வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பகிர்ந்ததும் பகிராததும்...


இந்த 'மறக்க முடியாத நினைவுகளை' ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிறது. கடந்த 2011 சுதந்தர தின நாளில்தான் இந்த வலைப் பதிவை ஆரம்பித்தேன். இந்தப் பதிவோடு சேர்த்து நூற்று என்பத்தி ஆறு பதிவுகள். இரண்டு வருடங்களில் இருநூறு பதிவுகளைக் கூட பகிரமுடியவில்லை. இதிலும் நிறைய புகைப்படங்கள் பற்றிய பதிவு. காரணம் வழக்கமான பல்லவிதான், எழுத நேரமில்லை!?
 
ஆமாம் எதற்கு எழுத வேண்டும்? இதனால் என்ன பலன்? நம் இருப்பைக் காட்டிக்கொள்வதைத் தவிர! இன்னொன்று மன சாந்தி. இதற்கு இப்படி கிடைக்கிற கொஞ்ச நஞ்ச ஓய்விலும் கணிணி முன்னே உட்காரந்து நேரத்தை வீண்டிப்பது நியாயம்தானா? இது எனக்குள்ளே சமீபகாலமாக கேட்கும் கேள்வி. ஆனாலும் அந்தக் குரலுக்கு நான் எப்போதும் செவி சாய்ப்பதே இல்லை.

எனக்கு சோம்பேறித்தனம் பிடிக்காது. பகலில் தூங்குவது பிடிக்காது. தொலைக்காட்சி பிடிக்காது. நண்பர்களோடு அரட்டை அடிப்பது பிடிக்காது. என்று….. நிறைய பிடிக்காது. அலுவலக நேரம்போக என்னதான் செய்வது? கணிணியும் இணையமும்தான் எனக்கு நண்பன் பொழுது போக்கு எல்லாம். பொழுதுபோக்கு என்றுகூட சொல்லமுடியாது. வேலை வெட்டி இல்லாத ஏதோ ஒரு வேலை!?

ஆனால் இதனால் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். போட்டி மிகுந்த இந்த உலகில் என்னாலும் மற்றவர்களைப் போல அலுவலகத்திலும் வீட்டிலும் வெளியிலும் இந்தக்கால பிரஜையாய் உலாவர கணிணி அறிவே பெரிதும் உதவியது. ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு புத்தகம் படிப்பதுதான். ஜந்தாம் வகுப்பில் ஆரம்பித்த எனது வாசிப்பு பழக்கம் இன்றளவிலும் கொஞ்சம் கூட குறையவில்லை எனபது எனக்கே ஆச்சர்யமான விஷயம். எழுதுவது இரண்டாம் பட்சம்தான்.

இணையத்தில் நுழையக் கற்றுக்கொண்டவுடன் தமிழ் வலைப் பக்கங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். சுவாரஸ்யமான பல வலைத்தளங்களை நாட்கணக்கில் பழைய இடுகைகள் என்றும் பாராமல் படித்ததுண்டு. அப்போதும் எனக்கு எழுத எண்ணமில்லை. படித்த சில பதிவுகளை பாராட்ட எண்ணி பின்னூட்டமிட முயற்சித்தபோதுதான் அடுத்த கட்ட அறிதலுக்குத் தயாரானேன்

கணிணி சம்பந்தப்பட்ட படிப்பும் பயிற்சியும் பெற்றவர்களுக்கு இது சாதாரண விஷயம்தான். கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது எனக்கு அப்போது இமாலய சாதனையாகத்தான் தோன்றியது. தொழில் நுட்ப பதிவுகளை படிக்கத் துவங்கி கணிணி அறிவையும் வளர்த்துக்கொண்டாயிற்று. தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய மென்பொருளை நிறுவி தட்டச்சு செய்யத் தொடங்கியபோதுதான் வலைத்தளம் ஆரம்பிக்கும் எண்ணமே வந்தது.

நான் ஏற்கனவே சொல்லியபடி 2008-ல் ஆரம்பித்து கொஞ்ச காலம் எழுதி பின்னர் அப்படியே தொடராமல் விட்டிருந்த ஒரு வலைத்தளத்தில் தொடர்ந்து எழுத முயற்சிக்கும் போது யாருமே வராமல் போக இனி பதிவிட்டு புண்ணியமில்லை என்று நிறுத்திவிட்டேன். அப்புறம்தான் என்னோடு பணி புரிந்த ஒரு நண்பருக்கு வலைத்தளம் ஆரம்பிக்க கற்றுக்கொடுக்க நானே ஒரு புதிய தளத்தை ஆரம்பித்து காண்பிக்க…. அதையே தொடர்ந்தால் என்ன என்ற ஆவல் ஏற்பட்டது. இதுதான் மறக்க முடியாத நினைவுகளின் வரலாறு!

கொஞ்சம் பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கலாமே என்றுதான்நட்பு, காதல், இளமைக்காலம், அப்போது பார்த்த சினிமா, பள்ளி வாழ்க்கை, பேனா நண்பர்கள், அவர்களுக்கு எழுதிய கடிதங்கள், தோழிகள், ஆசிரியர்கள், படித்த புத்தகங்கள், பிடித்த எழுத்தாளர்கள் என எல்லாவற்றையும் எழுத திட்டமிட்டேன். ஆனாலும் இதில் 25 சதவிகிதம் கூட என்னால் எழுத முடியவில்லை. மற்றவர்களுக்காக இதை எழுதாவிட்டாலும் இது எனக்கு ஒரு ஆவணக் காப்பகம் போல இருக்கட்டுமே என்றுதான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

நிகழ்கால சம்பவங்களைப் பற்றி எழுதியவை மிகக் குறைவுதான். நேரம் கிடைப்பதில்லை என்பது முக்கிய காரணம். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அதைப் பற்றியே எழுதுவது மற்றுமொரு காரணம். இப்படி எழுத வேண்டும் என்று உட்காரும்போது அந்தச் செய்தி பழையதாகி இனி அதைப் பற்றி எழுத வேண்டுமா என்று யோசிப்பு வந்துவிடும்.

இருப்பைக் காட்டிக்கொள்ளத்தான் அவ்வப்போது சில புகைப்படங்களின் தொகுப்பையும் வெளியிடுகிறேன். புகைப்படங்கள் குறித்த  பதிவுகளுக்கு வரும் வாசகர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை எனது பிரபலமான பதிவுகளின் பட்டியலைப் பார்த்தாலே புரியும். அடுத்தது எம்.ஜி.ஆர். குறித்த பதிவுகள். எம்.ஜி.ஆர். மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் குறித்த விஷயமெனில் வாசகர்களின் வருகை பல மடங்காகிவிடுகிறது. எனது வலைப்பக்கத்தை உயர்ப்புடன் வைத்திருப்பது புகைப்படங்களும். எம்.ஜி.ஆர். குறித்த பதிவுகளும்தான் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்தானே?!


சேரன் விவகாரமும் இப்படித்தான் நிறைய இது பற்றிய செய்திகள் வந்துவிட்டது. நாமும் ஏதாவது சொல்லலாமே என்று ஒப்புக்கு எழுதப் பிடிக்கவில்லை. அதனால்தான் இதைப் பற்றிய பதிவு ஒன்று ஜோதிஜியின்தேவியர் இல்லம் திருப்பூர்தளத்தில் 'நடிகர் பிரகாஷ்ராஜ்' என்ற பதிவு  வெளிவந்தபோது நான் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தேன்.  

'இதைப்பற்றி நானே பதிவெழுதலாம் என்றிருந்தேன் ஜோதிஜி! பாவம் சேரன். காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் தனக்கென்று வரும்போதுதான் அதன் தீவிரத்தை உணர்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரகாஷ்ராஜ், ராதாமோகன்,சேரன் பங்கு கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க நேரிட்டது. உருகி உருகி காதலித்தவர்கள் எல்லாம் தங்கள் சோகக் கதையைச் சொல்ல பரிதாபப் பட்டுக்கொண்டிருந்தார் சேரன். இன்று அவரின் நிலைமையைப் பார்த்தீர்களா? எந்த உண்மையான பாசமுள்ள தகப்பனும் அல்லது குடும்பத்தினரும், கண்மூடித்தானமான, இளம் வயதிற்கே உரித்தான இனக்கவர்ச்சியில் வீழும்போது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவே முனைவார்கள். இந்த காதலர்களோ காமத்தை அனுபவிக்கும்வரை கடவுளே தடுக்க வந்தாலும் அவர்மீதும் காவல்நிலையத்தில் கொலைக்குற்றம் சுமத்துவார்கள்.

ஊடகங்களும் இதெற்கென்றே இருக்கும் ஊதாரிகளும் இதை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஆனால் பிள்ளைகள் அதிலும் பெண் கெட்டு நொந்து வீட்டிற்கே திரும்பி வரும்போதும் அல்லது வராமலேயே தற்கொலை செய்துகொள்ளும்போதும் சம்பந்தப்பட்ட குடும்பம்தான் அதை எதிர்கொள்ளுமே தவிர இப்படி இதை வியாபாரமாக்கும் கும்பல்கள் இல்லை. இதைப்பற்றிய பதிவு ஒன்றையும் எழுதவிருக்கிறேன்'.


முகநூலில் சிலர் தெரிவித்த கருத்துக்களையும் அதில் பகிர்ந்திருந்தேன்.

காலம் மாறிக்கொண்டு வருகிறது. எல்லாமே சுயநலமாய் மாறிக்கொண்டு வருகிறது. நாமும் மாற வேண்டும். மேலை நாடுகள் போல பந்தம் பாசம், சொத்து சேர்ப்பு, குழந்தைகள் எதிர்காலம் என்ற கவலைகளையெல்லாம் விடுத்து சுயநலமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

எல்லா உறவுகளும் தேவையின் அடிப்படையில்தான் தொடருகிறது. அன்பாகட்டும், காதலாகட்டும் பாசமாகட்டும், பணமாகட்டும், பொருளாகட்டும். எங்கே கிடைக்கவில்லையோ அங்கிருந்து தாவி கிடைக்குமிடத்துக்குப் போவதுதான் நிதர்சனம். வளர்ப்பு சரியில்லை என்று சேரன் தரப்பை குற்றம் சாட்டுபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். சுதந்திரம் கொடுத்தாலும் பிரச்னை. கொடுக்காவிட்டாலும் பிரச்னை. இன்றைய இளைய சமுதாயம் வேறு ஏதோ ஒரு பிடியில் சிக்கி சீரழியத் தொடங்கியிருக்கிறது.

பெரியவர்களைப் பற்றிய பயமோ, மரியோதையோ, தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியோ, எதிர்காலம் குறித்த கவலையோ, கல்வி வேலை வாய்ப்பு குறித்த அக்கரையோ எதுவுமில்லாமல் வளர்கிறார்கள். காதலும் காமமும் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பதிவில் படித்தேன்சட்டப்படி திருமண வயதை அடைந்தாகிவிட்டதல்லவா, விட வேண்டியதுதானே!? அது அவரின் வாழ்க்கை. நன்றாக வாழ்ந்தால் வாழட்டும் இல்லை சீரழியட்டும். திரும்பி வந்தால் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும் என்ற ரீதியில் எழுதியிருந்தார். நல்லவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்று சொன்னால் பொறுக்கிகள் காதலிக்கக் கூடாதா என்கிறார்கள். இதில் நோக்கம் என்பது தெளிவு.. காமத்தை காமத்தை அனுபவிக்க வேண்டும். மற்றவை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். பிடித்தால் வாழ்வோம் இல்லை என்றால் டாடா!  

கர்பமாதல், உடல்நல பாதிப்பு என பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்ற பழைய பல்லவிகளை யாரும் உணர்வதே இல்லை.

பிள்ளைகள் வளர்ப்பு என்பது எளிதான காரியமில்லை. தற்கால சூழலில் நல்ல கல்வியை கொடுப்பதும் சுலபமில்லை. ருசியாண உணவு, நாகரிகத்திற்கேற்ற உடை என்று எல்லாம் பார்த்துப் பார்த்து பெற்றோர்கள் செய்தபோதும் காதல் என்று சொல்லி எவனோ ஒருவன் தூண்டில் விரிக்க எப்படி அதில் போய் விருப்பத்துடனே விழுகிறார்கள் இந்த யுவதிகள். விழுவதும் வீட்டில் சொல்வதும் கூட பரவாயில்லை. யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போவது என்றல்லவா நடக்கிறது.

காதல் திருமணங்கள் வெற்றியடைய என்ன தேவை. சரியான நபரை தேர்ந்தெடுப்பது. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ குணநலன்கள் ஒத்துப்போக வேண்டும். மிக முக்கியமாய் பொருளாதார வசதி. பணப் பற்றாக் குறையில் அவதிப்படும் போதுதான் பெரும்பாலான காதலுக்குள் சிக்கலே வருகிறது. ‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேஇப்படித்தான் ஆகிறது எல்லாக் காதலும். பிறகு பெற்றோருக்கு தெரியப்படுத்துவது

பெற்றோர்களை இந்த இருபது வயதுவரை புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? அவர்களின் எதிர்பார்ப்பு, அவர்கள் விருப்பம், என்று அவர்கள் மறுக்க முடியாத நபரை நிறுத்த வேண்டும். வேறு வழியில்லாமல் ஆதரித்துத்தானே ஆக வேண்டும். கௌரவம், ஜாதி, அந்தஸ்து எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. கல்வியும், நல்ல வேலையும் அதனால் ஏற்படக் கூடிய பொருளாதார வசதியும் இவை எல்லாவற்றையும் அடக்கி ஆண்டுவிடும். ஒருவேளை பிரிய முடிவெடுத்தாலும் பெற்றோரையோ உடன் பிறந்தாரையோ சார்ந்திருக்காமல் கல்வியும் வேலையும் கைகொடுக்கும்.

கல்வியும் வேலையும் இல்லாத பட்சத்தில் கட்டியவனை நம்பி அவன் சரியில்லை என்றாலும் அவனுடனே வாழ்ந்தாக வேண்டும். மீண்டும் பொற்றோரிடம் போக சிலருக்கு கௌரவம் இடம் கொடுக்காது. அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குப் போவார்கள். வேலை இருந்தால் தன் சுய காலில் நிற்க தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும். இவர்களுக்கெல்லாம் பட்ட பின்தான் புத்தி வருமே தவிர எடுத்துச் சொல்லும்போது மண்டைக்கு ஏறாவே ஏறாது.

எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் மகன் அல்லது மகளை நினைத்து வருந்தவே செய்வார்கள். நிறைய இடங்களில் காதல் கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள், மகனோ அல்லது மகளோ ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு பேரனோ பேத்தியோ பெற்றதும் மீண்டும் தங்களோடு இணைத்துக் கொள்வதை கண்கூடாக நாம் காண்பதே!

ஆனால் மனக்காயங்கள் ஆறாதது. பாத்தோடு வளர்த்த பிள்ளை வீட்டை விட்டுப் போகும்போது யாருக்குத்தான் மனம் கலங்காமல் இருக்கும். போய் சாகட்டும் என்று எந்த தகப்பனும் சொல்லமாட்டான். கௌரவக் கொலைகள், தற்கொலைகள் இதன் காரணமாகவே நிகழ்கின்றன. கருத்து சொல்வதும் கட்டுரை எழுதுவதும் சினிமா எடுப்பதும் எளிது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தனக்கு நேரும்போது தான் அதன் வீரியத்தை பலர் புரிந்து கொள்கிறார்கள்.

சேரன் விவகாரம் பற்றிய நடுநிலையான ஒரு பதிவை என்னுலகம் என்ற தளத்தில் படிக்க நேரிட்டது. அதன் இணைப்பு இங்கே. எழுதியவர் டி.பி.ஆர்.ஜோசப்.

சூடான பதிவுகள் என்றாலே சினிமாவைப் பற்றியும், காதல், கள்ளக்காதல் சாமாச்சாரங்களைப் பற்றியும்தான் என்பது இந்த இரண்டாண்டுகளில் நான் தெரிந்த கொண்ட உண்மை. அபூர்வமாய் சில பதிவுகள் சமுதாயப் பிரச்னைகள் குறித்து எழுதுவதைக் கண்டு வியந்திருக்கிறேன்.  

குறிப்பாய் நண்பர் ஜோதிஜியின் "தேவியர் இல்லம் திருப்பூர்", வா. மணிகண்டனின் நிசப்தம், அனுபவங்களை அனாவசியமாய் எழுதித்தள்ளும் ‘காணாமல் போன கனவுகள் ராஜி, காதலை இத்தனை உணர்வு பூர்வமாய் எழுதி மீள முடியாமல் மீண்டெழுந்த மாலதியின் சிந்தனைகள் மாலதி என எனக்குப் பிடித்த பதிவர்களின் அறிமுகங்களை அடுத்த பதிவிலும் தொடர்கிறேன்.

அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

16 கருத்துகள்:

ராஜி சொன்னது… [Reply]

காதல் பற்றிய அலசல் நல்லா இருக்கு!! முதலில் சேரனின் எதிர்ப்பு எனக்கு கூட பிடிக்கலை.. 9 வகுப்புல காதல் பணுற மாதிரி படம் எடுத்துட்டு இப்போ நடிக்குறான்னுதான் நானும் நினைச்சு திட்டினேன். அப்புறம் வய்து வந்த 2 மகளுக்கு அம்மாவாய் யோசிக்கும்போது சேரன் செய்தது சரியேன்னுதான் தோணுச்சி. என்ன, மீடியாவுல மகளை பற்றியும், அந்த சந்த்ரு பத்தி பேசாமலும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோன்னுதான் நினைக்குறேன்!

ராஜி சொன்னது… [Reply]

பகிர்ந்ததும் பகிராததும்ன்னு சொல்லி ஒரு கிளாஸ் படம் வெச்சிருகீங்களே! நம்மாளுங்க கொஞ்சம் எடக்கு மடக்கானவங்க. எங்கே இதுவரையில் அதை பகிரலை, இனி பகிருங்கள்ன்னு கேட்டாலும் கேப்பாங்க. :-)

கவியாழி சொன்னது… [Reply]

காதல் திருமணம் கலாட்டாவாகும்போதுதான் இம்மாதிரியான வருத்தமாய் மாறுகிறது

டிபிஆர்.ஜோசப் சொன்னது… [Reply]

காதல் என்பது அறிவு சம்மந்தப்பட்ட விஷயமல்ல அது உணர்வுபூர்வமானது. ஏன் கண்மூடித்தனமானதும் கூட. அதனால்தானோ என்னவோ காதலுக்கு கண்ணில்லை என்று நம் முன்னோர்களே சொல்லிவைத்துள்ளனர். காதல் செய்ய சாதி, மதம் , மொழி எவ்வளவு முக்கியமில்லையோ அதுபோலவே நல்ல குணமும், பொருளாதார வசதியும் கூட அவசியமில்லை. நம்மையும் அறியாமால் ஒருவர் மீது ஏற்படும் ஒருவித ஈர்ப்புத்தான் காதல். ஆனால் காதல் வேறு கல்யாணம் வேறு. இந்த இரண்டையும் குழப்பிக்கொள்பவர்களுக்குத்தான் இது பிரச்சினையாகத் தெரிகிறது. 18 வயதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் அந்த மனப்பக்குவம் வந்துவிடுகிறது என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல உலகளவில் அதுதான் மனப்பக்குவத்திற்கு அளவுகோல். ஆனால் இந்தியா போன்ற பெற்றோருடைய பாதுகாப்பிலேயே வளரும் பிள்ளைகளுக்கு மனப்பக்குவம், சிந்தித்து முடிவெடுக்கும் திறன் சற்று காலதாமதமாகத்தான் வருகிறது என்பதும் உண்மைதான். அதுவும் டாமினேஷன் அதிகம் உள்ள பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளைகள் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் 25வயதில் கூட மனப்பக்குவம் வருவதில்லை. இதில் சேரன் குடும்பம் 2வது வகையைச் சார்ந்தது. அதில்தான் சிக்கலே. தாமினி மட்டுமல்ல சேரனுக்கும் மனப்பக்குவம் இல்லையென்பதைத்தான் அவர் குடும்ப விஷயத்தை வீதிக்குக் கொண்டுவந்ததிலிருந்தே தெரிகிறதே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ராஜி அவர்களே! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!சேரன் மீடியாவுல கொஞ்சம் முதிர்ச்சி இல்லாமல்தான் நடந்துகொண்டார். தன் தரப்பைச் சொல்ல பரிதாபத்தைத் தேட அவர் நடந்துகொண்ட விதம் சரியில்லதான்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ராஜி!

கிளாஸ் படமா? சேரன் படத்தையா குறிப்பிடுகிறீர்கள்? பகிர்ந்தவை பழைய இடுகைகள் குறித்து. பகிராதவை சேரன் விவகாரம். பகிராதவை நறைய இருக்கு, அரசியல் உட்பட.......

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கவியாழி கண்ணதாசன்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

டி.பி.ஆர்.ஜோசப்! அருமையான கருத்துக்கள். தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி!

ஜோதிஜி சொன்னது… [Reply]

வந்தேன் எழுதினேன் என்று ஏதோவொரு விமர்சனத்தை எழுதி வைத்து விட்டு செல்ல விரும்பவில்லை. காலையில் முழுமையாக எழுதுகின்றேன்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிக்க நன்றி ஜோதிஜி!

ஜோதிஜி சொன்னது… [Reply]

எங்களைப் போன்று வீடு அலுவலகம் என்று இருப்பவர்களுக்கு எழுதுவது என்பது பெரிய காரியமல்ல. ஆனால் உங்களைப் போன்று மாநிலம் விட்டு மாநிலம் பறந்து கொண்டே இந்த வலைபதிவில் எழுதுவது என்பது தான் மிகச் சவாலான வேலை.

மிகக்குறுகிய காலத்திற்குள் அனைவருக்கும் தெரிந்த வகையில் உங்கள் எண்ணங்களும் பலருக்கும் போய்ச் சேர்ந்துள்ளதே. அதுவே பெரிய வெற்றி.
எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. எழுதிய விசயங்களே முக்கியம். பல சமயம் உருவாகும் மன அழுத்தம் உருவாக்கும் தாக்கம் எப்பேற்பட்ட புத்திசாலிகளையும் இரவு தூங்க விடாமல் கொன்று விடும்.

ஆனால் எழுதக் கற்றுக் கொண்ட பிறகு மனப்பாரத்தை இறக்கி வைத்தாற் போல உருவாகி விடுகின்றது.

வலைபதிவில் எழுதாமல் அவ்வப்போது ஒரு சிறிய மற்றும் பெரிய இடைவெளி விடும் போது அன்றாட வாழ்க்கையில் உருவான தாக்கங்கள் அப்படியே மனதில் படிமம் போல உருவாகி அழுந்தி அது உள்ளுற கொன்று கொண்டேயிருக்கும். தற்போது பொது விசயங்களைக்குறித்து பகிர ஆட்கள் இல்லை. பலருக்கும் நேரம் இருப்பதும் இல்லை.

எலும்புத்துண்டுகளை சுமந்து கொண்டு சுமந்து கொண்டு ஓடும் மிருகங்கள் போலவே மனித வாழ்க்கை மாறியுள்ளது.

அந்த வகையில் இந்த எழுத்துப் பயிற்சி என்பது ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

பலசமயம் இந்த துறை குறித்து நம்மால் எழுத முடியுமா? என்று யோசிக்கும் போது மனதில் அலையடித்துக் கொண்டே குழப்பமாக இருக்கும். ஆனால் எழுதத் தொடங்கிய பிறகே பல கருத்துக்களை நம்மால் கோர்வையாக சொல்ல முடியும் ரகசியம் வெளிப்படுகின்றது.

சினிமா பற்றி எழுதுபவர்களின் வாழ்க்கையின் அரைகுறை புரிதல்கள் குறித்து நாம் என்ன சொன்னாலும் புரிந்துவிடப் போவதில்லை. அது அவர்களைப் பொறுத்தவரையிலும் தேடுதல் தேவையில்லாத ஏதோவொன்றை இறக்கி வைத்த திருப்தி.

எழுதும் போது ஒரு சலிப்பு உருவாகி விட்டது என்றால் அப்படியே விட்டு விட்டு அமைதியாக கவனித்துக் கொண்டே வரும் நிச்சயம் எண்ணங்கள் வலிமையாக உள்ளுற சேர்ந்து கொண்டே வரும். கவனித்துப் பார்த்தால் புரியும். அழுத்தப்பட்டு வெளி வரும் எண்ணங்கள் பல சமயம் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும்.

அனுபவித்த உண்மை இது.

நீக்குபோக்கு இல்லாமல் நான் இப்படித்தான் இது தான் என் எண்ணம் என்கிற வகையில் உங்கள் எழுத்துக்கள் குறுகிய காலத்தில் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

vishwa சொன்னது… [Reply]

எல்லா உறவுகளுக்கும் அடிப்படை, எதாவது ஒரு "தேவை"
Well said.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஜோதிஜி! தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி! உண்மைதான் வீடு, மக்கள் என்றிருந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். முக்கியமாய் சாப்பாடு விஷயத்தில் கவலை இருக்காது. அலுவலக நேரம் போக, படுத்துகிற மின்வெட்டில் சமைப்பது என்பது பெரிய சவாலாக இருக்கிறது. இங்கு வெளியிலும் சாப்பிட முடியாது. மீதி இருக்கிற நேரம்தான் மற்றவற்றிற்கு!
தனிமையில் இருக்கும் இறுக்கமான சூழ்நிலையில் இணையத்தில் உலவுவதும், வாசிப்பதும், இப்படி பதிவுகளில் எழுதுவதும்தான் மன பாரத்தைக் குறைத்து சாதாரண மன நிலையில் இருக்க முடிகிறது. இப்படி என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் சாதாரண தலைப்புகளுக்கு வாசகர்கள் வருவதில்லை என்பது கண்கூடு. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாய் பலராலும் அறியப்படும் நபராக ஆவதில் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். என் நண்பர்களுக்கு நான் எழுதும் கடிதங்கள் குறைந்தது பத்து பக்கமாவது இருக்கும். அந்த நண்பர்கள் இப்போது தொடர்பற்ற எல்லையில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அந்தக் கடிதங்கள் எனக்கு கிடைக்குமானால் பத்தாண்டுகளுக்கு முன்பான எனது கருத்துக்களை இந்த வலைப்பதிவில் சேமிக்க வசதியாக இருக்கும்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

விஸ்வா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

Unknown சொன்னது… [Reply]

நேரமில்லை என்று சொல்லிவிட்டு ,படிப்பதற்கு எங்களுக்கு நேரம் போதாது என்ற அளவுக்கு அறிவுபூர்வமாக நீங்கள் நீளமாக எழுதியதை படிக்க வைப்பதில் ஜெயித்து விட்டீர்கள்!
இந்தப் பதிவுக்கே ..தாமினி மீண்டு வருவாளா சேரனிடம் ?என்று தலைப்பு கொடுத்து இருந்தால் நிறைய பேர் வந்து படித்து இருப்பார்கள் !சக பதிவர் என்கிற முறையில் உங்கள் ஆதங்கம் புரிகிறது !

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

பகவான்ஜி! முதன்முறையாக எனது தளத்திற்கு வந்து மிக உற்சாகமான 'டானிக்' கொடுத்திருக்கிறீர்கள். உங்களின் கருத்தைப் படித்து நான் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தேன். நல்ல யோசனை... அப்போது எனக்கு ஞாபகம் வரவில்லை, 'தாமினி மீண்டு வருவாளா சேரனிடம்' என்ற தலைப்பைத்தான் சொல்கிறேன். இந்த உற்சாகத்திலேயே மீண்டும் எழுத ஆரம்பிப்பேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!