ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

நண்பனே... எனது உயிர் நண்பனே...!




தகவல் தொழில்நுட்பம் மின்னஞ்சல், கைத்தொலைபேசி என முன்னேறிவிட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தோடு அந்தக் கடித காலகட்டத்தை ஒப்பிடவே முடியாது. கடிதத்தை ஒட்டி அனுப்பிவிட்டு, ஐயோ அதை மறந்துவிட்டோமே... என்று நினைத்து உபரியாக அஞ்சலட்டையை அனுப்பிய காலமெங்கே?.... நிமிடத்தில் கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் இந்தக்காலமெங்கே? இது வரமா? சாபமா?

நண்பர்கள் நாள் முழுவதும் அலுக்காமல் இப்போது பேசுவதைப் போலத்தான், அப்போது பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவோம். ஏனோ அலுப்பதேயில்லை. கடிதம் எழுதிவிட்டு பதிலுக்காக காத்திருப்பதும் அலாதியான அனுபவம்!

ஆரம்பப்பள்ளியிலிருந்து பள்ளியிறுதிவரை என்னோடு படித்த நண்பர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் பெயர் வெங்கடேசன், இன்னொருவர் பெயர் இரமேஷ். ஏற்கனவே ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அது தாண்டவமூர்த்தி!


வெங்கடேசன் எனக்கெழுதிய இரண்டு சிறிய கடிதங்கள் இங்கே;-               
                                                                           ஓம் முருகன் துனை
 
அன்புள்ள நண்பன் கவிப்ரியனுக்கு, உன் அன்பை என்றும் மறவாத நண்பன் இர.வெங்கடேசன் எழுதும் கடிதம், என்னவென்றால் நான் இங்கு நலம். அதுபோல் உன் நலனையும், உன் குடும்பத்தினர் நலனையும் அறிய ஆவல்.

தவிர, நீ 14.12.89 அன்று எழுதிய கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். படித்து அனைத்து செய்திகளையும் அறிந்தேன். முதலில் 'உனக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலையில்' என்ற வரியை படித்தவுடன் உனக்கு திருமணம் ஆகிவிட்டதோ என்று எண்ணி வியந்தேன். பின் தொடர்ந்த உன் வரிகளைக் கண்டவுடன்தான் தெரிந்தது 'சுயதொழில்' துவக்க நாள் என்பது!

ரமேஷ் வீவு வந்துள்ளதாக எழுதியிருந்தாய். அவனை கேட்டதாக சொல்லவும். தவிர தற்போது தொழில் எந்த நிலையில் செயல்படுகிறது (இயங்குகிறது) என்று தெரியப்படுத்தவும்.

நான் பொங்கலுக்கு விடுமுறையில் வரலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன். எனினும் கண்டிப்பாக சொல்ல முடியாது. என்னுடைய திருமணம் இப்போது கிடையாது. இன்னும் ஒரு சில முக்கிய பணிகளை முடித்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ளலாம் என இருக்கிறேன்.

எப்போது பார்த்தாலும் என் திருமணத்தைப் பற்றியே கேட்டு எழுதுகிறாய்? நீ எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்? இதுவரைதான் வேலை கிடைக்கவில்லை என்பது பிரச்னையாக இருந்தது. இப்போது சுயதொழில் துவங்கிவிட்டாயே, இனிமேலும் அதை காரணமாக தெரிவிக்கமாட்டாய் என நினைக்கிறேன்.

எனவே, உன் திருமண தேதியை அடுத்த கடிதத்தில் மறக்காமல் எழுதி அனுப்பவும். ஊரில் ஏதாவது முக்கிய விஷயம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

இதுதான் சங்கதி, உடனே பதில் போடவும்!

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
இர.வெங்கடேசன்.
30.12.1989

FAIZABAD


அன்புள்ள நண்பன் கவிப்ரியனுக்கு, உன் அன்பை என்றும் மறவாத நண்பன் இரா.வெங்கடேசன் எழுதும் கடிதம், யாதெனில் நான் இங்கு நலம். அதுபோல் அங்கு உன் நலனையும் உன் மனைவி மற்றும் குழந்தையின் நலனையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

உன் கடிதம் கிடைத்தது. படித்து அனைத்து செய்திகளையும் அறிந்தேன். நீ இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பதை தெரியப்படுத்தவும். உன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளாய்? இப்போது நான்கு காலில் நடக்கும் என நினைக்கிறேன்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் உன் மனைவியையும், குழந்தையையும் நல்லமுறையில் பார்த்துக்கொள்ளவும். பொங்கல் நல்லமுறையில் கொண்டாடி இருப்பாய் என நினைக்கிறேன். பாபுவிடமிருந்து கடிதம் வருகிறதா? பொங்கலுக்கு லீவு வய்தானா?

அம்மா, தம்பிகள், தங்கை அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். நிலத்தில் என்ன பயிர் செய்துள்ளாய்? அடிக்கடி கடிதம் எழுதவும். மறக்கவேண்டாம். வருடத்திற்கு ஒரு லட்டர் எழுதுகின்றாய், ஏனோ தெரியவில்லை!

இப்படிக்கு,
இரா.வெங்கடேசன்.
27.01.1995


திங்கள், 20 ஆகஸ்ட், 2012

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்தர தினம்!

                          
                                 அனைவருக்கும் சுதந்தரதின நல்வாழ்த்துக்கள்!

சென்ற ஆண்டு இதே நாளில்தான் நான் இந்த வலைப்பதிவை எழுத்தொடங்கினேன். ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட108 இடுகைகளுடன் 25,000 பக்கப் பார்வைகளோடு தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இடையிடையே நேரமில்லாத காரணத்தால் சிறிது இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து வலைப்பதிவை எழுதும் எண்ணத்தில்தான் இருக்கிறேன். கடிதங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்றாலும் நாட்டு நடப்புகளையும் அலச எண்ணமிருந்தது. ஆனால் நேரமின்மையால் காலம் கடந்து பழைய செய்தியாகிவிடுகிறபோது எழுத உற்சாகம் இல்லாமற் போகிறது.

ஆரம்ப  காலத்தில் உற்சாகம் கொடுத்த நண்பர்கள் இப்போது இல்லை என்றாலும் பல புதிய நட்புகளும் அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்ற போதிலும் பல பதிவர்களைப்போல தொடர்ந்து இடுகைகளை எழுதமுடியாமலும், மற்ற பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடமுடியாமல் போகும்போதும் மனம் வருந்தவே செய்கிறது. ஆனாலும் என் இருப்பைக் காட்டிக் கொள்ள பதிவுலகத்தை ஒரு கருவியாகவே பாவிக்கறேன் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

சுதந்தரதினம் எப்போதும் போலவே ஒரு சம்பிரதாயமாக நடந்தேறிவிட்டது. தேசிய உணர்வுகள் மங்கிப்போய்விட்ட இந்த நாளில் இது  ஒரு ஞாபகமூட்டும் தினம் அவ்வளவே! எப்போது மாறும் நம் மனோநிலை? ஏக்கமாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.

அன்புடன்,

திரும்பி வா!



கொஞ்சம் கவனி!
கொடுத்த வாக்கைக்
காப்பாற்றுவதற்காய் மட்டும்
என்னிடம் வராதே!
புதிய உறவுகளின்
மோகத்தில்
களைப்படையும் போது
இளைப்பாறும் நிழலுக்காக
என்னிடம் வராதே!
ஒவ்வொரு விடியலையும்
ஒரு நதியாக மாற்று
தாகம் தீரும்வரை
மூழ்கி எழு!
என் காதல் ஒருபோதும்
உன்னைக் குற்றப்படுத்தாது-ஆனால்
உன்னுள் இருக்கும்
அன்புச்சுடர்
ஒரு தீப்பிழம்பாகி
என்று உன்னைச் சுடுமோ
உன் உயிர் அணுக்கள்
என்று என்னை
எண்ணி ஏங்கி அழுமோ
அன்று
அவசியம் என்னிடம்
திரும்பி வந்துவிடு!

சனி, 11 ஆகஸ்ட், 2012

பரிதாபத்துக்குரிய ஏழை யார்?





உறவை விட நட்பு உயர்ந்தது. ஏனெனில் உறவு நம்மீது திணிக்கப்படுவது. நட்போ நாமே விரும்பி தேர்ந்தெடுப்பது. மேலும் ரத்தம் உத்தரவாதமான பசை அல்ல. அது ஒட்டினாலும் ஒட்டும். ஒட்டாமலும் போகும்.

நட்பு நல்ல சிமென்ட்டைப் போன்றது. அது நாளுக்கு நாள் இறுகுகிறது.

காதலைவிட நட்பு உயர்ந்தது. ஏனெனில் காதலில் பாலுணர்வு தேவை என்ற சுயநலமும் கலந்திருக்கிறது. காதல் மனிதக் கையைப் போன்றது. அது கொடுக்கவும் செய்யும், வாங்கவும் செய்யும். நட்பு மரத்தின் கையைப் போன்றது. அதற்குக் கொடுக்கத்தான் தெரியும்.

காதல் எதிர்த் துருவங்களின் ஈர்ப்பு. நட்போ ஒத்த ஸ்வரங்களின் கூட்டிசை. நல்லவர்களின் நட்பு நல்ல நூலைப் போன்றது என்கிறார் வள்ளுவர். நல்ல நூல் படிக்கப் படிக்க இன்பம் தருகிறது. நல்லவர்கள் நட்பும் பழகப் பழக இன்பம் தருகிறது.

நல்ல நூல் அறிவூட்டுகிறது; வழிகாட்டுகிறது. நல்லவர்கள் நட்பும் அப்படித்தான். நல்ல நூல் எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை. நல்லவர்கள் நட்பும் எத்தனை நாள் பழகினாலும் சலிப்பதில்லை.

சிரித்து மகிழ்வதற்கல்ல நட்பு. தவறு செய்யும்போது தயங்காமல் கண்டிப்பதுதான் உண்மையான நட்பு என்கிறார் வள்ளுவர்.

நல்ல நண்பன் கண்ணாடியைப் போன்றவன். கண்ணாடி முகஸ்துதி செய்வதில்லை. நம் முகத்தை அப்படியே காட்டுகிறது. அதில் அழுக்கிருந்தால் அதையும் மறைக்காமல் காட்டுகிறது. கண்ணாடி நம்மை நாமே திருத்திக்கொள்ள உதவுகிறது.
நல்ல நண்பன் கையைப் போன்றவன் என்கிறார் வள்ளுவர். நான்கு பேர் நடுவே நம் ஆடை நழுவும்போது கை விரைந்து சென்று ஆடையைத் தாங்கி மானத்தைக் காக்கிறது. அல்லது ஆடை நழுவி விழுந்துவிட்டால் கையே ஆடையாகி மானம் காக்கிறது.

‘மானம் காக்க வா என்ற அழைப்பைக் கேட்டுக் கை செல்லுவதில்லை. அழைப்பில்லாமலேயே தானே சென்று உதவுகிறது. அழைக்காமலேயே தக்க சமயத்தில் விரைந்து வந்து உதவுபவன்தான் உண்மையான நண்பன்.

துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கிறது என்கிறார் வள்ளுவர். உண்மையான நண்பர்கள் யார் என்பதை அளந்து பார்க்க அதுதான் உதவுகிறது. போலி நண்பர்கள் நம் நிழல் போன்றவர்கள். நம் நிழல் வெளிச்சத்தில் நம்மை விட்டு நீங்காது பின்தொடர்ந்து வருகிறது. இருள் வரும்போது மறைந்து போகிறது. மேலும் நம் நிழலில் நாம் இளைப்பாற முடியாது.

உயிர் நண்பன் என்கிறோமே, அது சரியான உவமை அல்ல. உடல் நன்றாக இருக்கும்போது கூடவே இருந்து அனுபவித்துவிட்டு, உடல் பாதிக்கபடும்போது சொல்லாமல் கொள்ளாமல் நழுவி ஓடுவதுதான் உயிரின் இயல்பு. எனவே போலி நண்பனைத்தான் உயிர் போன்றவன் என்று சொல்ல வேண்டும்.

நல்ல நண்பன் சுமைதாங்கியாக இருக்கிறான். நம் கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக இருக்கிறான். அவன் வெயில் நேரத்தில் விசிறியாகவும், குளிர்காலத்தில் கணப்பானாகவும் இருக்கிறான்.

அரைத்த கைக்கு மணம் தரும் சந்தனம் போல, உதைத்த காலுக்கு செறுப்பாகிறவன்தான் நண்பன். பணங்களைச் சம்பாதிக்காதவன் ஏழை அல்ல. நட்பு மனங்களைச் சம்பாதிக்காதவன்தான் இந்த உலகத்தில் பரிதாபத்திற்குரிய ஏழை!

மனங்களை சம்பாதியுங்களில்................ அப்துல் ரகுமான்.