உங்கள் தந்தை ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்து, அரைகுறை ஆடைகளுடன் அல்லது கோவணத்துடன் நீங்கள் படிக்கும் பள்ளியில் சக மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பார்க்க உங்களிடம் வந்து பேசினால் உங்கள் நிலை என்னவாயிருக்கும்?
குடும்பத்தை நிர்வகிக்க வக்கில்லாமல், சம்பாதிக்க துப்பில்லாமல், உழைப்பதற்கு உடலை வளைக்காமல் வெட்டியாய் எத்தனை நாளைக்கு வீட்டில் உட்கார்ந்து சாப்பிட முடியும்? பாட்டன் சம்பாதித்த நிலத்தில் பாடுபட்டாலே போதும். ஆனால் எது தடுத்தது?
இன்றுவரை அதன் காரணம் தெரியவில்லை. ஆறு பிள்ளைகள் வரிசையாக. உடுக்க துணி இல்லை. வயிறார உண்ண உணவில்லை. படிக்க புத்தகங்கள் இல்லை. எதைப்பற்றியுமே கவலைப்படாமல் ஒரு மனிதரால் இருக்க முடியுமா என்ன?
வீட்டில் எந்த நேரமும் சதா சண்டை. மனைவியைப் போட்டு அடித்தல், தடுக்கப்போகும் பிள்ளைகளுக்கும் அடி. இரவிலே வயலுக்கு நீர்பாய்ச்ச செல்லவேண்டியிருந்தால் சின்னஞ்சிறு பிள்ளைகளை துணைக்கு அழைத்துப் போவது! வர மறுத்தால் அடி. அப்படியே தனியே போனாலும் கதவை வெளிப்புறம் பூட்டிவிட்டுப் போவது! இரவில் சிறுநீர் கழிக்க அவஸ்தைப்பட்ட குடும்பத்துக்கு விடிவுகாலம்?
எப்படியோ மனம் வந்து வாங்கிக்கொடுத்த புதுச்செருப்பை பள்ளியில் யாரோ ஒருவனிடம் திருட்டு கொடுத்துவிட்டு வீட்டிற்கு பயந்து பயந்து போய் நிலைமையைச் சொல்லியும், தலைகீழாய் கட்டிவைத்து அடித்த கொடுமையும் உங்களில் யாருக்காவது நடந்தது உண்டா?
தினமும் அடி உதைகளுக்கிடையே ஒவ்வொரு வேளையும் பிள்ளைகளின் பசி போக்க எப்படியோ சமாளித்து, நாள் முழுக்கவேலை செய்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய தாயின் தியாகத்தை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
இருக்கலாம்! நிறைய இருக்கலாம். பொறுப்பற்ற ஆண்வர்க்கத்தினால் சீரழிந்து போன குடும்பங்கள் எத்தனையோ இருக்கலாம். குழந்தைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய கடமையிலிருந்து ஆண்வர்கம் விலகிப்போனால் அந்தக் குடும்பத் தலைவி படும்பாட்டை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்களா? பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா?
இன்னும் நிறைய சொல்ல்லாம். இதையெல்லாம் அனுபவித்தவன் நான்தான். உயிரோடு எதற்கு செத்துத் தொலைத்தாலே நிம்மதி என்று ஒட்டு மொத்த குடும்பமே நினைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! மறைந்து போனவர்கள் பற்றி தவறாகப் பேசக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் என்னால் தவிர்க்க முடியவில்லை. என் தாய்க்குத் தெரிந்தால் தடுப்பாரோ என்னவோ!?
தந்தைப் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தோம் நானும் என் சகோதரர்களும். 'அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு', ஆனால் எங்களுக்கு....? படிப்பைக்கூட பள்ளிக்கூட வாழ்க்கைக்கு மேல் தொடர முடியவில்லை. உறவுகள் எல்லாம் எள்ளி நகையாட எப்படியெல்லாமோ துன்பங்களை அனுபவித்தோம். சந்தோஷமான குடும்பங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்க்கமும் பொறாமையும் மேலோங்கும்.
தந்தைப் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தோம் நானும் என் சகோதரர்களும். 'அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு', ஆனால் எங்களுக்கு....? படிப்பைக்கூட பள்ளிக்கூட வாழ்க்கைக்கு மேல் தொடர முடியவில்லை. உறவுகள் எல்லாம் எள்ளி நகையாட எப்படியெல்லாமோ துன்பங்களை அனுபவித்தோம். சந்தோஷமான குடும்பங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்க்கமும் பொறாமையும் மேலோங்கும்.
கையில் காசுத்தட்டுப்பாடு வரும்போதேல்லாம் வீட்டிலுள்ள எதையாவது விற்பது... வீடுகட்ட சொந்த நிலத்தில் செங்கல் சூளைபோட்டு வைத்திருக்க, அதையெல்லாம் விற்று ராஜவாழ்க்கை. காலையில் டவுனுக்குப் பொனால் சிற்றுண்டி பிறகு ஒரு சினிமா, பின் மதிய உணவு அப்புறம் ஒரு சினிமா, இரவு சாப்பாட்டையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நிம்மதியான உறக்கம்.
எங்களைப்ற்றி கிஞ்சித்தும் கவலையே படாத மனிதரை எப்படி தந்தை என்று அழைப்பது? எதுவுமே முடியாத போது கடைசியாய் அகப்பட்டதுதான் மனநிலை பாதித்தவர் வேடம். எங்கள் குடும்பத்திற்கு மட்டும்தான் அவரின் வேடம் தெரியும். ஆனால் ஊரிலோ மற்றவர்களுக்கோ அவர் மனநிலை பிறழ்ந்தவர். கொஞ்சநாள் சாமியார் வேடமும்!
ஊர் ஊராக சுற்றி, தெரிந்தவர்களிடத்தெல்லாம் பிச்சை கேட்டு, வீட்டு சாப்பாட்டில் விஷம் இருக்கிறதென்று மறுத்து, முடியாது போனபோது ஒடுங்கி தனியான ஒரு இடத்தில் அடங்கி கொடுப்பதைத் தின்று அப்படியே செத்தும் போனார். அந்த நிலைமையில் என் தாய் எங்களை வளர்க்க பட்டபாடு சொல்லிமாளாது. ஊர் உறவுகளுக்கு மத்தியில் நாங்கள் பட்ட வேதனையும் அவமானமும் அளவிடற்கரியது.
எல்லாம் ஆழ்மனதில் அமிழ்ந்து போன நிலையில், இந்த நினைவுகள் எல்லாம் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’யைப் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது. ‘அழகி’யிலிருந்து தங்கர்பச்சானின் ரசிகனாகிவிட்டபடியால் இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு சாராசரி குடும்ப வாழ்க்கையை எதார்த்தமாகக் காட்டியிருந்தார் தங்கர்பச்சான்.
எக்குதப்பாக நடந்து கொள்வதும், பிறகு மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதையும் அச்சு அசலாக பொருத்தமாக செய்திருக்கிறார் தங்கர். அதிலும், "உள்ளே வா" என்று ஒரு வார்த்தை சொல்ல மறுக்கும் மனைவியை கெஞ்சுவதும், அப்பா மாமனார் என்று முக்கிய உறவுகளாவது தன்னை குடும்பத்தோடு சேர்த்து வைக்காதா என்று கதறுவதுமாக மனசுக்குள் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் தங்கர். சன்யாச வாழ்க்கையில் குடும்பத்தையும், குடும்ப வாழ்க்கையில் சன்னியாசத்தையும் நினைத்து அவர் தடுமாறுவது இயல்பான சித்தரிப்பு.
தங்கரின் மனைவியாக நவ்யா. இந்த உயிரோட்டமுள்ள வேடத்திற்காக தன்னையே அற்பணித்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. குழந்தைகளின் உண்டியலை கூட விட்டு வைக்காமல் திருடிச்செல்லும் தங்கரை நினைத்து குமுறி, வீட்டில் உள்ள சாமி படங்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து சாமியாடுகிறாரே... பின்-டிராப் சைலண்டில் திகைத்து போனது நான் மட்டுமல்ல தியேட்டரில் இருந்த அத்தனை ஜனங்களுமே!
8 கருத்துகள்:
என்ன ஆச்சர்யம்,மூன்று தினங்களுக்கு முன்னால் தான் இந்த படத்தை இரெண்டாவது முறையாக
பார்த்தேன்.முதல் முறை , படம் வந்த புதிதில் பார்த்தது. சமீபத்தில், இப்படத்தின் ஒரிஜினல் வீ சீ டி,
சகாய விலைக்கு கிடைக்க,இன்னொருமுறை பார்க்கலாம் என்று வாங்கி பார்த்தேன். உண்மையில்
மிகவும் நல்ல படம். இந்தபடத்தில் நடிக்க வேறு யாரும் முன்வராததால் இயக்குனரே நடித்ததாக
அப்போது கேள்விப்பட்ட நியாபகம். எனக்கு இந்த இயக்குனரின் 'ஒன்பது ருபாய் நோட்டு' கூட பிடித்திருந்தது. கதாநாயகி நல்ல நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
முதன் முறையாக இங்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி இளையதாசன். நானும் படம் வந்த புதிதில் பார்த்ததுதான். அதனால்தான் சொந்தமாக விமர்சனம் எழுத முடியவில்லை. நம்ம வீட்டுப் பெண் போன்ற நவ்யாவின் தோற்றம் கூட இந்தப்படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்தான் இல்லையா நண்பரே!
நல்ல பகிர்வு.
மல்லாட்டை மக்களின் உணர்ச்சிகளை இயல்பாக திரையில் கொணர்வது அவரது சிறப்பு!
வருகைக்கும், தங்களின் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி கோகுல்!
நல்ல பதிவு நண்பா.. விரிவான கருத்துக்களோடு மாலை வருகிறேன்
வருகைக்கு நன்றி நண்பா! மீண்டும் வாருங்கள், உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்!
nanri..this is a well internalised tamil film..
please also see its Malayaalam original "chintaavishtayaaya shyaamala" with srinivasan and Sangitha...thanks.
puduvai siva
வருக அனானி! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!