வெள்ளி, 28 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா



பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. 

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன். 

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.



‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன். 

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன். 

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
               நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)


8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அது தான் தலைவர்...

நன்றி...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி தனபாலன்!

Jayadev Das சொன்னது… [Reply]

Good

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஜெயதேவ் தாஸ்!

பால கணேஷ் சொன்னது… [Reply]

சும்மாவா சொன்னாங்க பொன்மனச் செம்மல்ன்னு! அந்த குணம்தான் அவரை சிகரத்திலும் இன்று வரை மக்கள் மனதிலும் வைத்திருக்கிறது!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ்!

arul சொன்னது… [Reply]

thanks for sharing - people who worked hard know the hard work of others

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி அருள்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!