வியாழன், 18 ஜூலை, 2013

கவிஞர் வாலி – எம்.ஜி.ஆர். ஒரு தீர்க்கதரிசி!



(அமரர் கவிஞர் வாலிக்கு அஞ்சலி)


தனிப்பாடல்களாயினும் சரி, திரைப்படப் பாடல்களானாலும் சரி… அவைகளில், அறிந்தோ அறியாமலோ, அறச்சொற்கள் அமைந்துவிடில், பைந்தமிழ் பாடிய புலவனின் வாக்கு பலித்துவிடும் என்பது நெடுங்காலமாக நிலவி வருகின்ற நம்பிக்கையாகும்.

சிலேடைப் பெருங்கவிஞன் காளமேகம் சினங்கொண்டு அறம்பாடிய சேதிகள் ஏராளம் உண்டு. தொண்டை மண்டலத்து மாமன்னன் காளிங்கராயனின் பட்டத்துப் புரவியை – பொய்யாமொழி என்னும் புலவன் அறம்பாடி வீழ்த்திய வரலாறு பழந்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.

தன் மகன் அம்பிகாபதியின் தலை வாங்கிய காரணத்திற்காக, தயரதனுக்கு நிகரான துயரத்தை அடைந்த கம்பநாடன்---------- சோழ குலமே பூண்டற்றுப் போகவேண்டி, அறம் பாடியதாகவும், அதன் காரணமாக மண்மாரி பொழிந்ததாகவும், அந்த இடமே இன்றும் தஞ்சை மாவட்டத்தில் ‘மணல்மேடு’ என்னும் ஊராக திகழ்கிறது என்பதாகவும், கர்ண பரம்பரைக் கதைகள் பேசுகின்றன.

இசைபாடி எவரையும் வாழ்த்துதல் அல்லாது --- வசைபாடி வீழ்த்துதல் தமிழுக்குத் தகாது என்று சான்றோரும் ஆன்றோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான்.

எனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பெரிதும் காரணமாய்த் திகழ்ந்த பொன்மனச் செம்மல் என்பால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அன்பு பாராட்டி வரும் அருமை நண்பர் டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள.

நான் அவருக்காக எழுதும் பாடல்களில் அறச்சொற்கள் விழுந்துவிடாமல் என்னை எவ்வளவோ முறைகள் எச்சரித்திருக்கிறார்கள். அதை ஓர் அன்புக் கட்டளையாகவே ஏற்று நான் செயல்பட்டிருக்கிறேன்.

‘உங்க வாயால, நீங்க யாரையும் எந்த ஸ்தாபனத்தையும், வாழ்த்தித்தான் பாடணுமே தவிர – வசையாப் பாடிடக்கூடாது!’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மென்மையாக என்னிடம் எடுத்துச் சொன்னது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கிறது.

‘என் பாட்டுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதாக, நான் நினைக்கல்லே அண்ணே!’ என்று புன்னகைத்தவாறே நான் சொன்னபோதெல்லாம் கூட—
‘உங்க தமிழின் சக்தி எனக்குத் தெரியும்’ என்று பாசத்தோடு என் தோளில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.

வரும் பொருள் உரைக்கின்ற வல்லமை எனக்கிருப்பதாக, நான் என்றைக்குமே எண்ணுவதில்லை. அடுத்த வினாடியை, ஆண்டவன் தன் கைவசத்தில் வைத்திருக்கிறான் என்பதும் நான் அறியாததல்ல.

இருப்பினும் , என் பாடல்களோடு நான் சில நிகழ்ச்சிகளை சம்பந்தப்படுத்தி பார்க்கும்போது அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு தீர்க்கதரிசி என்பதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

‘நினைத்தேன் வந்தாய்; நூறு வயது’ என்ற பாடலை நான் காவல்காரன் படத்தின் பூஜை நாளன்று எழுதினேன். அந்தப் பாடலை நான் எழுதிய நாளில் எம்.ஜி.ஆர். முழு ஆரோக்கியத்தோடும், காலத்தை வென்ற இளமையோடும் இருந்தார்கள்.

ஆனால் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட பொழுது, எம்.ஜி.ஆர். அவர்கள் மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு வந்திருந்தார்கள்.

ஆம்! துப்பாக்கியால் சுடப்பட்ட துர்பாக்கிய நிகழ்ச்சிக்குப் பின் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட பாடல் காட்சி அதுதான்.

‘அண்ணே உங்க உடம்பு இப்ப பூரணமாகக் குணமாயிருக்கா? என்று அப்போது நான் அவரைக் கேட்டேன்.

‘நீங்கதான் எழுதிட்டீங்களே – நினைத்தேன் வந்தாய்; நூறு வயசு அப்படின்னு, என்று அவருக்கே உரித்தான புன்முறுவலோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னார்.

பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் நான் எம்.ஜி.ஆர். அவர்களோடு அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னேன்;

அண்ணே நீங்க தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டாலும் திண்டுக்கல் தேர்தல்லே மாயத்தேவர் ஜெயிச்சுட்டதாலே, மக்கள் உங்கள் பக்கம்தான் இருக்காங்கறது, இப்ப நாடு பூராப் பேச்மெபடியாப் போச்சு!’ என்று நான் சொன்னதற்கு, உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் –

‘நீங்கதான் அப்பவே எழுதிட்டீங்களே – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் – அப்படீன்னு! என்று மூன்றெழுத்துக்கு விளகமாக தி.மு.க.வைச் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள்.

எப்போதோ நான் ஒளிவிளக்கு படத்தில் எழுதிய – இறைவா! உன் மாளிகையில்…’ என்ற பாடல், இன்று எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் தேறுவதற்காக மக்களின் பிரார்த்தனைப் பாடலாக பயன்பட்டதை எண்ணி, நான் கற்ற தமிழுக்கு வணக்கம் சொல்லுகிறேன்.

அப்பல்லோ மருத்துவ மனையில் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அவர்களை நான் சந்தித்துப் பேசியபோது அம்மையார் சொன்னார்கள்.

‘வாலி! உங்க பாட்டுதான் இன்னிக்கு ஜனங்களெல்லாரும் பாடிப் பாடி, அந்தப் பிரார்த்தனை பலிக்க உங்க அண்ணன் ஆபத்திலிருந்து பிழைச்சிட்டாங்க…!

அம்மையாரின் இந்தப் பாராட்டுரையை விட, என்க்குப் பிறவிப் பயன் வேறென்ன வேண்டும்?

இவ்வளவு வாழ்த்துச் சொற்களை எழுதிய நான் கூட ஒரு முறை கவனப் பிசகாக ஒரு பாடல் எழுதப்போக – அதுவே அந்தப் படம் தாமதிக்கக் காரணமாகிவிட்டது.

தலைவன் என்ற படத்திற்காக பூஜை நாளன்று ஒரு பாடலை எழுதினேன்.
‘நீராழி மண்டபத்தில் – தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் – தலைவன் வராமல் காத்திருந்தாள்! – என்பதுதான் அந்தப் பாடல்.

எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவோ ஒத்துழைத்து நடித்தும் கூட, காரணகாரியமின்றி அந்தப் படம் நெடுநாட்கள் தாமதிக்கப்பட்டு பிறகு வெளியாயிற்று. அந்தப் படம் வெளிநான பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள், ‘வாலி! நீங்கதான் இந்தப் படம் தாமதாமானதற்குக் காரணம்! கவனிக்காம பாட்டுல ‘தலைவன் வராமல் காத்திருந்தாள்! அப்படின்னு எழுதிட்டீங்க! அந்த வரியில் அறம் விழுந்துடதால் தான் அந்தப் படம் இவ்வளவு நாள் தாமதப் பட்டது என்றார்கள்.

நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். ராமசாமி அவர்கள் பகுத்தறிவுப் புடம்போட்ட தங்கம் என்பது நாமும் இந்த நாடும் அறிந்த செய்தி. அவர் திரு.ஏ.எல்.எஸ். தயாரித்த ‘செந்தாமரை’ படத்தில் ஒரு பாடலைப் பாடினார்.
‘நான் பாடமாட்டேன்! இனி மேல் பாட மாட்டேன்!’ – என்று அவர் பாடிய இந்தப் பாடலுக்குப் பிறகு, திரைப்படங்களில் இறுதி வரை அவர் பாடவே இல்லை.

நமது பகுத்தறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள், நாம் ஜரணிக்க முடியாத உண்மைகளாக இருப்பது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நாளை பொழுதை
இறைவனுக்களித்து,
நடக்கும் வாழ்வில்
அமைதியைத்தேடு! 

என்னும் கண்ணதாசனின் வரிகளைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.
--------  கவிஞர் வாலி.

11 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது… [Reply]

டி ராஜேந்தர் எழுதிய நானொரு ராசியில்லா ராஜா என்ற பாட்டை சௌந்தர்ராஜன் பாடிய பிறகு அவருக்கு பாடல் சான்ஸ் இல்லாமலே போயிடுச்சாம், எப்பவும் அதை சொல்லி சொல்லி டி ராஜேந்தரை கரித்து கொட்டுவதாக சொல்வார்கள்....!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிகவும் சரி! நாஞ்சில் மனோ. இதையும் எழுதலாம் என்றிருந்தேன். பதிவின் நீளம் கருதிதி விட்டுவிட்டேன். இன்னும் சில உதாரணங்களும் உண்டு.
தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

ஜீரணிக்க முடியாத உண்மைகளுக்கு நன்றி...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

ஆழ்ந்த இரங்கல்கள்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஆம் தனபாலன்! இவர்கள் சிரஞ்சீவிகள். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

சசிகலா சொன்னது… [Reply]

தங்களை தொடர்பதிவு எழுதஅழைத்துள்ளேன். வருகை தரவும்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது… [Reply]


வணக்கம்!

வாலி வடித்த வரிகள் அனைத்தும்நற்
பாலின் சுவையைப் படைக்குமே! - வேலிபோல்
நின்று நெடுந்தமிழ் காத்த கவிஞரை
என்றுநாம் காண்போம் இனி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சசிகலா!

அழைப்பிற்கு மிக்க நன்றி சகோதரி! நான் தற்போது பணி நிமித்தமான பயணத்தில் இருக்கிறேன், நிச்சயம் எனது கருத்தை ஓரிரு தினங்களில் பகிர்வேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கி.பாரதிதாசன் கவிஞர்!

தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி!

தாரை கிட்டு சொன்னது… [Reply]

கவியரசு அவர்கள் தன் அண்ணன் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த போது ”அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்”என்று பாடினாராம்.சில நாட்களில் அந்தக் குழந்தை இறந்து விட்டதாம்.அதற்க்கு கவிஞர் “அறம் பாடிவிட்டேனோ” என்று வருந்திப் பாடினாராம்.தமிழில் ஒரு சொல் வெல்லும்,ஒரு சொல் கொல்லும் என்பார்கள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

இது புதிய தகவல் நண்பரே! தங்களின் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி!

RAMESH சொன்னது… [Reply]

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் - நாஞ்சில் மனோ அவர்கள் மேலே சொல்லியதுபோல் ஐயா பாடகர் திலகம் டி எம் எஸ் , டி ராஜேந்தரை ஒருநாளும் கரித்துக்கொட்டியதில்லை நடந்த உண்மையை இயல்பாக சொல்லுவார் அவ்வளவே மிகுந்த பண்பு கொண்ட மாமனிதர் டி எம் எஸ் அவர்கள் - ஒருதலை இராகம் படத்தில் ஐயா பாடிய இரன்டு பாடல்களும் அபசகுனப்பாடல்களே - நானொரு இராசியில்லா ராஜா , என்கதை முடியும் வேளையிது - ஐயா அவர்கள் எடுத்து சொல்லியும் டி ஆர் இல்லை அது பட நாயகனுக்கே என்று சமாதானம் சொல்லி வேறு வழியின்றி ஐயாவை பாடவைத்தார் . பாடலை கேட்ட குன்னக்குடி வைததியநாதன் ஐயாவை கண்டு என்ன ஐயா
நீங்கள் போய் இப்படி அபசகுனமாக பாடலாமா எனக்கு பிடிக்கலே என்று விட்டு போனாராம் இதுவும் டி எம் எஸ் அவர்களே சொன்னது. டி எம் எஸ் குரலை வேண்டாதவன் இசையை இரசிக்கத் தெரியாத அரைக்காதனே என்றால் மிகையில்லை . தமிழ் உலகுக்கு அவர் பாடாத நாளெல்லாம் குறை விழுந்த நாள்களே .

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!