாபம் வருகிறது.
மற்றபடி அவர்கள் நெறிகள் நீதிகள் பற்றி நான் எதுவும் அறியேன். அவசியமும் இல்லை.
4 கருத்துகள்:
எனக்கு பொறுமை ரொம்ப கம்மி. சட்டுன்னு கோவம் வந்து வார்த்தைகளை விட்டுடுவேன், மாறனும்ன்னு ஆசை படுவேன். ஆனா, முடியலை :-(
வயதாக நம் எண்ணங்கள் மாறும் என்பதும் உண்மைதான். பாலகுமாரனை 20 வருடங்கள் தொடர்ந்து வந்த போது தொடக்கத்தில் அவரின் வேகமும் இப்போது படித்த வார்த்தைகளும் இதைத்தான் உணர்த்துகின்றது,
ராஜி அவர்களே! நானும் இப்படித்தான். நல்லவனாக பெயர் எடுக்க முயற்ச்சித்த போதெல்லாம் இந்த கோபம் வந்து மிருகமாய் மாற்றியிருக்கிறது. வயதாகிறது இல்லையா? வேகம் குறைந்து இப்போது கொஞ்சம் கட்டுக்குள் வந்திருக்கிறது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
ஆம் ஜோதிஜி! இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. பாலகுமாரன் புத்தகங்கள் ஆரம்பத்தில் நான் வெகு ரசித்துப் படித்தேன். அவர் ஆன்மீகம் பக்கம் போனவுடன் படிப்பதை நிறுத்திக் கொண்டேன் (அப்புறம் [வயதான பிறகு] பார்த்துக்கொள்ளலாம் என்று…) இப்போது அதற்கான காலம் வந்துவிட்டது?!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!